Saturday, November 18, 2017

சர்க்கரை போடாத தேநீர்

சர்க்கரை போடாத தேநீர் 
நன்றாகத்தான் இருக்கிறது. 
ஏதோ அதன் புண்ணியத்தில் 
ஓர் எண்ணம் நிச்சயப்பட்டு எழுந்தது. 
நாம் உண்மையில் வாழவில்லை.
இது வாழ்க்கையில்லை.
பிணத்தைக் குதிரையேறிச் சவாரி செய்து கொண்டிருக்கிறோம்.
இந்த உடலையே நாம் என்று எண்ணித் தூக்கிச் சுமக்கிறோம்.
இடுகாட்டிற்குச் சற்று நேரம் முன்வரையில்.
என்று பிணத்தை நாமாக மயங்கிய 
இந்தச் சவாரியை நிறுத்துகிறோமோ
குறைந்தபட்சம் இந்த உடல் இது நாம் இல்லை
என்றாவது ரோசம் வந்து 
மனத்தால் இதனோடு படுத்துப் புரள்வதை
வெட்டிவிடுகிறோமோ அன்றுதான்
நாம் நம் உண்மை இயல்பு என்ன என்று உணரத் தொடங்குகிறோம்
அன்றே உண்மையான நித்திய வாழ்க்கையும் ஆரம்பம். 

பிணத்தொடு கூடிப் பிணக்கென வாடி
இணங்கும் இதுவோ இயல்பு - சுணக்கறத்
தேகம்நான் என்ற நசையறத் தானுணர்தல்
ஏகவாழ் வாகும் இயல்.


***

அன்னையே அடைக்கலம்

அன்னையே
எனை மறந்து உனை மறந்து
வினை கரந்த விழலாய்
வாழ்க்கை ஓய்வதற்கோ
தினம் விழித்து எழுந்து
அனம் உண்டு திரிந்து
பிணம் ஆகு முன்னே
நிணம் ஆடு பிரேதமாய்
குணம் பல துறந்து
மனம் பல பரந்து
முனம் கற்ற கல்வியும்
சினம் படக் கழிந்து
எனை உற்ற பேரெலாம்
என்னிவன் எனப்பழித்து
ஒருநாள் விழுந்திடவோ
ஒவ்வொரு நாளும்
எனை விழிக்க வைப்பையோ
அன்றியுன் உணர்வில்
செழிக்க வைப்பையோ
அனைத்தும் உன் பரமே
அன்னமாய்ப் பரத்தினில்
முன்னம் முகிழ் முதலே
என்றும் உன் அடைக்கலமே !


***



தேட்டம்

தேடிக்கொண்டு போனேன்
ஒவ்வொருவரும்
வாங்க இதுதான் இறுதிநிலை
எப்படியோ வந்து சேர்ந்துட்டீங்க
’அவருக்கு’ நன்றி சொல்லுங்க
என்றனர்
தேடிக்கொண்டு போனேன்
வருகையில் வாழ்த்தியவர்கள்
கிளம்பும் பொழுது
சபிக்கத் தொடங்கினார்கள்
கெட்டொழியும் வழி
என்று கடுகடுத்தார்கள்
அவரு எதுலயும் நிலையில்லாதவரு
சும்மா ஓடுகாலி
என்ன பிரயோசனம்
ஒரு இடத்துல நிலைச்சு நிக்கணும்
சும்மா தேடிக்கிட்டே இருந்தா...
தேடிக்கொண்டே போனேன்
திறக்கும் கதவுகள்
திறக்கா கதவுகள்
மூடும் கதவுகள்
முறைக்கும் கதவுகள்
எல்லாவற்றையும் தாண்டி
இறுதிநிலை இதுதான்
என்று எங்கும் ஏக்கக் குரல்
ஐயோ உயிரினமே
முடிவதற்குப் பெயர் தேட்டம் இல்லை
என்னும் முதல்பாடத்தை ஏன் நீ கற்கவில்லை
இறுதிநிலை என்பதெல்லாம்
தேட்டத்தை விட்டு
வியாபாரத்தில் இறங்கிய
சௌகரியங்கள் அன்றோ
ஆட்டம் முடிப்பதற்குப்
பேசிவைத்துக் காசுபார்க்கும்
விளையாட்டன்று
உயிரின் பயணம்
தொடர்வதற்குப் பெயர்தான் தேட்டம்
முடித்துக்கொள்வது
அவரவர் சௌகரியம்.


***



வாழ்வின் பொருள்

நீர் என்ற ஒன்று
இல்லாதாயின்
நிலம் காயும் 

நிலம் என்ற ஒன்று
காய்ந்தால் அந்த
வான் பெயுமோ? 

வான் என்ற ஒன்று
பாழே ஆயின்
அருள் எங்கே? 

அருள் என்ற ஒன்று
வறண்டதாயின்
வாழ்வெங்கே? 

வாழ்வென்ற ஒன்று
இல்லாதாயின்
உலகெங்கே? 

உலகென்ற ஒன்று
இருக்கும்வரையில்
விடையெங்கே? 

விடையென்ற ஒன்று
கிட்டும்வரையில்
தேட்டம் இங்கே 

தேட்டம் என்ற ஒன்று
தொடரும்வரையில்
பொருள் இங்கே. 

*** 

காலைப் புள்

காலையெழுந்ததும்
காதில் விழுந்தது
கிளையில் எங்கோ கூவும்புள் 

மாலைவரும்வரை
மனத்தில் நிற்கும்
மாயக்குரலொடு கூவும் புள் 

சோலைவெளியில்தான்
சொக்கிருட்டில் எங்கோ
சோம்பல் முறித்து அந்தப் புள் கூவும் 

பாலைவெயிலினிப்
பரிதவிக்கும் உயிர்
பக்குவமாகத் துயில்முறிக்கும் 

மூலைகிழக்கினில்
மூர்க்கமுடன் முந்தி
முனைந்துவரும் அந்தக் கதிரவனார் 

கோலெங்கும் ஓச்சிக்
காய்த்துவிட்டுக் கண்ணை
மேலைத் திசையினில் தாம் மூட 

மேலைவான்வெளி
எங்கெங்கோ திரிந்தபின்
கங்குல்வந்த கிளைப் புள்கூவும். 

*** 

பேருந்து

பேருந்து ஒன்று செல்கிறது
பயணத்தில் ஓர் உயிர்
பேருந்து ஒன்று செல்கிறது
நாறுகின்ற இடத்தில் வேண்டாத வேளையில்
பையப் பைய ஊர்கிறது
பேருந்து ஒன்று செல்கிறது
வேண்டும் பொழுதோ
விரைகமழ் மணக்கும் இடங்களில்
விரைந்து விரைந்து போகிறது
வேண்டுமென்றே செல்கிறது
வேண்டாதவற்றை நீட்டி
வேண்டும் அவற்றைக் குறுக்கிப்
பேருந்து ஒன்று செல்கிறது
போய்ப் பார்த்துச் சொல்ல என்று
பயணி எழுந்து போனால்
திறந்து அந்த ஓட்டுநர் காணச் சென்றால்
ஓட்டுநரே இல்லை அங்கே
ஓட்டுநரே இல்லாமல்
பேருந்து செல்கிறது
பதறிப் போய்த் திகிலடைந்து
கையுதறிக் காலுதறி ஒருவழியாய்
இருக்கை வந்து அமர்ந்தார்
ஓட்டுநர் இல்லாமல் ஓடும் பேருந்து
இறங்கவும் வழியில்லை
இறங்கவரும் காலம்வரை
மனத்தில் ஓர் கருத்து
இனி குற்றம் சொல்ல எவருமில்லை
வேண்டும் என்று செய்வாரும் இல்லை
விருப்பம் விரைகிறது
வேண்டாமை பைய ஊர்கிறது
நிம்மதியில் கண் ஆழ்ந்தார்
அமைதியில் தியானம் ஆழ்ந்தது
பார்த்தாலோ...
விருப்பங்கள் வெறுப்புகள் எல்லாம்
நரம்பு ஊர்வன பேருந்துகளில்
சென்றனைத்தும் கொள்முதலாய்க்
கணக்கிடும் தான் என்னும்
பயணிக்கும் ஆளான தன்னைத் தேடி
உள்ளே போனார்
ஒவ்வொரு மண்டலமாய்க் கடந்து போனார்
உள்ளிருக்கும் உயிர்க்கதவைத் தட்டித்
திறந்து காண....
பயணிக்கும் ஆள் என்று யாரும் இல்லை
விருப்பு வெறுப்பில் உழலுகின்ற
ஓர் ஆள் தேடி
உள்ளிருக்கும் காமிராவுள் எல்லாம் கண்டார்
ஓர் ஆள் இல்லை
காணவந்த தான் யார் என்றால்
என்ன இது... இருக்கின்ற இருக்கை விட்டு நகரவில்லை
பின்.. தேடுகின்ற தான் இல்லை
உள் இருக்கும் ஆள் இல்லை
ஓட்டுகின்ற ‘நர்’ இல்லை
பயணிக்கும் ஆள் கொண்டு
போகின்ற பேருந்து
பயணிக்கும் ஆளோ
நரம்புக் கொல்லையினில்
நட்டு வைத்த வைக்கோல் பொம்மை
.......................................
...அதிர்ச்சியெல்லாம் அடங்கிய பின்பு...
யாருக்கு என்று இல்லாமல்
அமைதி மட்டும் நிறைந்தது ஆங்கே
அன்பு மட்டும் கனிந்ததுவால் !


***
(அஜன் ப்ரம்மவம்ஸோ உரையில் கேட்ட கருத்து ஒன்றை விரித்து எழுதியது) 

செயலின் நன்மை

செய்த செயலின் விளைவிலிருந்து
யாரும் தப்புவதில்லை.
செயல் செயலின் விளைவுகள்
என்னும் சங்கிலி அறுபடாமல் சுழல்கிறது
ஐயோ என்று அழுபவர்
அழிவைப் பயிர் செய்யும் காலத்து
அகங்கார போதையில் எதையும் உணர்வது இல்லை;
ஆனால் எதைச் சொல்லி அழுதாலும்
வேடிக்கை பார்த்தபடியே வினைச் சுழலம்
சுழல்கிறது அதன் பார்க்கும் கண்கள்
பரிதாபப்பட அமைக்கப்படவில்லை.
யாரும் பார்க்கவில்லை என்று
தீமை புரியும் ஒருவரைப்
பஞ்ச பூதங்களும் பார்த்து நகைக்கின்றன.
வானில் ஈரம் இருக்கிறதா
காலத்திற்குக் கண் இருக்கிறதா
என்றெல்லாம் ஏங்கும் மனிதர்
முன்பு தீமை புரியும் காலத்தே
தம் கண்ணையும், நெஞ்சின் ஈரத்தையும்
எங்கே தொலைத்தனர் அகங்கார வெறியில்?
எங்கோ தொடக்கம் இந்த நெடுஞ்சாலை
எங்கோ போகிறது
எங்கு முடியும் என்று எவரே கண்டார்
தொடங்கும் முன்
முடிந்த பின்
என்ற நிலைகளைக்
கணக்கிட்டுப் பேசிக் காலம் போக்குவதற்குப் பதில்
இன்று இப்பொழுது இக்கணம்
செயலின் விதியை உணர்ந்து நின்றால்
நன்மையின் நனவில் அடங்கி நின்றால்
அவை அவை என்னவாய் இருந்தால் என்ன
நன்மைதான் விளையும் என்ற விதி
இன்றைய கணத்தில் சுழலும் அன்றோ!
அடக்கத்தின் அமைதி ஓரார்
அழிவிற்கே அடிமை பூண்டார்
திடமாகத் தொடரும் வினையின்
சுழன்றிடும் வட்டம் தாண்ட
அடம் பிடித்து ஏதோ செய்வார்
அம்மவோ கொடியவாறே! 

*** 

Friday, November 17, 2017

கனிந்தருள்வாள் காளீ

கனிந்தருள்வாள் காளி கலந்துள்ளம் அன்பால்
தினம்பாடி நாம்தொழுவோம் தாள்கள் - குணம்நாடிக்
குற்றம் விலக்கிக் குலசக்தி தாளிணையே
சுற்றமெனக் கொள்வோம் நனி. 


துவந்துவங்கள் என்னைத் தொடராமல் காப்பாள்
பவம்தீர்ப்பாள் பக்தி தருவாள் - திவம்தந்து
மன்னுயிரைப் பொன்னுயிராய் மீட்டே மரணமெனும்
சென்மநோய் தீர்க்கும் மருந்து. 


தானுக்குள் தானிருப்பாள் தாயவளே நற்புகலாம்
வானிலும் மண்ணிலும் காப்பு. 


அறிவு போல் தோன்றும் அறியாமை
அம்ம அம்ம ...
கொடிதிலும் கொடிது.
நாணமே மிஞ்சுகிறது என்னுள். 


இசைந்து பிரபஞ்சம் ஈன்றாள் இயன்ற
நசையால் நமக்காக வென்று. 

***

என்னதான் பேசினாலும்

என்னதான் பேசினாலும், சிந்திச்சாலும்
அன்றாட வாழ்க்கை நிமிஷத்திற்கு நிமிஷம்
வாய்க்கொப்புளித்தபடியே போகிறது.
நனவில் பேசுவதற்கும்
கனவுகளின் தன்மைக்கும்
சம்பந்தமே இல்லை. 

*** 

காலையில் தொடக்கம்

பத்தியில்லை நல்லறிவும் பக்குவமும் தானில்லை
புத்தியில்லைப் பூரணத்தை நாடிடவே - எத்திக்கும்
தான்பறந்து தானோய்ந்து தன்னிடமே மன்னுகின்ற
ஊன்தோயும் ஓர்புள்ளோ நான். 

காலையில் பொழுதுவிடிந்தும் தூங்கிவிட்டு, 
மெள்ள எழுந்து,
கொஞ்சமாக வெட்கத்தோடு 
பகவந் நாமாவைச் சொல்லிவிட்டுக் 
காலைத் தயார்களை முடித்து, 
ஒரு டீயோ, காப்பியோ சாப்பிடும் பொழுது
பார்க்கும் சூரிய வெளிச்சம் .... 
ஒரு தனி...உவகைதான். 
இந்தச் சொர்க்கம் மட்டும் 
எனக்கு நிரந்தரமாக்கு கடவுளே ! 
வாக்கும் மனமும் விளங்கும் செயலுமே
ஆக்கம் சிறக்கும் அருளும் பூக்கும்
கணபதியைக் கும்பிட்டக் கால். 

*** 

வெண்ணை திருடி

உதையென்றார் ஓர்புலவர் உன்னதமாம் என்றே
அதையொப்பித் தாம்மகிழ்வார் ஆங்கே - கதையில்சீர்க்
கண்ணனுக்கே இவ்வகைக் காலித் தனமெல்லாம் 
உண்டாகு மென்றே யுணர்.
*
உதைவாங்கும் ஓர்புலவர் உள்ளத்து தைத்தே
விதையாகி வந்தெழுந்த பாவாய்ச் - சுதையாகி
நின்றாலும் நீள்கழல் நீட்டி அளந்தாலும்
கன்றின்பின் போவான் கழல்.
*
முன்னந் தொழுது முயன்றீண்டு வந்திட்டுக்
கன்னத்தில் வாங்கக் கசக்குமோ - என்னப்பன்
கன்னமிட்டென் கள்ள உளத்தைக் களவாடிப்
பின்னுந்தன் பேர்பொறித்தக் கால்.
*
வாம்பரி யூரும் வலனது தேரினும்
தாம்பரி சென்றே தமிழுகப்பார் - ஆம்பரி
சேவஃ தான்ற சுகமது பூன்றநல்
பூவது பூரண மே.
*
வெண்ணை திருடி விளங்குபா வைதிருடி
வெண்பாவை ஏன்திருடான் சொல்.
***

சாய்வு நாற்காலித் தத்துவம்

சாய்வுநாற்காலி தத்துவம் என்பார்
தத்துவமே சாய்வுநாற்காலியோ?
பல மாற்றம், பல காரணம்
பல சூழல்கள், பல வேதனைகளில்
சிக்கித் தவிக்கும் உயிருக்கு
அக்கணத்தில் காக்கும் அது...!
காத்தபின் வேர்த்தமுகம்
வழித்தெடுக்க
வசதியான இருக்கைகள் பல..
ஆனால் சுழல்களின்
ஊமைக்கண்ணில்
காக்கின்ற அந்த ஒன்று! 
 
*** 

மண்ணுருண்டைத்தனம்

அன்று கொஞ்சம் அதிகமாகவே தூங்கி
அப்புறம் எழுந்து, தூய்மைகள், குளியல் எல்லாம் முடித்து
டீ போட்டுக் கொண்டு உட்கார்ந்து
எண்ணக் குமிழி எழுந்து படர்ந்து பெருக
சிறிது நேரம் அமர எண்ணி ... 
அமர்வதற்குள் வெளியில் பார்த்தால்
பட்டாடை உடுத்தி மக்களின் பரபரப்பு
என்ன ஏது என்று கேட்டால்
பக்கத்து வீட்டில் பெருமாள் வந்திருக்கிறார்
நீங்க சேவிக்க வரவில்லை? 
சமையலறைக் கதவைத் திறந்து
அந்தப் பக்கம் பார்க்கலாம் என்றால்
அலுங்காமல் நலுங்காமல்
அத்தனை பீடும் திகழ
ரங்கன்
என்னடா சோம்பேறி என்று என்னைக்
கேட்டபடி .....
ஒரு கணம் தூக்கிவாரித்தான் போட்டது..
அந்த ஆள் நிச்சயம் என்னை
வேவு பார்க்கத்தான் வந்திருக்க வேண்டும்
வேவு என்ன ..
என்றும் எப்பொழுதும்
பார்க்கத் தவறா ஓர் ஆள் ....
நிச்சயம் என்னோடு பழகுவது
அவனுக்குப் பிடித்திருக்கிறது போலும்
பலருக்கு என்னோடு பழகப்
பிடிக்கவில்லை என்பது வழக்கம்
ஆனால் இந்த ஆள் .. ஏன் ...
ஒரு வேளை புதிதோ...
போகப் போகச் சாயம்
வெளுக்கும் போலும்...
புதிதா....
என்றென்றிலாமல்
ஆதி முதல் வரும் நட்பு .. 
அந்த ஆளுக்கு நிச்சயம் என்னுடன்
பழகப் பிடித்திருக்கிறது
இல்லையென்றால்
நேரம் கெட்ட நேரத்திலெல்லாம்
ஆளை எழுப்பி
ஊரில் நாய்கூட நடமாடாத
காலத்தில் என்னை அழைத்து
அது என்ன ஒரு பாசமோ
பாவம்! என்ன ஒரு நேசம் ...
போதும் என்று சொல்ல
எனக்கும் தோன்றவில்லை
போக்கிரி என்று அவன் சொல்வது
காதுக்குக் கேட்கிறது
ஆனால் கண்ணில் தெரியவில்லை
காதுக்கா... ம் .. ம் கருத்தின் செவிக்கு ...
என்று வைத்துக்கொள்...

அன்று வந்ததும் டீயை ஒரு டம்ப்ளரில்
ஊற்றி அவனுக்கும் கொடுக்கும்
ஓர் உந்தல்...
நல்ல வேளை மண்ணுருண்டைத்தனம்
வந்து காப்பாற்றியது
’எல்லாம் நமக்கு அப்படித் தோன்றுகிறது..
யாரோ உபயம் போலிருக்கிறது
அதுதான் பெருமாள் அங்கு
எழுந்தருளியுள்ளார்... ’
மண்ணுருண்டைத்தனம் காப்பாற்றியது
இல்லையென்றால் ஓர் மெல்லிய சவ்வு
அறுந்தால் அவ்வளவுதான்
மனிதர் ஓவரா படிச்சு
மூளை கலங்கிட்டார் சார்
டம்ப்ளர்ல காப்பியை ஊற்றி
பெருமாளிடம் போய்க் குடி குடி .. என்று
சுத்தப் பைத்தியம் சார் ....
இப்படி தனியா விடக் கூடாது..
ஆமாம் பார்த்திருப்பாங்க ....
சனி எப்படி வைச்சு சமாளிக்கிறதுன்னு
தொரத்திவிட்ருப்பாங்க .... 
இந்த மாதிரியான பேச்சுகளுக்கு
இலக்காகி நகைச்சுவைக்கு விற்றுக்
கதை கந்தல்தான் ... 
’மண்ணை இருந்து துழாவி
வாமனன் மண் இது என்னும்....’

***

சிறு குழந்தை

சிறு குழந்தை
கரிய இருள்
கண் திறக்காத நிலை
அன்னையை எங்கோ
இருப்பதாய் முகர்வில்
தேடி அழும்
கை கால் பரவும்
இதற்கிடையில்
ஏதேனும் கவனம் ஈர்க்கும்
சிரிக்கும்
சலிக்கும்
மீண்டும் அழும்
எங்கோ இங்குதான்
அவள் இருக்கிறாள்
என எண்ணி
தான் கிடக்கும் விரிப்பின்
நுனியையே எடுத்துப் பற்றும்
இல்லையென உணர்ந்ததும்
வீறிடும்
பீதியில் கழியும்
விதி வழி படரும்
விரல் வழி ஒழுகும் எச்சில்
என் நிலை
என்றைக்குமாய்
இப்படியே இருப்பது
அழகா உனக்கு
அன்னையே! 

*** 

அன்னை மீது

நாடும் நகரமும் நன்மையுற் றோங்கிடவே
ஏடும் எழுத்தும் இவையளித்தாள் - சூடும்
பணிமுற்றப் பாரின் தரமுயர்ந்தே பூன்ற
குணமுற்றுக் கூடும் உயிர். 


உயிருள் உறவாகி ஒண்ணலத்தே உய்ப்பாய்
பயிலும் பரநலத்தின் போதம் - துயிலும்
பொருளில் கிளர்ந்து புலத்துயிராய்ப் போந்தே
அருளே அகிலமாதற் கே. 


தோமிழைத்தோ மந்த தொன்மைப் பேரொளியை
நாமறந்தோம் நன்மை தனையிழந்தோம் - சேமம்
ஒருநாளும் தான்மறவாள் ஓர்காப்பாய் நிற்பாள்
அருளுக்கே ஏது நிகர்? 


கலைமகளே
கனிவுதரும்
அருள்மகளே
அலைகடலாய்
உலகில் நிலை
இலையாகி வினை
மலையாகி மலைப்ப
நிலையான ஞானம்
விளைகின்ற வேளை
அளைகின்ற இருளிரிய
முளைக்கின்ற செங்கதிராய்த்
தழைக்கின்ற பைந்திவமே
அழைக்கின்ற குரல்செவியில்
விழைகின்ற சேயினுளம்
மழைக்கேங்கும் நிலமாகிப்
பிழைக்கின்ற வழிதேடும்
பொழுதைக்கு ஏய்க்காமல்
முழுதுமுனதருள் நோக்கம்
விழுதெனவென் னிதயத்தில்
உழுகின்றவிளைவாகி உன்பால்
உழுவலன்பே பெருகிடவே என்பால்.

***

அன்னையின் அருட்கரம்

அன்னையே! 
வாழ்வின் நிலையாமையைப்
புரிந்துகொள்ளும்போது
துணுக்கென்கிறது.
மரணம் என்பது எத்தகையதோ என்று
உள்ளம் பேதலிக்கிறது.
அனைத்தும் இல்லாமல் போம் நிலையை
நினைத்து சர்வ நாடிகளும் அஞ்சுகின்றன.
காணும் இவ்வுலகின் துன்பங்களோ பலப்பல
ஆயினும் காணா நிலையின்
அனைத்தும் இல்லாமல் போகும்
அந்தச் சூனியம்...
நினைத்தாலே நடுங்குகின்றது தாயே!
இதில் அகங்காரம், ஆசை, ஆணவம்
கோபம், தீமை என்று இந்தக் கொடுமைகளை
நினைத்தாலே நடுங்குகின்றது;
இந்த அனைத்துவித பயங்களையும் போக்கிச்
சத்யமான, நித்யமான நிம்மதியைத் தர
உன்னையன்றி எனக்கு யாருளர் தாயே!
உன்னைச் சரணடைந்தேன்;
உன் பதமலர்கள் காப்பு. 

***

அன்னை பாடல்கள்

இணையற்ற நின்புகழ் 
புணையெனக் காக்கும்
துணையாகும் பவக்கடல்
அணையாகும் கடக்கவே. 

கடக்க அரும் கடுவினைகள்
அடக்கியெழும் நின்னருளால்
மடங்கிவிழும் என்வாழ்க்கை
மடலவிழும் மொட்டலரும். 

அலமந்த வாழ்க்கையினில்
புலம்தெரி பொன்னொளியே!
நலம்பொழியும் நாயகியே!
வலம் அருள்வாய் மஹாசக்தீ! 

சக்திப்பதமே சரணென்ற
பக்தியருள்வாய் பரதேவீ!
முக்தியுருவே! மூலப்பொருளே!
புக்திவடிவே பரம்பொருளே! 

பொருளிலா வாழ்வாய்ப்
புன்மையில் தோய்ந்தே
கருத்திலா தலைந்தேன் - நின்
கழல்தனை அடைந்தேன்
வருத்தங்கள் மாற்றி
அர்த்தங்கள் காட்டிப்
பொருத்தினை என்னை - நின்
பொன்னடி நிழலே. 

நிழலும் வெயிலுமாய்
நில்லா வாழ்க்கையில்
அழலும் என் நெஞ்சு
ஐயகோ எனென்பேன்!
தண்ணளிக் கடலாம்
தளிர்மென் பாதம்
கண்ணொளிக் காப்பெனக்
காட்டினை வாழி! 

வாழி என் தெய்வமே!
ஆழியுள் துரும்பெனப்
பாழிருள் ஆகப்
போகாது காத்துச்
சூழருள் வலயம்
சச்சிதாநந்த
வாழ்வினில் பொருத்தினை
வாழி வாழி நீ! 

அன்னை உன் பாதம்
அடைக்கலம் என்றும்
சிந்தையில் ஒளியாய்ச்
சந்ததம் நிற்பாய்
என்னுளம் உன்னருள்
என்றும் சூழ்ந்திடவே
உன்னித் தொழுவேன் - நின்
பதமலர் இணையே. 

தூய பெரும்சுடரைத் தொல்லுலகை ஈன்றவளைத்
தாய்மைத் தவவுருவைத் தானேயாம் - சேய்மைப்
பரத்துவமாய் ஆனாளைப் பூரணியைப் பொன்னார்
நிறத்தாளை நாடும் மனம். 

புதுமலராக என் உள்ளம் - நின்
பதமலர்க்காகுக திண்ணம்
மதிமிகு நுட்பங்கள் தூபம் - நின்
துதிகற்க ஆகுக வண்ணம்
கதிதனை உரைத்திடும் வாக்கும் - நின்
வழிபாட்டினில் எழுந்திடும் தீபம்
பதியுமென் நெஞ்சம் புகழ்சரிதம் - நின்
பரரூபத்தில் தஞ்சம் அடையும் நிதம். 


அன்னை பதங்கள் தோயும் உள்ளம்
மன்னவேண்டும் என்றும் என்றும்
உன்ன உன்ன உணர்வுள் ஓங்கும்
உன்னதமே நிலவும் நித்தம் நித்தம்
பன்னற்கரிய பெருமை விஞ்சும்
பரத்தின் மகிமை விஞ்சும் விஞ்சும்
உண்மை உணர்வின் உவகை துஞ்சும்
உருவே உலகின் அன்னை வாழி !. 


மாயை என்னைச் சூழும்போது
மாதா உன்னை நினைக்க வேண்டும்
தூய்மை என்னுள் துலங்கும்போது
தாயே உன்னைப் புகழவேண்டும்
பொய்மை இருளில் மிரளும்போது
பெற்றவள் நீ காக்க வேண்டும்
வாய்மைக் கதிரே விளங்கும்போது - என்
வாழ்வில் நீயே திகழ வேண்டும். 

***

அன்னையின் பதமலர்

அன்னையின் பதமலர் பணிந்தேன்
மன்னிய நெறியில் மனம்பதிந்தேன்
விண்ணும் வந்துநிதம் நம்மண்ணில்
கண்ணாய்க் காக்கும்விதம் உணர்ந்தேன்
உன்னற்கரிய உயர்நிலையில்
அன்னையருள் பொங்கிவரும்நம் உயிர்நிலையில்
எண்ணற்கரிய இயல்சக்தியவள் சரணம்
மண்ணில் எழ விண் இசையும் தருணம்.

*
ஒளிந்திருக்கும் அசுரர்
அன்னையின் கண்ணுக்குத் தப்புவதில்லை;
உண்மைக்குப் பகைவர்
அன்னையின் கடுமைக்குத் தப்புவதில்லை;
புன்மை கடியும் பராசக்தியாய்ப்
பொய்மைக்குப் பகையாய் மகாசக்தியாய்ப்
பூரண அருளாய் விளங்கும் அன்னையே
விளங்குக நெஞ்சில்;
தஞ்சம் உன் பொன்னடி தாயே சரணம். 

*
மந்திரம் அறியேன்
யந்திரம் அறியேன்
மனம் வாக்காகத்
துதிக்கவும் அறியேன்
உன்னை அழைத்திட அறியேன்
உன்னி உணர்ந்திட அறியேன்
பன்னி நின் கதைகள் பேசிட அறியேன்
முத்திரை அறியென்
முறைப்படி வழிபட அறியேன்
பரத்தினில் ஒளிர்வாய்
பாரினில் வதிவாய்
பராசக்தி உன் கருணையினால்
என் துன்பங்கள் தீர்ப்பாய்
துணையாய்க் காப்பாய்
தஞ்சம் தாயுன் தாளிணையே! 

*
அம்மாவின் திருப்பாதம் 
தங்கும் உள்ளம் மலர 
அறிவாகி ஆனந்த உருவாகி 
அருளின் வடிவாகி வந்த தருணம் 
மிருதனாய்ச் சரண் என்று விழுந்தவனை 
அமிருதனாய் எடுத்த கருணை பொழிமுகிலாய்ப் 
புத்துயிராய் ஆண்ட தாயே 
ஆண்டெல்லாம் ஆண்டு அருள்வாய் நீயே !


*
துதிசெய்வோம் அன்னையே 
கதியெமக்கு நீயே 
வதிகருணை வதனத்தில் 
பதிகின்ற அருள்பார்வை 
மதியில் தூய்மை தந்திடட்டும் 
உதிக்கின்ற தெய்வசத்தி 
உரைக்கின்ற தீரபுத்தி 
நிறைக்கின்ற மஹாசக்தியே!
ஐயோ எனும் குரலுக்கு 
அநுமதிச் சீட்டெண்ணி 
அனுமானம் எண்ணிடாமல் 
வையத்தில் அக்கணமே 
காக்கின்ற அருட்கரத்தில் 
பூக்கின்ற புதுமலராய் 
ஏந்தி நிற்கின்றாய் எம் ஆவியைச் 
சாந்தியும் சுகவளமும் சந்துஷ்டியும் 
தந்தெம்மை ஆநந்த நிலையும் தந்தாய் 
ஆனந்தமயீ சைதன்யமயீ 
அனைத்துயிர்க்கும் தாய்நீ! 
அனவரதம் துதிகற்கும் 
எம்மிதய மலர்வீற்ற 
அம்மா என இறைஞ்சுவோம்.



*
நிர்க்கதியாய் விழும்
ஜீவருக்கு
முகம் கொடுத்து
கைகொடுத்துக்
காப்பாற்றும்
தப்பாத அருளாம்
தெய்வத் தாய்மைக்கு
கரிக்குலவிட்டேயும்
பயோடேட்டாவும்
பயிற்சிமுகாமும்
திட்டமிட்டுத்
திட்டமிட்டுத்
தொலைத்த காலம் எண்ணி
அயரும் நிர்மூடம்
முகம்பார்க்கும்
கண்ணாடிக்குள்ளும் தெரிகிறது.
மொத்தத்தில்
முட்டாள்
இதிலென்ன
எட்டு ஆள்?


***

அறியாக் குழந்தை

குழந்தை அறியாது 
தனக்குக் கெடுதலையும் 
உற்சாகமாகப் போய் மேல்விழும்; 
பைத்தியம் தன் நிலையில் இருக்காது 
என்ன செய்கிறோம் என்று அறியாது 
ஏதோ செய்து ஏளனத்திற்கு இலக்காகும்; 
குடிகாரர் தம் துன்பம் தீர என்று 
ஏதோ உண்டு தம் பெருமை அழிவார்; 
நோயாளி தான் உணர்ந்தாலும் 
பலஹீனத்தால் பயனற்ற நிலையில் இருப்பார்; 
கட்டப்பட்டவர் தம் ஆற்றல் வீணாக 
விடுதலை இன்றி மனம் நோவார்; 
இவை ஓரொன்றுமே கொடுமை தாயே! 
இவை அத்தனையும் கலந்த நிலை என் நிலை; 
நீ அருள் செய்தால்
நீ அருள் செய்தால் மட்டுமே
வாழ்வு உண்டு கருணை செய் அம்மா!

***

நீ தாய்

மனக்கவலை மாற்றும் மருந்தாகி வந்தாய் 
மனக்கேதம் மாற்றித் தடுத்தாண்டு கொண்டாய் 
தினம்பூத்துத் திகழ்கின்ற மலராகி நின்றாய் 
வனம்பூத்த அரவிந்த மணமாகி நின்றாய் 
அநவரதம் அரவிந்த மலர்நாடும் வண்டாய் 
உனைச்சுற்றி வலமாரும் உள்ளத்தில் நின்றாய் 
எனைப்பற்றி வரும்குற்றம் எவ்வண்ணம் பொறுத்தாய் 
அன்புக்கும் அருளுக்கும் வடிவான நீ தாய்.

***