Wednesday, November 3, 2021

இருளின் மச்சம்

சாந்தத்தைத் தேடிச் 
சந்நிதியில் கால் வைத்தேன் 
சந்நத்தமாகி வந்த தெய்வம் 
மலையேறிப் போயிற்று 
மலையேறி நின்று விரி உலகைப் 
பார்வையிலே மீன் பிடிக்க 
முனைந்து சென்றேன் 
பரிதி விரித்த கடை மூடி 
வாயூதி விளக்கணைத்துப் போன புகை 
இருளாய் எதிர் எங்கும் நிரவியது 
இருளின் மச்சத்தை எங்கென்று தேடி 
இடைசுற்றிக் கால் விலக்கிக் காணப் புக்கில் 
கருக்கல் கடந்து ஒரு கருங்கடலில் 
கொள்ளை ஒளிக்கதிர்க் கொழுந்து ஆடியது 
கொழுந்தைக் கிள்ளிக் கொஞ்சம் 
கருத்தில் வைத்தேன் அங்குக் 
கொழுத்த சுடர்க்காட்டில் 
மூன்று காலம் நின்றது 

*** 

No comments:

Post a Comment