மாலையின் பௌராணிகம்
இரவிற்குச் சுவையூட்டியது
வேர்வை ஆற்றுநீரில் போக
வேறொரு காலம் விழித்தது
இரவின் இருள்தான் என்ன மாயம்!
மொட்டைக் கம்பம் முனியாகிப்
பட்டைச் சாராய பதக்கேந்திப்
பனைமர நீளத்தில் புகைச்சுருட்டு பிடித்தபடி
ஆறடிச் சந்தின் மதிற்சுவரில் ஒரு காலும்
மரத்தின் ஆகாயக் கிளையில் ஒரு காலும் வைத்துக்
கனலும் விழியுருட்டிக்
கிணற்று மேடைச் சொம்பின் ஒளித்தெறிப்பில்
கோபமாகிக் கொள்ளிவாய்த் திறந்து
உறுமத் தொடங்குமுன்
ஓடிவந்து உள்ரேழி விழுந்து
சாத்தாத கதவிடுக்கில்
சங்கிலி எட்டிப் பார்க்க
விட்டத்தில் கள்ளுண்டுத் தலைகீழாய் விரைந்தாடும்
கருப்பு மோந்து பார்த்த கிலியில்
குரல்வளை தேய்ப்புண்டு
ஓலம் ஒரு கிரீச்சலாகி
உடலில் ஒரு வேர்வை ஆறும்
மந்திரிக்க வேப்பிலைக் கொத்தும்
அப்புச்சா ஆட்டத்தில்
மலையேறிய கோட்டை முனி
நாளை இரவும் வரலாம்
அதுவரையில்...
அப்பாடா.. பகலின் பாமரம்
***
No comments:
Post a Comment