என்றோ எப்பொழுதோ என் நினைவில் நிற்கிறது
இன்று போல் இப்பொழுதும்
ஏனென்று யார் கண்டார்
மாலை மயங்காத முருகல் வெயிலில்
தெருச் சந்தடி தாண்டிப்
பருக்கை மணல் கால் பதியும்
கொள்ளிடத்து வான் புனத்தில்
கொஞ்சும் இயற்கை
கூட்டி வைத்த பெருங்கொலுவில்
நெஞ்சம் கரைத்து நிர்மலத்தின்
மஞ்சத்தில் தோய்ந்துவர
துணையுடனோ தனியேவோ
நினைவில்லை சென்றிருந்தேன்
தேன் பூத்த தென்றல்
தொடர்ந்தது வாலாடிவரத்
தெள்ளிய நீரோட்டம் கடந்து
தெளியாத வான் கவ்வும்
தொடுவானப் பெருமணலில்
தாள் தடக்கை நீட்டிச் சாய்ந்திட்டேன்
எதிர்வீட்டுக் கொல்லையிலே
ஏறிக் குதித்தான் பகலோன்
இரவுக்கு ஊறவைத்த இனிமையிலே
எங்கும் இருள் கவ்வத் தொடங்கியது
பகற்பொழுதும் பிதிர்ந்தாலும்
பார்வைக்கு மறையவில்லை
பார்த்தபடி நடந்து பருமணல் தாண்டிப்
பளிங்கு நீர் சிலிர்த்து
ஒலியடங்கி ஓடும் ஆற்றில்
ஒருவாகாய்க் கால் செலுத்தி
உராயும் ஒலி உளம் செலுத்தி
ஓர் எண்ணப் புனலாடிச் செல்லுங்கால்
கீழே கண்குத்தி நின்ற அலை
சுழித்து வருகின்ற ஓருருவம்
ஆற்றுநீர் மாலையிட்டு
அவிழ்த்துவிட்ட பின்னலிட்டு
அங்காந்து வாய்நீரை
ஆகாயக் கொப்புளித்து
முன்மறைத்த மயிர் கண் விலக்கிக்
கட்டவிழ்த்த கச்சில்
குளிர் விரைத்த கொங்கைகளின்
காம்பில் சுழித்தோடும் குற்றலைகள்
கோணிச் சரிந்து விழும் வயிற்றுமடுவில்
வானின் திவலைகள் வரியாகிக்
காணாமல் போகின்ற கால்புழையுள்
கன்னி காவிரியாய்க் காவதம் கடந்து வந்த
பொன்னி புடைபெயரும் கிழக்கில்
புடை மெருத்த முலைக்கண்ணும்
பூரித்த வலைக்கண்ணும்
புதிர்க் கண்ணால் சுழித்த உந்தி
கடைக்கணித்த நினைவோ
என் கண்ணில் இன்றும் எழுந்தாடும்
கொள்ளிடமே சமயத்தில் தானே நீராடிடுமோ
காணாத கொசுவத்தைக் காலுதைத்து
அலைக்கரத்தால் அவிழ்த்த கச்செறியக்
கதிர் மறைத்து இருள் விரியக்
கண்ட காட்சி கருத்தில்
அலையெறியக் கரையடைந்தேன்
***