பக்கச் சார்பின் தகரத்தில்
கொட்டி ஆற்றுகிறது
ஊர்க்கவலையெல்லாம்
நள்ளிரவில் மழை.
பார் பார் என்று
பிரபஞ்சத்தின் லாந்தர் விளக்கை
ஏற்றத் துடிக்கிறது மின்னல்
போர்வையை இழுத்துப் படு என்ற
அப்பன் கண்டிப்பில்
தெருவில் ஓடும் நீர்ப்பெருக்கு
கனவில் கரை உடைகிறது
காலையில் எழுந்ததும்
காற்றில் துள்ளிவரும் முதல் அறிவிப்பு:
பள்ளி விடுமுறை
மழையே! நீ வாழி!
பல் தேய்க்காமல், காப்பிக் கவலையின்றிப்
பக்கம் பக்கமாய் நண்பருடன் குதித்துத்
தெருவோடும் நதி மீது
படகு விட்டுச்
சரக்கு ஏற்றிச்
சண்டை முற்றி டாங்கிகள் தாக்கி
வீட்டிற்கு வீடு துறைமுகம் ஆகத்
தோழிப்பெண்கள் பயணிகள் ஆகத்
தோத்தா வீட்டுச் சாக்கடைக் குழியில்
தொலைந்து போகும்வரை தொடர் விளையாட்டு
நடுவில் வந்த வெயிலொளி
தன்னை அன்னியனாக உணர்ந்து மறைய
அடுத்துக் கொட்டும் அடைமழை எங்கும்
அவிழ்த்துவிட்ட மகிழ்வின் தேனடை
***
No comments:
Post a Comment