Wednesday, November 3, 2021

தோழமையின் அடிவைப்பு

தனியிருக்க முடியாதென்று 
துணையைத் தேடித் துணைக்குள் 
ஒரு துணிபைத் தேடித் 
தொடர்ந்த பந்தத்தில் 
ஒரு தொடரைத் தேடித் 
தான் பெற்றது தானாய் 
ஒரு தன்மயம் தேடித் 
தன்மயமாய் ஓர் உலகை ஆக்கத் தவித்துத் 
தன்பேர் சொல்லக் கால்வழிக்குக் கைசலித்துத் 
தனியேகும் வழியில் 
தன்னில் வேறாய்த் தான் தனியாய் 
நின்றதொரு தோழமையில் 
தன் கணக்கும் 
தனை மருவும் ஐங்கணக்கும் 
அற்றுவிழும் அமைதியில் 
அகமுறுவல் பூக்கும் 
அற்புதத்து அன்பில் அளவளாவி 
அண்டத்தை அங்கைக்குள் 
உருட்டி ஒரு கோலியாக்கிக் 
கட்டை விரல் மண்ணில் கால்பாய 
நடுவிரல் விக்கிரமத்தில் நிவந்து 
நேர்க்குத்தாய் வளைத்தெறிய நில்லாதோடித் 
தொலையெட்டி நின்ற காலம் 
உருண்டுவரப் பின்னோடித் 
தொடர்கின்ற துணையாகத் 
தோழமையின் அடிவைப்பு. 

***

No comments:

Post a Comment