வற்றித் தொத்தலாய் வாசல் குறட்டில்
விதவித பட்டுப் புடவைகள் வெளுத்துக்
கிழிந்து புரள வீதியில்
நரைத்த தலைப்பிரட்டையில்
வாழ்ந்த வாழ்வு ஓடும் பேனாய்
வடிந்த வெள்ளம் விடுத்துச் சென்ற
அரிப்பாய் அவள்
வந்தவர் போனவர் வயிறாற
வடித்துக் கொட்டிய கைகள்
அடிவயிற்றில் அடித்து வாயில்
வசவுகள் கொட்டும்
அம்ம அம்ம என்று வாழ்ந்தவளிடம்
கல்யாணம் கார்த்திகை என்று
கையேந்திய கணக்கன் கெடுபிடி தாண்டிக்
காலம் போகும் ஊர்க்குறடெங்கும்
துயில்வதியும் நியாயங்கள்
கண்மலரும் காலம்வரை
வெள்ளங்கள் கரைமீறும்
வடிந்த அரிப்பின் விளிம்பில் அமர்ந்து
சாக்குருவி சுரம் போடும்.
***
No comments:
Post a Comment