Friday, January 31, 2020

மனத்தின் குரல்கள்

திருக்குறளுக்கு ஆழ அகலமான ஓர் உரை செய்
என்றது மனத்தில் ஒரு குரல்
அரிஸ்டாட்டிலை முழுக்கவும் தமிழில் கொண்டுவா
என்றது ஒரு குரல் மனத்தில்
அயின்ராண்டின் தத்துவ நுணுக்கம் பற்றி விரிவாக எழுது என்றது மற்றும் ஒரு குரல்
வேத நூல்களில் ஆராய்ச்சியில் இறங்கு
கிரேக்கம் முதலிய உலக தத்துவப் பள்ளிகளை ஒப்பாய்வு செய்
உன்னுடைய தத்துவ இயல் நூலை எழுதிமுடி
இப்படி
இப்படி
இப்படி
...............
குரல்களின் தொல்லை அதிகமாகவே...
எப்படா வெயில் சாயும் என்று பார்த்து
வெளியில் நடக்கப் போய்விட்டேன்
நிம்மதி
அலுக்கச் சலிக்க நடந்துவந்துவிட்டால்
இரவு நன்கு தூங்கிவிடலாம்
இனிமேல் தொல்லை
நாளைக்குத் தானே
பார்த்துக் கொள்ளலாம்
இன்றைய பாடு இன்றைக்கு
இளமையில் என்னுடன் கோலி விளையாடிய
நண்பனை இன்று பார்த்தேன்
கவலையே இல்லாமல்
சிரித்துக் கொண்டிருந்தான்
நீ கொடுத்து வைக்கலையே ரங்கா!
பாரதியைப் படித்தாய்...
இப்படித்தான்..போ..
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Thursday, January 30, 2020

காளீ புகல் நீயே

கன்னித்தமிழ் மணக்க
காடுறையும் பூவிரியாள்
மன்னிநிதம் காக்கும்
மட்டுவார் குழலி
உன்னி உணர்ந்தோர்க்கு
உவட்டாத மாயத்தாள்
பன்னிநிதம் பயின்றாலும்
பேதைமையாய் நமை ஆக்கும்
விண்ணீல மேனியாள்
விரிகதிர் வார்குழலி
எண்ணுக்கும் எட்டா
எழில்பொங்கும் கண்ணோக்கில்
அழிப்பாளோ அளிப்பாளோ
அன்னையின் காலடியில்
அரண் தேடும் சேயன்றோ
விழிகாலும் அழல்காளீ
அழித்தாலும் நின்னடிகள்
அளித்தாலும் புகல்தாமே. 

*** 

Wednesday, January 29, 2020

அழகும் இன்பும்

விரிந்த இதழ் மணம் வீச
விரைநறுந்தேன் தான் பூசச்
சொரிந்தநகைப் பூவுதிர்த்துச்
சுகமஞ்சம் ஆக்கிவைத்தாய்

சுகமஞ்சக் கால்தாங்கும்
சொக்கணையில் சுரும்பாடும்
புகநாடும் அகவண்டு
பூவிரியத் தேனுண்டு

குகையெங்கும் கொள்ளையின்பப்
புதைபொருளாய்ப் பூரிக்கும்
மிகைநடுக்கும் உட்சுழலில்
அகப்பட்ட உயிர்தழைக்கும்

உயிர்தழையும் சேதியினை
ஊதிவரும் களிவண்டு
அயிர்க்கும் உளப்போதலர்த்தி
அடிக்காம்பில் தேன்சிலிர்க்கும்

தேன்சிட்டு தானழைக்க
வான் தொட்டு முத்தமிடும்
கானுக்குள் கன்னிமலை
கம்பலையில் களியாடும்

அம்பலத்தில் ஆடுகின்ற
ஆதிதாளம் அகத்தாழம்
செம்புலத்தில் பெயல்நாடிச்
சீவப்புலம் சிவிறியெழும்.

சுபமாய்ப் பிறந்த எழில்
சுந்தரமாய்த் தான் வளரும்
தவமாய்த் தன் வாழ்வாகித்
திசையெங்கும் நாடியெழும்.

***

Thursday, January 23, 2020

பெண் என்னும் பெருந்தகைக்கு

உன்னோடு நான் பிறந்தேன்
உன்னோடுதான் நான் திரிந்தேன்.
உன்னோடு விளையாடி
உன்னோடு போராடி
உன்னோடு மன்றாடி
உன்னோடுதான் வளைய வந்தேன்.
தம்பியாக உன்னுடன் நான்
பிடித்த அடங்களில்
நீதான் விட்டுக் கொடுத்தாய்.
நீயாக சில நேரம்
உனக்கு அழகு அதுதான் என்று
உற்றோரும் பெற்றோரும் உபதேசித்து 
வேண்டா வெறுப்பாய்ச்
சில நேரம்.
ஆனால் தம்பியாக நான் உனக்குச்
செய்திருக்க வேண்டிய சேவைகள்தாம் எத்துணை!
நானும் செய்யவில்லை.
நாலும் அறிந்து சூழ் மனிதர்
எவரும் அதுதான் எனக்கு அழகு
என்று உபதேசித்து உறுத்தவில்லை.
ஆண்பிள்ளையின் அழகு என்று
அனைவராலும் ரசிக்கப்பட்டது.
விரசம் என்ன என்றால்
நீயும் ரசித்தாய்
என் தம்பி ஒரு முரடனென்று.
பண்படுத்திப் படுத்திய
பண்பாட்டின் அனிச்சைவினை
அது என்று நீ அறிவாயோ
அறியேன் அறிதொறும் என்னை
நாணம் கவிகிறது.
அண்ணனாக உன்னை
ஏவிக் கூவி அடக்கி நியமித்து
அதிகாரம் செய்திருக்கிறேன்;
ஆனால் அண்ணனாக நான்
காட்ட வேண்டிய பாசம்?
அக்கறை என்ற பெயரில்
அத்தனையும் மிச்சமாகி
நிற்கிறது மோசம்.
என் அண்ணா என்னிடம்
எவ்வளவு பாசம் !
என்று நீ விதந்தோதும்
கணம் ஒன்றில்
தூக்குக் கயிற்றில்
தொங்குகிறது என் உள்ளம்.
கல்யாணமாகிப் போய்விட்ட
கண்மணிகளை இழந்து
பாசக் குருடாய்
அலைகிறது நெஞ்சம்.
அண்ணன் என்ற முகமூடி களைந்து
அலறுகிறது அன்பின் உயிர்;
தம்பி என்ற தகவிழந்து
புயல்பறவையாய்த்
தடுமாறி அழிகிறது ஏழைப் பாசம்;
அடுத்த வீட்டுத் தோழியாய்
எதிர் வீட்டு நண்பியாய்
ஒரு வகுப்புச் சகியாய்
மேல் வகுப்புப் பாச தேவதையாய்
நீ வந்த போதெல்லாம்
நான் என்னை மட்டுமே
கண்டு கொண்டிருந்தேன்;
என் ஆண் அகங்காரத்தின்
உத்யான வனமாய் உன்னைக் கருதிய
என் பிழைக்கே உன்மத்தமானேன்.
அப்பொழுது எல்லாம்
உவந்து உவந்து நீ எனக்கு
உணர்த்திய குறிப்பையெல்லாம்
என் மமகாரத்தின் முற்றத்தில்
நீ ஆடிய நடனம் எனக் களித்தேன்.
தாயாகி நீ வந்த போது
தனயனாகிச் செல்வனாகித் திமிர்ந்தேன்;
பாட்டியாகி நீ வருங்கால்
என் படாடோபத்தின் பாசறை
என மகிழ்ந்தேன்;
ஆனால் என் போலித்தனம் எல்லாம்
கருகிப் போய்ச்
சுய உணர்வின் மின் தந்தியில்
அடிபட்ட இளம் புள்ளாய்
இருட்டில் சொட்டும்
பனிமழைக்கு நடுங்கி மாயும்
என் முன்னர் 
தெய்வமாகி
வந்து விடாதே!
பெண்ணே! 
இப்படிக்கு இந்த வேதனையுடன்
இறக்க விரும்பும்
ஓர் மனித உயிர். 

***