Monday, November 29, 2021

எழுதிக்கொண்டிருக்கும் காவியத்திலிருந்து சில கதிர்கள்

காவியம் எதைப் பற்றி?  
காலத்தின் கரை வீற்ற நித்யங்களைப் பற்றித்தான் 
காவியம் கதுவியெழும். 
நித்தப் பொருள் அனைத்தும் ஆலயமாய்ச் சேரும் இடம் மனிதன். 
அவனைத்தான் காவியப் பெண் 
அன்றிலிருந்து காதலில் கட்டிவிட நினைக்கிறாள். 
கைக்கிளையாய் ஆகிவிடுமோ என்று பெருமூச்சு எறிகிறாள். 
உலகின் பல மூலைக்கும் சென்று 
இரவுக்குறியும் பகற்குறியும் வைக்கிறாள். 
வந்தாய் போலே வாராதாய் என்று ஏங்குகிறாள். 
வாராதாய் போல் வருவானே என்று எதிர்நோக்குகிறாள். 
பாங்கரும் விறலியரும் பரிந்து சென்ற பெரியோரும் 
இன்னும் திரும்பிய பாடில்லை. 
எத்துணையோ சிற்றில் இழைத்துச் சிணுங்குகிறாள். 
சிதைத்து அந்தச் செல்வன் சிந்தை மகிழ்விப்பான் 
என்று காலத்தின் அத்துவாக்கள் எங்கும் 
விழி வைத்து நோக்குகிறாள். 
உள்ளம் கவர் கள்வனை 
உருவெழுதிப் பூத்த உவகையில் உடல் நனைகிறாள். 
என்றும் நெட்டுயிர்ப்பே இவள் பங்காய் 
அந்தப் பெருந்தகையோன் திரிகின்றான் தனைமறந்து, 
பாடிவீடெங்கும், தன்னும் உருவும் பெயரும் நினைவயர்ந்து. 

வாழ்வின் விடிவெள்ளி பிலிற்றும் கதிர்தோய்க் 
காலக் கரும்புனல் கருத்தோடிக் காணாவான் கருசுமந்து 
பால்நிறப் பைந்தடப் பரத்தின் பள்ளிக்கட்டில் 
மாலாகி மகத்தில் ஆயிரமாய்த் தலைவிரிய 
மூலத்தூண் உதைத்து முட்டித்த முன்னூக்கம் 
காலத்தூள் பரப்பிக் கண்விரித்த சையோகம் 
ஒலியில் உருவாகி உருகடந்த மெய்யாகி 
மெய்யாக்கும் பொய்யாப் புலத்தின் வித்தாகிச் 
சூழும் கோலத்தின் சுயத்துள் செறிந்து 
பாழில் விரிந்த பைங்கமலத் தண்தீயில் 
ஏழாய்ப் படிந்து எழுந்த எழில்யோகு 
ஊழாய் விடிந்த உன்மத்தக் கணமொன்று. 

கல்லுருகிக் காற்றாய்க் கலந்து 
காரிருளின் காட்சியற்ற கதிராய்க் 
ககன வெளியற்ற உள்ளாய்ப் 
பெயருரு பிறங்காப் படைப்பின் முற்கணக் குழம்பாய் 
உயிரின் அண்மைக்குள் ஒருபெரும் தொலைவாய் 
உற்றறி கருத்தின் அரும்பா முனைவாய் 
அறியா பரப்பில் கூறுகள் குலையா 
இயலும் தகையாய் இயற்றா தொகையாய்ப் 
பயிலும் பரநதிப் புலமாய் விரியப் 
படைப்பின் உருக்கோவை பெயர்ப்பனுவல் குவையோடு 
பக்குவமாய்ப் புணர்ந்திசையப் பூரித்த பொன்வேளை 
பொழுதசைய உழுபுலத்தின் கொழுவாய் 
அகமாகிப் புறமாகா அண்டமுன் அவத்தையினில் 
திறலும் விரிவும் இருப்பின் களிப்பும் 
வேக வளையாய் விறலாய்க் கெழுமி 
விரவிய தம்முள் வித்திட விளைந்த 
விண்ணின் மண்ணாய்ப் பூத்தது வானம். 

வானின் வடிவச் செதில்பரல் குழைந்து 
வேகத் தண்ணளி விண்பூப்புறைய விரைவின் நிகழாய் 
ஒன்றைக் கடந்த பலவின் வீச்சாய்த் 
திரைகொள் முரணாய் மாற்றவளியாய்த் 
தடம்படு காற்று திறல்சூல் கவ்வத் 
திறல்முற்றித் தீயாகித் தெய்வத் தண்ணளியாய்த் 
தருநீர்மை நீராகித் தரைகொண்ட கருவில் 
உருவாகி உணவாகி உயிராகி உடல்கொண்ட 
உணர்வாகி ஒன்றாக பலவாகும் ஒருஜீவன் 

ஒரு முட்டை அணுத்தட்டை 
ஒன்றிற்குள் உருவாகும் ஓரிரட்டை 
ஒன்றைப்போல் ஒன்றாகி வேறாகிப் பலவாகி 
மாறாகிப் பெருகிவந்த வையம் 
கூறாகிக் கோணணுவின் கோப்பாகிக் 
கொண்ட வடிவின் கூடிவந்த குணமாகிக் 
குணம்தொடுத்த தொடர்பாகித் 
தொடர்பாலே பல்திறனாய்த் தோற்றமாய்த் 
தொடநின்ற தேற்றமாய்த் திரண்ட 
பொருளாய்த் தழைத்த மையம் 
பலவான இயல்பாட்டில் பொருத்தமுறக் கூடியவை 
பருண்மையாய்ப் பொதுளிய நிலையம் 
ஆகாத சாத்தியங்கள் அண்டப் பொதுசத்தாகி 
ஆடாத திறல்செறிவு அலையாகி 
அலையாத பொதுவில் கோடாத பொருளுக்கு 
அரும்பாகி உருவற்ற பொருள்முயக்கம் 
கருக்கொண்டு வெளியாக்கி 
வடிவோடு தொலைவும் வரும் போகும் நிகழ்வும் 
வடிவற்ற நிகழ்கண நடுக்குறு விரைவும் 
காணாத காட்சியின் கண்ணற்ற பார்வையில் 
கோணாத கோலமாய்க் கொண்டுதிகழ் கருத்தாகிப் 
புலப்பட வெளிப்படு படைப்பிடைப் புடைப்பொடு 
புரிபடப் புறப்படு ப்ரபஞ்சமாய் ஆனதும் 
நீராகி நிலனாகி நிதானமாய் 
நின்றெரியும் கதிராகி நிலவுமாய் 
நில்லாத பருவமாகி நீட்சியாய்க் குறுக்கமாய் 
நிவந்துடன் ஆழ்ந்துபின் அகன்றலர் இயக்கமாய் 
உவந்தபேர் தொடர்ச்சியாய் உருகெழு வாழ்க்கையாய் 
உற்றதொரு வைய நாப்பண் ஓரூர். 

அலைமீது ஏறிவந்த ஆற்றல் 
பாழின் வாய்புகுந்து பொருளாகித் தோற்றுக் 
குலைந்தவலை கொண்டையினில் மின்னக் 
குலையாத உயிரோடுயர்ந்து 
உணர்வாகி உற்றமனமென்ன 
ஊரை வளைத்துவரும் ஆற்றில் 
உயிர்திகழும் பயிர்ப்பான பசுமை 
உணர்வாகித் துயில்கொள்ளும் கருமை 
விழிபயிலும் அறியோகு புணர்வில் 
செழிக்கின்ற திருவாகிச் செவ்வான் 
பழிக்கின்ற தருக்கிளையில் பயிலும் 
மொழிக்கிள்ளை மிழற்றுமொரு தீஞ்சொல் 
தரங்கம் ரங்க ரங்கா அரங்க மரங்க ளுறங்கும் 
உறங்காத சான்றாகி உருளும் காலம் 
அறங்கா வலாகி அயரும் வேளை 
எண்கோண மூவுருளை எந்திர மாயையொன்று 
கண்காணாக் காம்பில் கறங்கும் நின்று 
பொய்யாய் வடித்த புத்தமுதம் பொருளில் படிந்து 
பையவெழுந்த பல்வடிவாம் பசப்பின் மெய்யில் 
தைவந்த நாவின் தீர்க்கம் சுழித்துச் 
சுட்டும் நுனியாய் எந்திரச் சுரும்பில் ஆர்க்கும் 
இருட்டுக் குளம்பாய் ஒளியின் தடமொத்தும் தமப்பாழ் 
சுருளாகி விரிநாகச் சுரமுழைக்குள் பதுங்கும் 
ஒலியென்றும் ஒலியற்ற வெளியென்றும் 
திரண்டஒரு கோளம் பொரித்துப் 
புறவோடு பொன்சிவப்பாய் வான்தடவ 
விரித்து வெளிப்போந்த வியன்புள் விரிசிறகு 
முன்னசை ஓசையாய்க் குரலாய் முடுகிய 
சிறகின் நீழல் சொல்லும் பொருளுமாய்ச் 
சிவணிய சிலிர்ப்பில் சென்றந்த முழையை நோக்கும். 
நோக்கரிய நுண்ணுணர்வின் நுகத்தடி 
நுவலா நன்மையின் நறவத் தீஞ்சுவை 
நயக்கும் வாக்கில் கால்வைத்து வரைகடந்தெழுந்த பரத்தின் 
போக்கரிய பதமாய்ப் புக்கரிய நிலையாய்ப் 
பூரித்த புதுவிண் பூரணம் திளைப்பப் 
பூவா மலரின் மோவா நாற்றம் 
பொன்றா விசையாய்ப் புலத்தில் புரிய 
ஒன்றிய உணர்வின் குருத்தில் ஓயா 
ஒற்றைக் கண்ணும் இமையா முனைப்பும் 
இரட்டையைத் தன்னுள் இயற்றிட இயைந்த 
ஏகம் ஆங்கண் இயன்றது தூணாய். 


காதற்ற கேள்வியில் ஓசையற்ற பேரோலம் 
மீதுற்ற மௌனம் விழுங்க விழித்தது வெளி 
சலனமின்றிச் சமைந்தது இருப்பு 
சத்தியம் புலனில் மெய்ப்படக் கனிந்தது காலம் 
சங்கம அலைத்திறல் சரிந்தது சடமாய்ப் 
படைப்பின் போர்வையில் பனித்துளித் தடமாய்த் 
தனித்து உயிர்த்து உயிரி தொகைத்து இரை நாடி 
மனித்தப் பிறவியாய் மலர்தரு நாள்வரை 
மாறிய பரிணாம மதகின் நீட்சி 
கால சொப்பனத்தின் காட்சியை மறைப்ப 
எழுந்த குரக்கினக் கூர்மதி திறப்பப் 
பிறந்த மனத்தில் பிறந்தமுன் மனிதன் 
இறந்து காட்டிய வழித்தடம் விண்ணில் 
அப்பால் உலகின் அடித்தளம் இட்டது 
பிறந்த உயிர்கள் புவியின் முலையுண்ண 
இறந்தவை வானின் மடிமுட்டியதும் 
சுரந்த பாலைச் சுரவெளி கரந்த 
வெறுமை விரித்தது விண்ணின் பெருமை. 
இரவும் துயிலும் கனவும் இறப்பும் 
எழுப்பிய மானதம் ஏந்திய ஏக்கம் 
விழுமிய மதிப்பின் விண்ணுரு வாக்கமாய்க் 
கெழுமிய குருத்தின் கொள்கைப் புராணம் 
விள்ளும் துவக்கப் புள்ளிகள் வாழ்வின் 
உள்ளுறை இறைந்து உண்மையைச் சூழ்ந்து 
உவட்டா மாயத்தின் உரைப்பெருக் காயின. 


பிரபஞ்ச இயக்கம் இயற்கையின் மாற்றம் 
காலச் சுற்று உடலின் விகாரம் உளச்சலனம் 
எல்லாம் மனித செய்கையைப் பிரித்துக் காட்டியது 
பிரபஞ்சம் என்ற முழுமையின் அறியாமை 
பிற அறிவுகளை உள்ளடக்கியது 
அடைந்த அறிவுகள் தம் ஆழ்பொருளின் அடிவானத்தப்பால் 
அறியாமையின் பிரபஞ்ச வரைக் கோட்டை 
உயிர்ப்பின் ஸ்தம்பித கணங்களில் உன்னித்து ஈர்த்தன 
உயிர்ப்பின் இடுக்குகளில் உட்பொசிந்த உண்மைகள் 
பிரபஞ்சத்தின் அறிவுருவக் கட்டுமானங்களைப் பலசமயம் 
அடியோடு மாற்றின அல்லது அவற்றின் 
இடிமானங்களில் அமர்ந்து சிறகடித்தன 
காலம் கரைக்க முடியாத உண்மைகள் இருப்பது போன்று 
அள்ளிச் செல்லமுடியாத இடிபாடுகளும் தங்கித்தான் போகின்றன 
திடீர் அழிவுகள் நெடிய தொடர்ந்த இழுபறியான இருப்புக்கு 
உலகம் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் 
ஒப்பனையான சிலிர்ப்புகளே அல்லது சிணுங்கல்களே 
எந்த முன்னேற்றமும் இல்லாது நெடுங்காலம் 
மருகிச் செல்லும் உலகைத் துரிதப் படுத்திவிட முடியாது 
என்று மனிதன் உணரும் பொழுது 
தான் துரிதமாக முன்னேறத் தொடங்குகிறான் 
முன்னேறும் பொழுது அவன் உணருவது 
என்றும் உலகம் நகர்ந்ததுகூட இல்லை என்பதே 
நகராத உலகத்தில் தான் மட்டும் எங்கு எப்படி 
நகர்கிறோம் என்று அவன் குனிந்து நோக்குங்கால் 
உலகைக் கடந்து விடுகிறான். 
உலகைக் கடந்தவனுக்கு நிற்க இடமில்லை 
இருக்க மட்டுமே 
இருக்கத் தெரிந்தவனுக்கு இன்மை புழக்கத்தில் இல்லை 
இன்மையைக் காணவேண்டும் என்று நினைப்பவன் 
அதற்கான இடத்தையும் தனக்குள் எடுத்துச் செல்கிறான் 
இன்மையைக் கண்டேன் என்று அவன் ஒருவேளை சொன்னால் 
அது தனக்குள் சுமந்து சென்ற இடத்தினின்று 
தான் தனியாய் விலகி நின்றதேயாகும் 
அவன் விலகி நிற்கும் அவனுள் நின்ற வெற்றிடம் 
அவனைத் துரத்த ஆரம்பித்து விடுகிறது 
எங்கெங்கோ ஓடி இரைத்துச் செல்லும் அவன் 
உண்மையில் தனக்குள்ளேயேதான் புரண்டு படுக்கிறான் 
அவன் தப்பித்துக்கொள்ள ஒரே வழி 
முன்னேற்றம் என்பது உண்மையில் 
தான் அறியும் மனிதனாகத் தன்னை  
உணர்ந்து இருப்பதே என்பதை உணர்கிறான் 
அறியும் மனிதன் செயல்களை 
அறிவின் சமிக்ஞைகளாகக் கண்டு 
அதற்கேற்றபடிச் செயற்கோவைகளைச் 
சமைத்துவைத்த நிரலின் சுகிருதத்தில்  
சரியும் தன் கவன முனைகள் 
சார்ந்தெழச் சூழ்ந்த சஹாயத்தில் சுகமடைகிறான். 
பிரபஞ்ச அறியாமை அவனை வெருட்டும் 
பாதாள அறையின் மேற்கூறையாய்க் கவியாமல் 
அவன் விசித்தெழ என்றும் வரையற்று விரியும் 
வாய்ப்பின் வான்புலனாய் 
அவன் விரிசிறகு நிமிர நிமிட்டும் 
உள்வதியும் சன்னதமாய் 
உணர்வுள் உத்கீதமாய்த் தொடர்கிறது. 

உணர்வுள் இசையெழப் பெற்ற மனிதன் உறங்குவதில்லை 
ஒரு புல்லிலும் அவன் நாடி ஒலிக்கிறது 
புலரிகள் அவனுள் அஸ்தமனமற்று விளங்காநின்ற 
பரிதியின் கலைகளைக் கணக்கிட முயன்று களைப்பவை 
யுகசந்திகளில் ஒருவேளை அவன் நின்று நோக்கலாம் 
அவன் பார்த்த இடங்கள் பாரம்பரியங்களாகிப் 
பின்வருவோர் பயிலும் நடைவண்டிகளாகத் தொடர்கின்றன 
எங்கும் அடங்காச் சத்தியம் 
செயல் முடுக்கிச் சிமிழ்த்த சடங்கிலும் அடங்காதெனச் 
சந்ததம் அவன் உணரினும் 
சடங்கிடைச் சருவும் சையோகத்தில் சுகிப்பவன்போல் 
விடாது நிரல்பட இயற்றும் வினைத்திட்பம் 
வரைகடந்த ஒன்றைத் தொட்டுப் பயில வாய்த்ததுபோல் 
வழங்கும் மாயையின் வசதி அவன் வாழ்நாள் துணை. 


காடு பூத்த தத்துவத் தேடல்
கடக்கவொண்ணா மரணத்தின் மடிபிடித்துக்
கேட்ட கேள்வி மரித்தபின்
ஜீவன் இருக்கிறானா இல்லையா?
இருக்கிறான் என்று சிலர் இல்லை என்று சிலர்
உண்மையைச் சொல்ல உயிர் எடுக்கும்
மரணத்தால்தான் முடியும் என நினைத்துக் கேட்டவன்
பதிலுக்கு மௌனத்தைக் கண்டான்
மௌனம், கிளர்ந்த கேள்வியும் அடங்கிக்  
கிளவியாக்கமும் ஒடுங்கிக்  
கருத்தின் அரும்பும் ஆடாக் கட்டி மௌனத்தில்
தானென்ற உருவும் அகன்ற தனித்த அருவத்தில்
கேள்விக்கும் பொருளில்லை
கேட்கப்பட்ட மரணத்திற்கும் பொருளில்லை
என உணர வாய்த்த தருணங்களில் உரை ததும்பி
உறைந்த பாளங்களாய் உபநிஷத வாயமுதம்
உன்னித்தெழுந்த உயிர் புணர்ந்த 
உணர்வின் முத்தங்களாய்
நினைவின் கன்னங்களில் 
நிலாக்குறியிட்டு நித்தியமாயின. 


முனிவனின் நடுக்கம் ஓய்ந்து 
தீர்க்கமுற்றது தியானம் 
உலகங்கள் உருண்டு உருண்டு தம் கதை பேசின 
மலை முடிகள் கடலடியாகிக் 
கடலடிகள் மலைமுடியாகச் 
சூடேறிய கடலை ஆற்றி ஆற்றி 
யாரோ அருந்த யாரோ கொடுக்கக்  
காலம் உருண்டுகொண்டிருந்தது 
இதழ் வைத்துக் குடித்த வட்ட நிலவம் 
வைத்து வைத்து ஊற்றிக் கொண்டிருந்த 
முறை தவறாமல் நடந்து கொண்டிருந்தது 
உயிர்க் குலம் ஒன்றென்று 
ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தது சாவு 
மனிதரில் பேதங்கள் இல்லை என்று 
நினைவு படுத்தியவண்ணம் நிகழ்ந்து கொண்டிருந்தது பிறப்பு 
நதிக்கரையில் மலைக் குகையில் மனிதன் 
நாகரிகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான் 
வேகமாகச் சென்ற காலம் அவன் கையில் 
கல்லையும் செம்பையும் இரும்பையும் போட்டு விட்டுச் சென்றது 
ஆயுதம் பிடித்த கை ஆயுளைப் பறித்தது 
வாயு தன் போக்கில் உயிரின் வேந்தனாய்த் திகழ்ந்தான் 
தீ என்னும் விருந்தாளி 
விண்ணை விட்டு மண்ணுக்கு வந்தவன் 
மனிதரின் தாதியானான் மரிப்பவர் அமரரானார்.  
பலவான மனித குலம் கூடி 
அனுபவத்தின் பாடமென்ற தூரிகையால் 
காலத்தின் கலைக் கழகத்தில் 
மனிதன் என்ற ஓவியம் எழுத முயன்றது 
ஓவியத்தைக் கண்ட காலம் தன்னைத் தானே காமுற்றது 
மணக்கத் தன் பிம்பத்தை மண்ணில் நிறுத்தி 
நகரத்தில் அரசன் நாட்டிற்கு மன்னன் 
பேரரசில் மாவேந்தன் என்று 
புறந்தள்ளி ஓய்ந்த காலக் கிழவிக்கு 
இன்னும் வரன் வாய்க்கவே இல்லை. 


வறண்ட மனப்பாலை காய்ந்து 
விதிநொந்த அறிவின் வெப்பில் 
வாழ்வின் வெள்ளப் பெருக்குலரா 
விதையூற்றும் கரிந்து வெறுப்போடி 
விரவும் மணற்பந்தற்கீழ் வெருட்டும் காற்று 
வரையாத ஓவியமாய் வெளிரும் வானம் 
ஒளியின் பித்தம் தலைக்கேறி 
ஓடாப்புனலை கனவுகாணும் தரை 
ஊழிக்கு முன்னின்று உடற்றிய வெறுமை 
ஒளிவற்றுக் கரவற்று ஓய்வற்றுக் கறங்கும் அம்மணக்கூத்து 
அளியற்ற நெஞ்சின் ஆர்ப்பாட்டமாகி 
வெற்றுமின் விரிசலிட்ட வெண்மேகம் 
பழியுற்ற வாழ்வின் பசலையாய்ப் 
பார்மூடும் அசட்டு வெயில் 
நீர்மை காய்ந்த நிலக்கோடாய் 
நெருடும் குருட்டு யோசனைகள் 
சார்ந்து சரிந்து சுவன்று சுமந்த மணற்குன்றுகளாய்ச் 
சலித்த மனப்படிவங்கள் 
வாய்த்த குரல் நனைக்கும் வாயூறும் எச்சில் 
வற்றாச் சுரப்பாக விழையும் வேட்கை 
சேய்மைக்கும் அண்மைக்கும் 
சமன்பாடு காணாப் பார்வையின் வெறித்த நோக்கு 
காலடித் தடத்துள் கால் பதியும் மணற்குழிவாய்த் 
துயர நினைவின் தோய்வு 
நிச்சல வாழ்வை நிலையாதாக்கி 
நடுக்குற வீசும் சூறையாய் விதியின் சுழல் 
பேய்க்கபந்த விரையும் கூம்பாய் 
அவப்பண்ணின் அதிர்வில் சிதறும் 
எதிர்கால அச்சான்யமாய் ஊமை ஊளைகளின் தொடர்ச்சி 
வெற்றியின் தருணங்கள் தோல்வியின் பரப்பில் 
விடாய் வெறியூட்டும் துளிகள் 
மயங்கித் தலை சாய்வதன் முன்னம் 
அருஞ்சுரம் கடந்த தண்வள நினைப்பின் கிளரூக்கம் 
நின்றுதன் நெஞ்சில் நேரும் சிந்தனை எல்லாம் 
நிர்மூலமாக்கும் நெட்டுயிர்ப்பு 
என்றுமுள உண்மை என்பதனை 
மூன்று காலங்களில் தேடிப் புகையும் பொய்மை 
உயிரின்மை உருக்கொண்டு வாழ்வுபோல் திரியும் கயமை 
ஊனம் தகுதியாகி உருக்கரந்த அழுக்காறு 
அனல் வெப்பாய்ச் செய்யும் வாட்டம் 
ஊருணி நச்சுப்பொய்கையாய் ஊட்டும் 
ஆலத்தை உவக்கும் தன்வெறுப்பு 
அகந்தைக் கிழங்குகள் ஆகாயத்தில் புதைந்து 
மண்ணில் படரவிட்ட கொடிகள் 
உறிஞ்சி முடித்த நீர்மையாய் உபசார வார்த்தைகள் 
சுட்டெரிக்கும் வெயிலிலும் 
காயாத பசையாய்ப் பசப்பின் குழைவு. 

***  

Sunday, November 28, 2021

கனவு

ஓ அந்த உலகம்! 
அறிவு முழுவதும்
இயல்பாக நிலவும் உலகம்
அன்பு என்பது அறிவிப்பாக இன்றி
இயல்புச் செயலாக இருக்கும் உலகம்
நம்பிக்கை நயக்கும் சொல்லாடல் 
எதுவும் நலியாத உலகம்
உலகைப் புரிந்துகொள்ள
அறிவியல் உதவ
உணர்வு செழிக்கும்
ஒட்டுறவு தழைக்க
உவகை கொள்ளும்
கவிதை கிளர்ந்தெழ
உள்ளபடியே தொடக்க நிலைகள்
தொட்டுப் பல நிலை
உள்ளது சிறந்து வெளிப்படு உயிரியல்
நனிநல்ல இயல்தொன்மமாய் ஆகச்
சொல்லாடல், மொழிதல்மூட்டம்
கிளவிக் காரிருள்
இவை கவியா நல்லொளி
மறையாது இலகும்
அந்த உலகம்...
.........
அமர்ந்தவாறே உறங்கியும் விட்டேனா 
நல்ல கனவு. 

***

திருப்பாவைக்கான ரசிக்கும் பாடல் முப்பது

(திருப்பாவை முப்பதுக்கும் ரசித்து ஒரு ரசனைத் திருப்பாவையாகப் பாடிய முப்பது பாடல்கள் இவை. அதாவது அனைத்துப் பாடல்களிலும் ஆண்டாள் பற்றிய குறிப்பு, திருப்பாவையின் சிறப்பு, அதைக் கற்கத் தூண்டும் ரசனைக் குறிப்பு ஆகியன அமைந்து வரும்படியாக அமைந்திருப்பன. ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்பில் நகவளைவுக்குள் திருப்பாவையின் தொடக்க வரி தரப்பட்டிருக்கிறது) 

*

1. (மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

மார்கழித் திங்கள் மதியத்தே மால்நினைந்து
ஆர்கழலைச் சிந்தித்து ஆண்டாள் திருப்பாவை
தேரும் பொழுதத்துத் தித்தித்த தீஞ்சுவைகள்
யாரோ டுரைக்கேன்யான் யாமம் கடந்தாலும்
பாரோர் பையத் துயின்று பின்னிருளும்
காரோத வண்ணர்க் கரிய திருமேனிப்
பேரோதும் பெற்றித்தாய்ப் புந்திப் புலரியெழத்
தாராய் நறுங்கோதாய் தண்ணருளே யெம்பாவாய்.


2. (வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்கு

வையத்து வாழாதே வெய்ய துயர்க்கடலில்
பையவே மாழாந்து புல்லும் கவலைக்கே
ஐயகோ தாம்விலையாய் ஆனார் வழியொற்றி
நைவதுவோ நானிலத்தீர்! நாளும் சுடர்க்கொடியே
தைவந்த பூச்சூட்டித் தான்திகழும் அச்சுதனார்
கைவந்த குன்றின்கீழ் கன்றுகளும் தாமகிழ
உய்யும் திருப்பாவை உத்தமனுக் கோதியதும்
வையத்தீர் நாம்வாழ வாழ்த்தீரோ எம்பாவாய்.


3. (ஓங்கி யுலகளந்த உத்தமன் பேர்பாடி

ஓங்கி யுலகளந்த உத்தமனார் சேவடிக்கே
தாங்கித் தமராக்கித் தான்செலுத்தும் தீந்தமிழாள்
பாங்கியராய் யாமுமிங்கு பங்கெடுத்தால் பற்பநாபன்
ஓங்குபுகழ் பாடி உயிரில் உறவாகித்
தேங்குமகிழ் தெய்வத் திரளுக்கே தான்வாடி
வாங்க உளம்நிறைக்கும் வற்றா விரிவுரைக்கே
பாங்காகிப் பக்குவமாய்ப் போந்த மனமுடையீர்!
நீங்கா அருளே நிறைந்தேலோர் எம்பாவாய் !


4. (ஆழிமழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்

ஆழி சுழற்றிடும் அச்சுதனை அன்பினால்
வாழ்வில் சுழற்றிய வான்கோதை பேசினாள்
ஆழ்பொருள் அத்தனையும் ஆசிலோர் தாம்வடித்தார்
ஊழிதோ றூழி யுளத்தில் பெயராமே
வாழி யுலகளந்த வண்ணத் திருமாலைப்
பாழில் பிறவி பயிலுமோர் நற்றுணையாய்
வாழ்த்தி மனத்திருத்தி வஞ்சமிலா வாழ்க்கையினில்
ஏழ்மைக்கும் ஈடாய் இயற்றுவோ மெம்பாவாய்.


5. (மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

மாயனைப் பாடியே மாதவனை நாம்பாடித்
தூயோமாய்ச் சேவித்தால் தண்ணளியும் தாரானோ
சேயன் எனினுமே சேவைக் கரியானோ
ஆயர் குலவிளக்காய் ஆரா வமுதானான்
வேயர் குலவிளக்கால் வாழ்வில் துணையானான்
நேயன் நிமலன் நமக்கென்றும் அண்ணித்தான்
மாயப் பிறவி மயக்கறுத்தே மாமதியால்
ஆய தனக்கே அறக்கொள்வா னெம்பாவாய்.


6. (புள்ளும் சிலம்பினகாண் புள்ளைரையன் கோயில்

 புள்ளும் சிலம்பிற்றால் போதச் சிறகார்ந்து
கள்ளம் தவிர்ந்திங்குக் கண்ணனும் வாரானால்
குள்ளக் குளிரக் குடைந்துதிருப் பாவைக்கே
தெள்ளமுத விள்ளுரைகள் தீங்குரவோர் தாமியற்றிப்
பள்ள மடையாக்கிப் போந்தார்நம் நெஞ்சத்தை
விள்ளற் கரியனாம் வேதப் பெருமானும்
உள்ளம் கலந்தொளிர உற்றபொழு தாயிற்றால்
துள்ளி யெழுந்து தோய்ந்தேலோ ரெம்பாவாய்.


7. (கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து

கீசுகீ சென்றுநம் உள்ளம் கிளுகிளுப்பப்
பேசுதிருப் பாவைப் பலபதியம் பார்த்தனையோ
வாச நறுங்குழல் கேசவனும் நம்வாழ்வில்
தேசு பொலியவும் தீர்ந்தவன் சேவடிக்கே
ஆசு கடிந்தேநாம் ஆளாக ஆண்டாளும்
பேசும் திருவுளமும் திண்பொருளும் ஓர்ந்தனையோ
நாயகத் தென்மனமே! நாரா யணன்கீர்த்தி
வாசிக்க விண்ணும் விழைந்தேலோ ரெம்பாவாய்.


8. (கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு

கீழ்வானம் வெள்வரைக்க கோவிந்தன் வாசற்கீழ்
ஆழ்ந்தோம் அருமறைகள் ஆண்டாள் அருள்செய்ய
வாழ்ந்தோம் வரம்பெற்றோம் வையம் திருநாடாய்
ஏழ்மைக்கும் உய்ய இயன்றநல் ஈடாகித்
தாழ்ச்சி தவிர்ந்தோம் நமனுக்கிங் கென்கடவோம்
வாழ்ச்சி விழைந்தோம் விரிநீர் உலகெங்கும்
சூழ்ச்சி தவிர்ந்து சுடரும் மனத்துள்ளீர்
ஏழ்பாரு முய்ய இயம்பேலோ ரெம்பாவாய்.


9. (தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய

தூமணி மாடத்துக் கற்றுத் தெளிந்திடவே
தாமோ தரனார்க்குத் தக்க நெறியென்றே
நாமுணரச் சொன்ன திருப்பாவை நற்பொருளால்
ஊமையரோ முள்ள முணர்வெழுந்து உன்னதமாய்த்
தீமை யகன்று திறல்விளங்கு மன்பிற்குச்
சேமம் புகன்றிட்ட செய்யமறைப் பாவைக்கு
நாமம் நவின்று நலந்திகழ் கோதைக்கே
நாமென்றும் ஆளாய் நவின்றேலோ ரெம்பாவாய்.


10. (நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்

நோற்றுச் சுவர்க்கம் புகுந்தாலும் நாமினியும்
ஏற்ற அருந்துணையாய் ஈடன்ன பேருரைகள்
ஆற்றப் படைத்தோம் அழிவுறோம் ஆண்டாளைப்
போற்றிப் புகலடைந்தோம் பூமன்னு மார்பனடி
ஏற்றும் தகவுடையோம் இவ்வுலகம் வாழ்ந்திடவே
ஆற்றும் பணிகற்றோம் அல்லல் அகன்றிடவே
ஊற்றுப் பெருக்காகி உள்ளம் புரந்திடவே
போற்றித் தொழுது புகன்றேலோ ரெம்பாவாய்.


11. (கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

கற்றுக் குரவர் குணங்கள் பலபொலிந்து
உற்றார் உவகைக்கே ஓதுதமிழ் வேதத்தில்
பெற்ற பலபொருளும் பேணும் மறைமுடியாய்
உற்ற திருப்பாவை ஓதினாள் நற்பாவை
கற்ற மதியுடையோம் கண்ணன் கழலிணையே
உற்ற கதியுடையோம் ஊக்கத்தில் ஒன்றானோம்
எற்றைக்கும் யாம்கவலோம் எவ்வுலகும் சுற்றமென
உற்ற உணர்வில் உகந்தேலோ ரெம்பாவாய்.


12. (கனைத்திளம் கற்றெருமை கன்றுக் கிரங்கி

கனைத்திளம் கற்றவர் கல்விக் கிரங்கி
நினைத்துளம் வீற்றெழில் நாரணர்க் காக்கும்
பனித்துடல் மெய்விதிர்ப்பப் பத்திமை செய்யும்
குனித்தவக் கோவலன் கொண்டிடச் செய்யும்
தனித்தவம் மாற்றித் திரள்விசும் பாற்றும்
வினைமுகம் பாற்றியே விண்ணெறி காட்டும்
மனத்துக் கினியநம் மாதவன் கோதை
புனைந்த தமிழ்மாலை போற்றுவோ மெம்பாவாய்.


13. (புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனை

புள்ளின்வாய்க் கூற்றினில் பார்வண்ணம் கண்டெழுந்து
கள்ளம் தவிர்ந்துநீ கோதைமொழி கூறாயோ?
உள்ளம் புலர்ந்துநீ உத்தமனை நாடாயோ?
விள்ளற் கரியபொருள் விந்தையாம் பேருரைகள்
மெள்ள உனக்கே முயங்கித் திளைத்திடவோ?
தள்ளத் தகுமோ? தரணிவாழ வேண்டாமோ?
பிள்ளைப் படியுரைத்துப் பாருலகு தானுய்ய
மெள்ளப் புகன்று முழங்கேலோ ரெம்பாவாய்.


14. (உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

உங்கள் புழக்கத்தால் உள்ளத்துள் கோவிந்தன்
திங்கள் கதிர்முகம் தண்ணருள் செய்துநின்றே
எங்களை முன்னம் எழுப்பிடச் செய்தானால்
சங்கத் தமிழ்மாலை சூட்டும் சுடர்க்கோதை
துங்கப் பொருளுரைக்கும் தூயோர்தம் தெள்ளுரைகள்
அங்கப் பறைகொள்ளும் ஆர்வத்தால் வாசற்கண்
சங்கை அகற்றியே சேர்ந்தியாம் கற்பதற்கே
நங்களோ டுங்களை நாடிவந்தோ மெம்பாவாய்.


15. (எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ

எல்லே இளம்நெஞ்சே! இன்னம் தயங்குதியோ
அல்லல் படுவதுமேன் ஆன்றோர் உரையுளவே
வல்லையுன் கற்பனைகள் வாலறிவும் யாமறிதும்
வல்லீர்நும் பேருரையில் யானேதான் ஆழ்ந்திடுக
ஒல்லைநீ இவ்வுலகிற் கோதாமல் உந்தனக்கோ
எல்லாரும் தோய்வாரோ தோய்வார்தாம் தோய்ந்தறிய
வல்லானை ஆழ்வார்கள் வாழ்வான விண்ணாண்டாள்
நல்லானை நம்பியைநாம் பாடேலோ ரெம்பாவாய்


16. (நாயகனாய் நின்றநந்த கோப னுடைய

நாயகன் நாரணன் நங்கையராம் நல்லுயிர்காள்
வேய்ங்குழல் ஓசை விதித்த திருப்பாவை
மாயனை நாடித்தான் மாதவனார் கோயில்முன்
தூயோர்தம் தொல்லுரைகள் நற்றுணையாய் நாமணுகி
ஏய்ந்தமன மென்னும் இணங்குநல் காவலனால்
தோய்ந்த உளமென்னும் நந்தகோ பன்தன்னால்
ஆயன்தான் ஆதியில் நேர்ந்த உயிர்த்தொண்டே
வாய்ந்துநாம் வாழ விழைந்தேலோ ரெம்பாவாய். 


17. (அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்

அம்பரமும் தண்ணீரும் சோறும் நமக்காகும்
உம்பர்கோன் உத்தமன்பால் உள்ளும் உயிருமாய்
எம்பிரான் தாளிணையில் என்றுமே காதலாகிச்
செம்புலத்துப் பெய்நீராய்ச் சேர்ந்தென்றும் ஒன்றிவாழும்
அம்புலத்துக் கான்றவழி ஆண்டாள் தகவுரைத்தாள்;
நம்பிகாள் நங்கைமீர்காள் நாடுமினோ நல்லுரைகள்;
நம்பரும் நன்மையெலாம் நானிலம் காணலாகும்
வம்புலாம் சீர்திகழ வாழ்த்தேலோ ரெம்பாவாய்.


18 (உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்

உந்து மதகளிறாய் உன்மத்த மாகிமனம்
தந்ததொல்லை தீரத் திருப்பாவை தான்தந்தாள்
அந்தமிலா வாழ்ச்சிக்கே அச்சாரம் தானானாள்
கந்தம் கமழும் குழலால் கிருட்டினனைப்
பந்தித்து வைத்தே பரமாகத் தந்தருளிச்
செந்தமிழ் வேதியர்க்கே செப்பும் மொழியானாள்
வந்தித் தவருரைத்த வானுரைகள் வாசித்தே
சிந்தித்து வாழ்பொருளே செப்பேலோ ரெம்பாவாய்.



19. (குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

குத்து விளக்காகிக் கோதுகலப் பாட்டாகி
வித்துமாய் வீட்டிற்குத் தானாம் திருப்பாவை
நத்தி நமக்காக நாச்சியார் தானருளப்
புத்தியோகு தானருளும் பூரணன் பள்ளிகொள்ளும்
தத்துவமும் தண்தகவும் தெள்ளுரைகள் தாம்விளக்க
எத்துக்கிவ் வின்னாமை இப்பாரைத் தான்நலியும்
தித்திக்கும் பாடல் திகட்டா அருளமுதம்
பத்தியுடன் பாடிப் பொலிந்தேலோ ரெம்பாவாய்.



20 (முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

முப்பத்துப் பாட்டிற்குள் மாதவனைப் பூட்டியே
எப்போதும் நந்தமக்கே எய்ப்பில்வைப் பாக்கினாள்
செப்பன்ன மென்முலையாய்ச் சீருரைக்குள் ஆட்பட்டே
அப்பாஞ்ச சன்னியனும் ஆரா வமுதானான்
கப்பம் தவிர்த்திங்குக் காதலாய்க் கண்ணனுக்கே
எப்போதும் ஏங்கி இயல்வதாம் வாழ்விதனில்
முப்பதும் முந்துரையும் உக்கமும் தட்டொளியாய்
இப்போதும் என்றும் இயம்பேலோ ரெம்பாவாய்.



21 (ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

ஏற்ற நலங்கள் இயல்வாகித் தாம்சுடர
மாற்றா மதிநலத்தால் பேருரைகள் தாமொளிரப்
போற்றியாம் பாடத் திருப்பாவை தந்தருளி
ஆற்றப் படைத்தவர் அஞ்சுகுடிக் கோர்மகளாய்
ஊற்ற முடைய உத்தமனைத் தான்வரித்தாள்;
நாற்றத் துழாய்முடி நாரணனை நாம்பெறவே
தோற்றே அவள்தமிழில் தொல்புகழ் பாடிப்போய்
ஆற்றா தடிபணிந்தே ஆழ்ந்திடுவோ மெம்பாவாய்.



22. (அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான

அங்கண்மா கர்வத் தகங்காரம் விட்டகன்று
செங்கமலை தானருளச் செய்யதிருப் பாவைக்கே
எங்கள் இதயமெலாம் ஏக்கமும் கொண்டதுவால்
மங்காப் புகழுடைய மாகுரவோர் தம்முரையால்
சங்கத் தமிழ்மாலைச் செய்யபொருள் போந்ததுவால்
திங்களும் ஒண்சுடரும் தண்கதிர் கண்மலர
எங்கள்மேல் சாபம் இழிந்து திருமாலும்
அங்கண்ணால் நோக்கி அருளேலோ ரெம்பாவாய்.



23. (மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

மாரி பெயல்நெஞ்சில் மாவுணர்த்தும் காலத்து
வேரி கமழ்சிந்தை வீடளிக்கும் வேராகிச்
சீரிய சிங்கா தனமாம் திருப்பாவைப்
பேரியல்வே பல்குநல் பாங்கான பேருரைகள்
மூரி நிமிர்ந்து முழங்கிடவே யாம்வந்த
காரியம் ஆராய்ந்து கண்ணன் கருணையினால்
சீரிய சிந்தையும் சிந்தாநல் பத்திமையும்
ஆராய்ந் தருளநாம் ஆர்த்திடுவோ மெம்பாவாய்.



24. (அன்றிவ் வுலக மளந்தா யடிபோற்றி

அன்றிவ் வுளமெலாம் ஆண்டாள் அடிபோற்றி
சென்றங்கு நம்மகந்தை செற்றாள் திறல்போற்றி
பொன்றவே சங்கை புகன்ற உரைபோற்றி
கன்றுதீய சிந்தை கெடுத்தாய் கழல்போற்றி
குன்றாத காதல் கொடுத்தாய் குணம்போற்றி
வென்றே எமையெடுக்கும் நின்தாள் விறல்போற்றி
என்றென்றுன் பாசுரமே ஏத்தி உரைகொள்வான்
இன்றுயாம் வந்தோமால் ஏற்றேலோ ரெம்பாவாய்.



25. (ஒருத்தி மகனாய்ப்  பிறந்தோ ரிரவில்

ஒருத்தி மொழியாய்ப் பிறந்தே உரவோர்
அருத்த வுரையாய்ப் பரந்தே ஒளிர
தரிக்கிலா தாகிநம் தீங்கு கழியக்
கருத்தைக் கவர்வித்துக் கள்ளம் அகற்றி
விருப்பென்ன நின்ற நெடுமாலாய் வேயர்
திருப்பாவை தந்த தமிழால் திருமால்
திருத்தக்க அன்பால் தமியர்யாம் பட்ட
வருத்தமும் தீர்ந்துநாம் வாழ்ந்தேலோ ரெம்பாவாய்.


26. (மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்

மாலாய் மனவண்ணம் மாதவற்கே ஆகிடுமால்
வாலறிவர் தாம்விரித்த வானுரைக்கே ஏங்கிடுமால்
பாலாழி விட்டிங்குப் பார்வண்ணம் தாங்கிடுமால்
நூலாழி நுட்பம் நுவன்றநம் கோதைக்கே
மாலாகி நெஞ்சழிய மன்னுபெரு வாழ்வுக்காம்
சாலப் பெரும்பறையும் சங்கமுடன் நீள்கொடியும்
ஞாலமெலாம் உள்ளடக்கும் ஞான விதானமும்
ஆலின் இலைகிடந்தே ஆள்வானை ஆண்டாளைக்
கோல விளக்காகக் கொள்வோம்நாம் எம்பாவாய்.



27. (கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்றன்னைப்

கூடாரைக் கோவிந்தன் வெல்லும் உரையாகி
நாடாரை நாரணர்க்கே ஆட்படுத்தும் ஆண்டாளைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்
நாடும் நயக்கும் நல்லுரையும் நாவினிக்கச்
சூடகமும் தோள்வளைக்கும் மாலுக்குத் தோதாகிப்
பாடும் அகச்செவியின் பூவாகிப் பேருரைகள்
ஆடும் பொருளாழம் ஆடையும் பாற்சோறும்
மூடுநெய் தோய முழங்கேலோ ரெம்பாவாய்.



28. (கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்

கறவைகள் புன்சிரிக்கும் கல்விக்கே தேர்ந்தோம் 
துறவிலோம் திண்மையிலோம் தீமைக்கே கற்றோம்
அறமிலாப் பாரிதனில் ஆண்டாளைப் பெற்றோம்
குறையொன்று மில்லாத கோதைமொழி கற்றோம்
உறவேல் நமக்கென்றும் ஓதுமுரை உற்றோம்
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் செய்யும்
சிறுமை மதிமாற்றிச் சிந்தையினை ஆளும்
பொறுமை யுனக்கேயாம் போந்தேலோ ரெம்பாவாய்.



29. (சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

சிற்றஞ் சிறுகாலே நின்திருப் பாவையினை
முற்றா மதியுடையோம் வந்துநாம் சேவித்துப்
பெற்றதாம் பேருரைகள் நல்கும் பொருளாழ்ந்து
கற்றுன் திருவடிக்கே குற்றேவல் யாம்வாய்ந்தே
இற்றைப் படிப்பால் இயம்பியசொல் அன்றுகாண்
இற்றைக்கும் என்றைக்கும் நின்னருள் பாவையினால்
உற்றோமே யாவோம் உலகெலாம் ஒன்றாவோம்
மற்றைநம் வேகங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.



30. (வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்

வங்கக் கடல்கிளர்ந்த மாவுரைகள் காட்டுபொருள்
திங்கள் முழுதும் திருப்பாவை தான்விளங்க
எங்கள் இயல்வும் எமைக்காக்கும் தன்னியல்வும்
மங்காப் புகழ்பறையாம் மாதவனார் சேவடியும்
சங்கத் தமிழிசைத்து நங்கள் குலம்வாழ
அங்கத் திருப்பாவை ஆண்டாள் அருளியவா
பொங்கு மலியுவகை பூரிப்பத் தாம்சொல்வார்
எங்கும் திருவருளால் தாம்மகிழ்வ ரெம்பாவாய்.

* * *

திருப்பாவை முப்பதில் தீந்தமிழால் வீடும்
அருள்பாவை போற்றிப் புனைந்தேன் - மருள்தீர
மார்கழியில் ஆண்டாளம் மாதவனை மன்னியசீர்
ஆரமுதப் பாவின் அருள். 

***

Saturday, November 27, 2021

மாமுனிவன் மீது இருபது

எந்தக் கருத்தால் திருவரங்கர் தாம்பணித்தார் 
எந்தக் கருத்தால் தனியனிட்டார் -- அந்தமிலா
நான்மறையின் நற்பொருளை நற்றமிழின் உட்பொருளைத்
தேன்மறையாய் ஆக்கிடவே தந்து. 

தந்ததமிழ் கண்டு தரணியெலாம் மிக்குயர
நந்தமிழ்த மிவ்வமுதைக் கண்டயர -- முந்துமுகிழ்
மொக்குள் படைப்பாற்றும் முன்னவனும் கேட்டயர்ந்தான்
சிக்கில் கிடாரத்தான் மாண்பு 

மாண்பெரிய வைய மகத்துவ மேதென்பீர்
காண்பெரிய நம்பெருமாள் கட்டளையே -- சேண்பெரிய
நாட்டோனும் நற்குருவின் நற்திதியைத் தன்செலவால்
கூட்டியிங்குத் தானியற்றும் தீர்வு 

தீராத ஐயமெல்லாம் தீர்த்தான் தெளிபொருளைப்
பேராமல் நெஞ்சினிலே தான்விதைத்தான் -- சோராமல்
வையமெல்லாம் காக்கின்ற வாசுதேவன் பொங்கரவில்
பையத் துயிலும் மகிழ்ந்து 

மகிழ்மாறன் வந்தனனோ மாதவனோ மீண்டான்
முகிழ்த்தநகை எம்பெருமா னாரோ -- புகழீட்டில்
போந்தபொருள் தான்விரித்தான் பொன்றுமறம் தான்தடுத்தான்
வேந்தனவன் கொண்டசெங்கோல் தண்டு. 

தண்டிரைசூழ் வையம் திருமாலுக் கேயாகி
எண்டிசையும் ஏத்துகின்ற இன்னொலிக்கே -- விண்டே
சுருதியார்க்கும் செந்தமிழ்த்தேன் வண்டயரும் விண்பூ
கருதியார்க்கும் ஓர்தல் அரிது. 

அரிதாமால் வையத்தில் நற்பிறவி இன்னும்
அரிதாமால் ஆன்றகலை அத்தனையும் கற்றல்
அரிதாமால் நாரணர்க்கே ஆளாகி நிற்றல்
அரிதாமால் மாமுனியின் சீர் 

சீர்மல்கும் பொன்னித் திருவரங்கச் செல்வர்க்கே
பார்மல்கும் ஈடளித்தான் மாமுனிவன் -- கார்மல்கும்
ஆரருளே ஓருருவாம் ஆன்றயதி ராசன்தான்
பேரருளாய் மீண்டுவந்தா னிங்கு 

இங்கேனும் ஆகவன்றி அங்கேனும் ஆகட்டும்
எங்கேனும் நம்முயிர்க்காம் ஈடுளதேல் -- மங்காத
ஞானத்தில் மாசில்லா பக்தியில் மாதவற்குப்
போனகமாய் ஆகிநிற்கும் பண்டு.

பண்டே உலகும் அறிந்ததுகொல் பாரதர்க்குச்
சண்டை நடத்தி முடித்தபிரான் -- விண்டநெறி
பாருலகு தானறிய வந்தயதி ராசர்தாம் 
ஈருருவாய் வந்தவருள் மீண்டு

மீண்டுமிங்கு வந்ததுகொல் பொன்னூழி மாதவற்கே
ஈண்டு விளைந்ததுகொல் பொற்காதல் -- யாண்டும்
அரங்கேசர் தாமரங்கில் தந்துவந்த வாழ்த்தே 
சிரங்கொள்ளும் பூவுலகம் இன்று.

இன்றோ அவன்மூலம் ஈருலகும் ஒன்றாமோ
சென்றோ அவனும் சுருள்படியும் இட்டதுவும்
வென்றோ கலியெல்லாம் மாமுனிவன் வாழிடத்தைப் 
பொன்றாமல் காக்கும் அருள்.

அருள்கொண்டோ ராயிரமாய் ஆன்றமறை ஈந்தான்
பொருள்கொண்டு பாடியமாய்ப் பிள்ளானால் தந்தான்
மருளகற்றி மக்களுய்ய நம்பிள்ளை ஈட்டை 
அருளப்பா டந்தணனாய் வந்து.

வந்தணைந்த செய்யதவம் சீர்வசனத் தாழ்பொருளை
மந்தணமாம் முப்பொருளைப் பேராமல் -- அந்தமிலாத்
தத்துவ முப்பொருளைத் தண்குருகூர்த் தீந்தமிழை 
நித்தமும்நாம் கற்கச்செய் தான்.

தானுகந்த அந்தாதி பாடும் அமுதனவன்
வானுகந்த போகம் விடுத்தானோ -- தேனுகந்த
தெள்ளுரையால் சீரடியார் காயத்ரி தான்விளக்கும் 
அள்ளுசுவை ஆசைக்காட் பட்டு.

பட்ட சிரமம் பெரிதால் பயில்வோர்க்கே
இட்டகலை யேடும் கிடைப்பரிதால் -- நிட்டையாய்
நீள்வயதில் ஆழ்நிசியில் நூல்காக்கும் மாமுனிவன் 
வேள்வியில்நம் உள்ளம் அவிசு.

அவிசன்னம் நாய்நுகர்தல் ஒத்ததே மாலின்
புவிமக்கள் மற்றவைபின் னேகல் -- கவிக்கோதை
சொல்லில்வாழ் தூயனுக்கே நம்வாழ்வைச் சொத்தாக்கும் 
வல்லமையால் வென்றான் முனி.

முனிந்தமுனிப் பின்னேகிக் கற்றான் பெருமாள்
முனிவில்லா அந்தணன்பால் கற்றதுவும் கண்ணன்
கனிந்தநல் லாசிரியன் கிட்டாமல் ஏங்கி 
முனிவன்பால் கற்றானோ ஈடு.

ஈடும் எடுப்புமில் ஈசன் உவந்திங்கே
ஈடளித்த பெற்றிக்கே என்னுள்ளம் தானுருகும்
காடுவாழ் மானிடராய்க் காகுத்தன் தோன்றலாய் 
நீடுபுகழ்ப் பெற்றிமையும் விஞ்சு.

விஞ்சுமிருள் தானகல வீறுடன் ஆன்றவுயிர்
துஞ்சுங்கால் நற்றுணையா தான்வருமே -- மிஞ்சுகுணம்
வான்பொலியும் நம்மின் மணவாள மாமுனிவன் 
தேன்பிலிற்றும் தாளிணையே நந்து. 

சாற்று வெண்பா -

மாமுனிபால் அன்புற்றே மோகித்த ரங்கனவன்
காமுற்றுச் சொற்றக் கலையிதுவும் - தாமுற்றார்
எந்நாளும் எந்நிலையும் எவ்விடத்தோர் எத்தொழிலோர்
அன்னார்தம் அன்பால் தமர்.

ஸ்ரீராமானுஜர் மீது இருபது வெண்பா

எம்பெரு மானார்க்கே தோய்ந்த இதயத்துச்
செம்பொருள் நாட்டம் சமைந்ததுவால் - நம்பெருமாள்
ஈந்தவருள் ஈண்டு திருவருளாம் என்றிங்குப்
போந்த இருபதுவெண் பா. 


தெண்ணீர பொன்னித் திரைகலங்கும் காலத்தே
உண்ணீர்மை ஊட்ட உலகிதனைக் - கண்ணீரால்
காத்த குணவாளன் கோத்தநெறி கூர்வதினால்
பூத்துவரும் புத்துலகு பார். 

பாரோர் பலரோய்ந்து பானாள் விளக்கானார்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் காதலித்த
ஏரார் எதிராசர் எங்கள் கதியானார்
ஓரார் எவரிதனை ஓர்ந்து. 

ஓர்ந்து உவப்புற்றார் உத்தமர்க்கே ஆளானார்
சோர்ந்து தவிப்புற்றால் செய்வதெவன் - சீராரும்
செந்நெல் கவரியிடும் சங்கத் தமிழ்ச்செல்வர்
இந்நாளில் இன்புற்றார் ஈண்டு. 

ஈண்டு புலர்ந்ததுவோ ஈருலகம் ஒன்றாமோ
மீண்டும் சிறந்திடுமோ மாநெறியும் - நீண்டதன்
தாளால் உலகளந்த தன்னருளும் இவ்வுலகில்
வாளா விருந்திடுமோ தான். 

தானாய்த் திரிவார் தறுகண்மை யால்தரணி
பான்மை இழந்த பசப்பறவே - பூன்றநற்
பொற்குணத்தான் சிற்குணத்தின் செம்மை புலத்தி
நற்குணர்த்தும் ஏந்தலவன் நூல். 

நூல்நுவன்ற மாட்சியோ மால்பயின்ற நெஞ்சதோ
ஆல்துயின்ற சேய்வயிற்றில் அண்டமெல்லாம் ஆன்றபோல்
கால்பயின்ற திக்கெலாம் கார்பயின்ற ஓரருள்
கோல்பயின்று நின்றதாம் கோயில். 

கோயில் மணவாளர் கொள்ளைகொளும் நெஞ்சத்தை
வாய்மொழியில் தாமிழந்தார் வார்த்தைக்கே - ஆயும்
அறிவுடையார் அந்தண்மை ஆளும் தமிழில்
செறிவுடையார் செய்தவமே தாம். 

தாமுகந்த தெவ்வுருவம் நன்றாய்த் தமருக்கே
தோமற்ற ஓருருவில் தோன்றியிவண் - தாமாய்த்
திரமாய்த் திருவரங்கம் தீர்ந்த நிலையாய்
வரம்தரும் வான்குரு வந்து. 

வந்தார் வருகவென்று வாராரும் வந்துவப்பச்
செந்தமிழ்க் கோதையும் செப்பினாள் - அந்தமிலா
ஆர்வத் தமிழ்க்காதல் ஆன்றமறை அண்ணர்தாம்
ஓர்ந்திட்ட திட்டம் உரை. 

உரைகொள் திருமொழிகள் உள்ளுவக்கும் ஈடால்
உரைசால் திருவாய் மொழிக்கே - கரைகடந்த
அன்புற்றார் ஆன்றதமிழ்ச் சொல்லுற்றார் சிந்தையினில்
மன்னிடவே இங்குற்றார் மீண்டு. 

மீண்டுவந்த ஊமன் மொழிந்திட்ட வார்த்தையே
யாண்டும்கொள் நெஞ்சேநீ யெவ்விடத்தும் - பாண்டவர்க்காய்த்
தேர்நடத்தும் தாமோ தரனார்ப் பெருவார்த்தை
நேர்நடத்தும் ஆசிரியன் நன்று. 

நன்றுரைத்தான் தீந்தமிழைத் தெய்வ மொழியென்றான்
மன்றுரைத்து மண்ணுலகில் மன்னவைத்தான் - என்னுரைப்போம்
கன்றுரைத்த கால்மாற்றும் தீங்குழலார் கண்ணற்கே
அன்பூறும் பண்புடையோ மால். 

மாலாகி நெஞ்சம் மகிழ்ந்திடவே மன்னுதமிழ்க்
கோலோச்சும் கொள்கைத்தாய்க் கொண்டாட்டம் - வேலோச்சும்
வீசுவிழி மாதர் விறல்நேச மாமல்லர்
ஆசறவே கொண்டான்தான் ஆள். 

ஆட்கொண்டான் ஓரரங்க மாளிகையை அன்புகொண்டே
ஆட்கொண்டான் ஊமைதனை ஆர்கழலால் - வேட்டிருந்த
மாமறையோர் கூரேசர் மன்னும் சொலவுகற்றார்
காமுறுவர் கல்லா நெறி. 

நெறிநின்ற நின்மலர்க்கே போயொளித்துக் காட்டில்
முறிவெண்ணை உண்டொளிக்கும் பத்தி - வெறிகமழும்
நம்மாழ்வார் சொல்லாரும் நற்பொருளே நாட்டியெழும்
அம்மாநல் பாடியத்தின் மாண்பு. 

மாண்புறுநல் சிந்தை மகிதலத்தின் வாழ்ச்சிக்கே
சேண்குன்ற நாடர் சிறந்தவரம் - பாண்மிழற்றும்
வண்டூது போதலரும் வாய்ப்பினால் வாய்மொழிக்குள்
கண்டுழாய்க் கோலம் பயில். 

பயின்றும் துயின்றும் பயந்தும் புலர்ந்தும்
செயிர்க்கும் உயிர்கட்கே சேமம் - நயக்கின்ற
தாயாய்த் தமப்பனாய் எல்லாம் திருமாலாய்
ஆய்ந்துரைத்தான் ஐயன் இனிது. 

இனிதாகும் இவ்வுலகு அவ்வுலகும் நன்றே
புனிதராய்ப் போந்தார் பொலிய - மனிதரே
வாழ்ந்தார் எனநயக்கும் விண்ணும் வரக்கண்டு
வாழ்த்தும் முதல்தாய்ப் பொலிவு. 

பொலிந்தது பூதூர் புகழ்மலி கச்சி
பொலிந்தது பொன்னரங்கம் வேங்கடம் பூத்துப்
பொலிந்தது பூமி புலர்ந்தது வாழ்வு
பொலிந்தது பாரத நாடு. 

நாடுவார் நாற்பயன் தேடுவார் நன்மையே
கூடுவார் கோயின்மை கொள்ளுவார் - பாடிய
சேண்பொருள் சிந்தை அருளிச் செயலதாம்
கோனெதி ராசர்தம் காப்பு. 

***

ஸ்ரீராமகிருஷ்ணர் விவேகாநந்தர் மீது

1)
துங்க மிகுத்திடு தேச பரப்பிதில் தீர்வெனவே
எங்கணும் ஓங்கிய ஏக்கமும் ஏற்றிடு ஏருருவாய்க்
கங்கையும் தங்கிடும் பிஞ்ஞகன் கூடவே காப்பிடவும்
வங்கமும் பெற்றது நல்வர மாமென வந்தவனே. 

2)
வந்தனம் தந்து வரம்பல நல்கும் வளரிமையோர்
எந்தனம் என்று இயற்றிய மாதவம் எழிலுருவாய்ப்
பந்தனை தீர பரதநல் நாட்டின் பரங்கதியாய்
வந்தனை அம்மா வரதனே ராம கிருட்டினனே 

3)
கிருட்டினன் எங்கே விசயனும் அங்கே கலியுகத்தில்
உருவென வந்தார் உலகைப் புரந்தார் உணர்வெழவே
பருவடி வாகிப் பாரெலாம் காணப் பரமஹம்ஸ
குருவெனக் குலவும் குணவடி வாம்விவே கானந்தா 

4)
அந்தமி லாதியில் அப்பரம் பொருளும் ஒன்றெனவும்
தந்தம் மதத்தினில் வந்தவர் செல்வதும் அங்கெனவும்
எந்த வழியிலும் எவ்வெவர் நிற்பதும் ஏற்பெனவும்
இந்த உலகில் இன்றுமே உணர இயம்பினனே 

5)
இயம்பிய நற்பொருள் எங்கும் விதைத்த நரேந்திரனும்
தயங்கிய துய்ப்பினைத் தந்தவன் பின்னர் தடைவிதித்து
மயங்கிய மானிடம் வாழ்ந்திட வந்த மருந்தெனவே
அயன்படைப் பிங்கே அரியுரு என்றுணர் வித்தனனே. 

6)
வித்தென இட்டவன் காளியின் பத்தன் விதிவசத்தால்
பித்தம் பிடித்ததும் பாரத மக்கள் சதிவசத்தால்
நித்தம் படும்பல அல்லலுக் கிங்கே மதியொளியாய்
உத்தமன் வந்தனன் உணமை உணர்த்தும் கதிரொளியே 

7)
ஒளிக்குலம் ஓங்கிட ஓங்கிடும் உண்மையில் வேதமெலாம்
அளிக்குணம் ஓங்கிட ஓங்கிடும் தண்மையில் போதமெலாம்
நளிர்மதி ஓங்கிட ஓங்கிடும் கங்கைச் சடையினிலே
களிப்புனல் ஓங்கிட ஓங்கிடும் எங்கள் கதிப்பயனே 

8)
பயனாய்ப் பரதமா நாட்டிடைப் போந்தப் பழந்தவமாய்
அயனாய் அவதியில் வீழ்ந்திடும் நாட்டின் புனர்விதியாய்ச்
சயமாய்ச் சகமெலாம் ஆன்மிகம் நந்தும் சனாதனமாய்த்
தயையாய் உவந்தருள் தாகுர் நரேனின் திருவரவே. 

***

வைணவ ஞானியர் ஐவர்

1) 
மாமதிள் கட்டிய மங்கைக் கிறைவன் பராங்குசனைச்
சேமம் தருமோர் சரணெனக் காட்டிப் பராவியதால்
நேமம் மிகவே நெறியென நின்றத் தமிழ்விழவில்
நாமும் நலந்திகழ் நாரணன் நாமம் நவின்றுயவே

2)
உய்யும் வழியாய் உவந்து வருவான் உரைதருவான்
மெய்யும் நமக்கருள் மாதவ னேயாம் மகிதலத்தீர்
எய்தும் வினையும் எதிரும் பலன்களும் எய்ப்பினிலே
பொய்யிலா வைப்பாய் பொருந்துநற் பேறும் பராங்குசனே

3)
பராங்குசன் தாளைப் பரவும் அடியார் பொலிந்திடவே
தராதலம் எங்கும் இசையொடு தாளம் திகழ்விண் ணப்பம்
பராவிடச் செய்த பரமநல் நாத முனிவனவன்
சராசர மெங்கணும் சார்ங்கனைக் கண்ட தரிசனமே.

4)
தரிசனம் தந்திடும் மாதவன் யோகிக் குருகையப்பன்
சிரசை அழுத்தியே சொட்டைக் குலத்தர் எவரெனவே
திருமகள் ஏங்கத் துடிப்புடன் பார்க்கும் திருவருளின்
பெருமை பெரிதால் யமுனைத் துறைவர் திருவடிக்கே

5)
அடிக்கீழ் அமர்ந்து புகுதரும் ஆழ்வார் அருட்பொழிவில்
படிக்கும் அடியவர் பக்குவம் சார்ந்து பொருள்துலங்கும்
தடிக்கும் வினைக்குத் தடையாம் யதிக்கோன் திருவுளத்தால்
நடிக்கும் எனக்கும் நயக்கும் அருளும் பொலிந்திடுமே.

***

விவேகாநந்த வெண்பா

வியனுலகு தான்மகிழ வாய்த்தவே தாந்தன் 
செயம்பெறுக கண்டகனா சீர்கொள் - புயலாகிப்
புன்மை கடிந்தான் பொருள்தந்தான் வாழ்விற்கே
என்னுக் கடவோ மியாம்.

யாமம் கடந்ததுவால் ஈரிருளும் இற்றதுவால்
ஓமத்தீ யென்றிங்கே உண்மை யெழுந்ததுவால் 
பூமடந்தை பொறையும் பலித்ததுவால் புண்ணியனும் 
சேமக்காப் பானா னிவண். 

வண்புகழ் நாரணனார் வாழ்வளிக்க வந்திட்டார்
கண்திறந்த காசிநாதர் காக்கவந்தார் - எண்ணரிய 
யோகநிலை ஆழும் இருடியிவ ரென்றென்றே 
ஆகமகிழ் ராமகிருஷ் ணர். 

ஆமென்றும் உளதாய் அகிலமெலாம் உள்நின்று
ஓமென்ற ஒன்றாய் நிலவுவதே - நாமென்றும் 
உண்மை இயல்பினில் ஓங்கும் உலகென்றான் 
தண்மைச் சுடர்மொழியே காப்பு. 

கல்லூரி கற்கும்நாள் கற்றவர் தாம்வியப்ப
நல்லூற்றம் தான்கொண்டு நாடினான் - அல்லொத்த 
காளியருள் காதல் கருணை அவதாரன் 
தாளிணையே தான்புகலாய்க் கொண்டு. 

கொண்டொளித்த காலந்தான் மீண்டுதவ வந்தனனோ 
விண்டொளிரும் வான்கருத்தே ஈந்தனனால் - எண்கடந்த 
ஐயனாதி சங்கரனார் அத்வைத போதத்தை 
உய்வகையாய்த் தந்தா னுவந்து. 

உவந்து வழிநடந்து ஊரெல்லாம் சுற்றி
அவஙகள் மலிய ஆற்றான் - பவங்கடந்த 
முக்திநிலை தான்துறந்தான் மக்கள் நிலையுயர 
பக்தி அதுவானான் பற்று. 

பற்றினான் பற்றற்றான் பார்மக்கள் நன்மையே
முற்றினான் மாயமிலான் மூதறிவில் - எற்றுக்காய் 
இன்புதுன்பில் எற்றுண்டு இவ்வுலகில் உற்றுழல்வாய் 
அன்பவன்பால் வைத்திடு நீ. 

நீள்துயிலும் போயிற்று நில்லா உலகிதனில் 
ஆள்வார்கள் ஆண்டவரும் போயொழிந்தார் - மாளாத 
ஞானத்தால் மாநிலத்தில் ஞாயிறென நம்நாடு 
ஊனமின்றி ஓங்கும் உயிர்த்து. 

உயிர்கள் உலவும் அரியென்றே கண்டு
பயிலும் பலதொண்டே பக்தி - மயர்வகற்றி 
மாதவனார் சந்நிதியாய் மாநிலத்தைக் கண்டக்கால் 
போதமெழும் ஆங்கே உணர். 

உணர்வெழுந் துள்ளக் கமல மலர்ந்து
தணவா தெழுபரிதி தானணைந்து - குண்டலினி 
நாகமெனத் தான்வளைய நிட்டையுற்ற அன்னத்தை 
வேகமுறு வேலை தொழும். 

தொழப்போம் பொழுதில் தனதுயர் எண்ணான் 
விழப்போம் மனிதகுல வீறாய் - எழுமினென்றான் 
தீரமே ஆன்றவழி திண்மைவிவே காநந்தன் 
சாரமொழி சிந்தைசெய் வாம். 

வாம்பரித்தேர் தாம்செலுத்தும் தாமோ தரனானார் 
ஆம்பரிசாய் அன்றளித்தார் கீதையே - நாமறிய 
நானில மெங்கெங்கும் நாரா யணநரனாய் 
ஆனார் இராம கிருஷ்ணர். 

குமரியன்னை நோக்கக் கடுந்தவத்தில் ஆழ்ந்தான்
அமரிக்கர் அவைநடுவண் ஆன்மிகத்தூ தானான் 
தமதுள்ளப் போதேறித் தூயன்வீற் றானால் 
நமதுள்ளம் வீற்றா ரவர். 

நல்லவராய் நிற்பீர் துணிவுடன் வாழ்வீர் 
பலவித சித்தாந்த அல்லல் தலைவலியேன்? 
கோழைகளே பாபம் புரிவர் குவலயத்தில் 
வாழும்வழி அன்பொன்றே யாம். 

மனிதராய் நில்லுங்கள் மக்களையே ஊக்கித்
துணிவில் கனிவினில் நன்மையில் நின்றிடவே 
செய்தல் கடனாம் மதம்வே றுமக்கில்லை 
உய்வகையும் தானே உறும். 

தலைவரெனத் தாம்நடத்தல் எத்தகை யோர்க்குமாகும் 
ஆகாவாம் தொண்டின் திறம். 

*
நின்றான் நிலவுலக நல்லோர் அவைக்கணத்தே 
பொன்றாப் புகழ்ப்புலரி பூவிரிய - வென்றான்தன் 
ஆன்மிகத்தால் மன்பதையை ஆண்டான்தன் அன்பினால் 
ஊனமற உண்மையால் அன்று. 

*
அன்றிவ் வுலக மளந்தான்கொல் அன்புடனே
சென்றிவ் வுலகம் நடந்தான்கொல் - கன்றுடனே 
தீங்குழலும் தெய்வத்தண் கீதையும் சொற்றான்கொல் 
ஈங்கிவன் பேசியநல் மாண்பு. 

பூத்துக் குலுங்குக பாரதம் புன்மையை 
நீத்துக் குலுங்குக நன்னெறி - ஆத்தும
ஞானத்தில் ஒன்றும் மனிதரின் ஞாலமிங்கு  
வானத்தை நேர்கொண்ட தால். 

ஆல்கீழ் அமர்ந்தான் இலைஆல் துயின்றானால் 
நால்வர்க் குணர்த்தியகைக் காட்டுகொல் - வாலறிவன் 
போந்தான்கொல் பொங்கொளி வீசும் புதுமொழியில் 
ஓம்தான் உலவிய தால். 

*
உலகமோர் ஆரஞ் சுறுரசச் சொட்டும்
விலகாமல் வேட்பனென்றார் இங்கர்சால் - உலகப் 
பழத்தினைநீர் என்வழியால் பூரணமாய்த் துய்ப்பீர் 
அழகாக வென்றார் நரேன். 

வேத விளக்கம் பரமஹம்சர் வாழ்வாகும்
நாதனவன் நீண்டயுக பாரதத்தின் சாரனவன் 
சாரதா தேவியருட் சத்தியத்தால் பெண்குலமே 
பூரணமாய்ப் போதமெழும் பார். 

பார்த்தான் பரவசத்தான் பங்கயத்தாள் பாரிப்பப்
பேர்த்தான் பெருங்கலியைப் பாரினின்றும் - ஆர்த்தார் 
அநவரதம் ஆன்றோர்கள் ஆன்மிகத்தால் சீர்த்த 
மனமுடைய ராகிச் சிறந்து. 

முனிவனும் கண்மலர்ந்தான் முத்திமுகிழ் சேயும்
கனிந்தொரு சொல்மலரப் பூத்தான் - புனிதனவன் 
புன்னகையே பொன்யுகத்தின் அச்சாரம் ஆயிற்றால் 
உன்னதமே எய்தும் மனம். 

மனமாசு நீங்கும் மதிவிளங்கும் உண்மை
அனவரத மாகத்தி லோங்கும் - வனமறைகள் 
உள்ளம் விளங்கும் உயர்விவே கானந்தன் 
விள்ளமுதப் பேருரைத்தக் கால். 

மனிதனெனச் சொல்வர் அறியாதார் மற்று
மனிதனென நிற்பதுவோ தெய்வம் - மனிதனந்த 
தெய்வத்தின் தொண்டர்யாம் ஆலயமோ இவ்வுலகம் 
பொய்க்காத பூசை நெறி. 

நெறியாகத் தொண்டறத்தைத் தூய துறவை
நெறிதந்தான் நன்மடம் என்றே - அறிவார்தம் 
முக்தியும் மாநிலத்தின் நன்மையும் சேவையெனும் 
பக்தியால் உண்டாகு மாறு. 

அத்வைதம் நல்கவிதை ஆன்ற அறம்புராணம்
மெத்தமயல் யோகம் உளவியலாய் - ஒத்திசையக் 
கோதுநீக்கிக் கொள்ளற் கெளிதாய் எளியோர்க்கும் 
தோதுபட ஆக்கல் செயல். 

செயல்முறை வேதாந்தம் செய்தளித்தான் சேவை
முயற்றித் தொழும்நெறி மாட்சி - உயப்போம் 
உணர்வினர் உள்ளம் களிப்ப உலகோர் 
வணங்கிடும் வாய்மைத் ததே. 

தெய்வம் தொழுமடங்கள் வேண்டிய பல்கிநிற்ப
மெய்யுணர் வாகிநிற்கும் அத்வைத - முய்வகை 
ஒன்றிற்கே ஓர்மடம் நல்லிமயத் தாக்கினான் 
மன்பதை மாண்புற் றதால். 

ஏழைகளின் நல்லுழைப்பால் கல்விகற்றுச் சீர்பெற்று
வாழ்வின்றி அன்னார் கவலுங்கால் -- ஊழென்று 
சொல்லி உதவாமல் உற்றசுகம் பேணிடுவார் 
பொல்லார் துரோகி யவர். 

பெண்களின் முன்னேற்றம் கல்வியால் போதரும்
கண்ணதைத் தந்துவிட்டு எட்டிநில் - எண்ணற்க 
அன்னார் உரிமைகள் உன்னா லென;பெண்தான் 
தன்னாலே தானுயரும் தான். 

பாமரர் தம்மையே புன்மையாய் எண்ணியதால்
நாமிந்த ஈனமுற்றோம் நீண்டகாலம் - ஆம்வழியும் 
மக்கள் உயர்வில் மனம்வைத்தே தொண்டாற்றப் 
புக்க யுகமாகும் பொன். 

ஜீவதயை என்றார் பரமஹம்ஸர் என்றலுமே
ஜீவசேவை என்றே திருத்தமுடன் - மேவியன்று 
சொல்லிய வாக்கின் திறமறிந்தார் சீடரவர் 
நல்வகையால் நாட்டினார் வாழ்ச்சி. 

பெண்ணுயர ஆவன செய்தலே சக்திபூஜை
மண்ணுயரும் மானம் உயருமே - எண்ணரிய 
நன்மையெலாம் உண்டாகும் நங்கையவள் தானுயர்ந்து 
தன்னுளம் தான்குளிர்ந்தக் கால். 

இன்னுமொரு நூற்றாண்டும் இந்நாடு நுந்தமக்கே
மன்னும் கடவுளென ஆகட்டும் - என்றுரைத்தான் 
சென்னையில் அன்றந்தச் செந்துறவி செப்புமொழி 
இன்னுமொரு நூற்றாண் டிரும். 

இருங்கடல் சூழ்வையம் வாழ இனித்தான்
வருகின்ற மானிடரும் ஓங்க - வருத்தமெலாம் 
நீங்கி நிலைத்தநன்மை நிச்சலும் பல்கிடவே 
ஆங்குறுதி ஆமவன் சொல். 

சொல்லில் சுடர்விடுக்கும் சொன்னவண்ணம் செய்தக்கால்
அல்லகன்றே ஆன்மவொளி ஆக்கும் - பல்கலையும் 
பாங்குறவே பொன்றாப் பொருளில் பொருந்திவரும் 
ஓங்குவிவே கானந்த மோது. 

ஒன்றே மதமதில் ஓர்ந்திடுவார் தன்மையினால்
சென்றே பலவாகும் நன்னெறிகள் - என்றாலும் 
செல்லும் வழியெல்லாம் சேர்கின்ற உண்மையதாய்ப் 
பல்கும் பரம்பொருளே தான். 

உள்ளிருக்கும் தெய்விகத்தை உற்றதாம் வாழ்விதனில்
தெள்ள வெளிப்படுத்தல் தீர்மானம் - உள்ளவழி 
அத்தனையும் உற்றசெயல் அன்பறிவு யோகத்தால் 
வித்தகமாய் ஆற்றல் விறல். 

வீறுகொண் டேற்றம் விளங்கவே வேதாந்த
ஆறெமக் கீந்தான்நல் ஆன்மிகத்தால் - ஏறுபுகழ் 
நாடேற அன்றாட வேதாந்த நன்னெறியால் 
ஈடேற வைத்தான் எமை. 

புதியதவம் தந்தான் பரமனருள் கூர
யதிவிவே கானந்தன் யாத்தான் - அதிசுலபம் 
ஐயே அவனிமாந்தர் சேவையினில் துய்யபெரும் 
மெய்ஞானம் தானே வரும். 

காளிக்கே அர்ப்பணித்தான் ஆன்ற குருநாதன்
மீளா முனிவனும் ஒத்திசைய - வேளைவர 
அன்னைபணி தான்முடிய அத்வைத ஆழ்விரிவில் 
தன்னையற்று நின்றான் தவம். 

பலவீனம் நீங்க மருந்தாம் வலிமை
பலவீனன் என்ற நினைவை அகற்றி 
வலிமையெலாம் தன்னுள் விளங்குதல் கண்டே 
பொலிவடைதல் புத்திக் கழகு. 

நல்லொழுக்கம் நல்ல மனவலிமை நல்லறிவு
அல்லல் வருங்கால் அமுங்காமை - கல்வியாகும் 
எப்பொழுதும் தன்னிலையில் தன்வலியால் நிற்பதுவே 
இப்பொழுது கல்வி நமக்கு. 

உள்ளத்தை நீதிறந்து வைத்தால் உலகத்தில்
உள்ளதாம் நற்கருத் தெல்லாமும் - வெள்ளமென 
உன்னுள்ளே பாய்ந்து விளங்கிடுமே ஓங்குபெரு 
உன்னதமும் ஆகும் உணர். 

தேசத்தை நேசித்தல் தேசமக்கள் மேம்படவே
ஆசகற்றி ஆன்றதொண்டு செய்தலாம் -- மாசற்ற 
உள்ளத்தால் இந்தியாவே தெய்வமென ஓர்ந்ததன்பால் 
கொள்கின்ற பக்தியது தான். 

பொதுமக்கள் வேதாந்த வாழ்க்கை பெறவே
எதுவழியாம் என்னில்பெண் வாழ்ச்சி - புதுயுகத்தில் 
போதமிகு புத்தராதி சங்கரர்தம் போதனைகள் 
சாதிப்பாள் மக்களுக்குப் பெண். 

நிகழ்வதெலாம் மிஞ்சியதோர் நேர்த்தியினால் ஆகும்
தகவுபெறப் பின்னவற்றை ஆயும் - பகுத்தறிவாம் 
தோற்றத்தின் காரணம்தான் ஆகாதாம் தோன்றியதின் 
தேற்றவர லாறுரைக்கும் தான். 

சொந்தமாம் சங்கல்பம் தானே அருட்கரமாம்
எந்தவுரு வேண்டினும் அவ்வணமே - முந்தியுரை 
ஓத்துகளும் உன்னதமாம் தெய்விகரும் உன்னான்மா 
ஆத்திகனாய் உன்னைநீ ஓர். 

பகுத்தறிவை ஆன்மிகமும் தான்கடக்கும் பார்த்தால்
பகுத்தறிவால் சோதித்தல் நன்றே - பகுத்தறியில் 
மிஞ்சுவதும் எத்துணையோ அத்துணையே மிக்கபயன் 
நஞ்சுபிற வீடல் நலன். 

உணர்வைக் கடந்துளதை உன்னி யுணர்ந்தே
உணரார்க் குணர்த்துதல் தொண்டாம் - உணராமல் 
பல்வகையால் பாரோர் பரவுவர் உள்ளுணர்வில் 
நல்வகையால் நாளும் நினைந்து. 

சமாதியெனும் நன்னிலை சாரா தறிவில்
சமாதிக்குச் சத்வழியும் நம்மறிவே - சம்மதமாய் 
நல்லறிவைச் சாரார் நலிவர் உணர்ச்சிகளால் 
வெல்வார்க் கறிவே துணை. 

என்றும்நீ ஆன்மா எதனால் துயருனக்கு
மன்னும் உனக்கேன் மரித்தலெனும் கற்பனைதான் 
உன்னுங்கால் உன்னிலையில் ஊன்றியே நின்றிடுக 
தன்வழியே வீடாகும் தான். 

*