Sunday, November 28, 2021

திருப்பாவைக்கான ரசிக்கும் பாடல் முப்பது

(திருப்பாவை முப்பதுக்கும் ரசித்து ஒரு ரசனைத் திருப்பாவையாகப் பாடிய முப்பது பாடல்கள் இவை. அதாவது அனைத்துப் பாடல்களிலும் ஆண்டாள் பற்றிய குறிப்பு, திருப்பாவையின் சிறப்பு, அதைக் கற்கத் தூண்டும் ரசனைக் குறிப்பு ஆகியன அமைந்து வரும்படியாக அமைந்திருப்பன. ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்பில் நகவளைவுக்குள் திருப்பாவையின் தொடக்க வரி தரப்பட்டிருக்கிறது) 

*

1. (மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

மார்கழித் திங்கள் மதியத்தே மால்நினைந்து
ஆர்கழலைச் சிந்தித்து ஆண்டாள் திருப்பாவை
தேரும் பொழுதத்துத் தித்தித்த தீஞ்சுவைகள்
யாரோ டுரைக்கேன்யான் யாமம் கடந்தாலும்
பாரோர் பையத் துயின்று பின்னிருளும்
காரோத வண்ணர்க் கரிய திருமேனிப்
பேரோதும் பெற்றித்தாய்ப் புந்திப் புலரியெழத்
தாராய் நறுங்கோதாய் தண்ணருளே யெம்பாவாய்.


2. (வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்கு

வையத்து வாழாதே வெய்ய துயர்க்கடலில்
பையவே மாழாந்து புல்லும் கவலைக்கே
ஐயகோ தாம்விலையாய் ஆனார் வழியொற்றி
நைவதுவோ நானிலத்தீர்! நாளும் சுடர்க்கொடியே
தைவந்த பூச்சூட்டித் தான்திகழும் அச்சுதனார்
கைவந்த குன்றின்கீழ் கன்றுகளும் தாமகிழ
உய்யும் திருப்பாவை உத்தமனுக் கோதியதும்
வையத்தீர் நாம்வாழ வாழ்த்தீரோ எம்பாவாய்.


3. (ஓங்கி யுலகளந்த உத்தமன் பேர்பாடி

ஓங்கி யுலகளந்த உத்தமனார் சேவடிக்கே
தாங்கித் தமராக்கித் தான்செலுத்தும் தீந்தமிழாள்
பாங்கியராய் யாமுமிங்கு பங்கெடுத்தால் பற்பநாபன்
ஓங்குபுகழ் பாடி உயிரில் உறவாகித்
தேங்குமகிழ் தெய்வத் திரளுக்கே தான்வாடி
வாங்க உளம்நிறைக்கும் வற்றா விரிவுரைக்கே
பாங்காகிப் பக்குவமாய்ப் போந்த மனமுடையீர்!
நீங்கா அருளே நிறைந்தேலோர் எம்பாவாய் !


4. (ஆழிமழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்

ஆழி சுழற்றிடும் அச்சுதனை அன்பினால்
வாழ்வில் சுழற்றிய வான்கோதை பேசினாள்
ஆழ்பொருள் அத்தனையும் ஆசிலோர் தாம்வடித்தார்
ஊழிதோ றூழி யுளத்தில் பெயராமே
வாழி யுலகளந்த வண்ணத் திருமாலைப்
பாழில் பிறவி பயிலுமோர் நற்றுணையாய்
வாழ்த்தி மனத்திருத்தி வஞ்சமிலா வாழ்க்கையினில்
ஏழ்மைக்கும் ஈடாய் இயற்றுவோ மெம்பாவாய்.


5. (மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

மாயனைப் பாடியே மாதவனை நாம்பாடித்
தூயோமாய்ச் சேவித்தால் தண்ணளியும் தாரானோ
சேயன் எனினுமே சேவைக் கரியானோ
ஆயர் குலவிளக்காய் ஆரா வமுதானான்
வேயர் குலவிளக்கால் வாழ்வில் துணையானான்
நேயன் நிமலன் நமக்கென்றும் அண்ணித்தான்
மாயப் பிறவி மயக்கறுத்தே மாமதியால்
ஆய தனக்கே அறக்கொள்வா னெம்பாவாய்.


6. (புள்ளும் சிலம்பினகாண் புள்ளைரையன் கோயில்

 புள்ளும் சிலம்பிற்றால் போதச் சிறகார்ந்து
கள்ளம் தவிர்ந்திங்குக் கண்ணனும் வாரானால்
குள்ளக் குளிரக் குடைந்துதிருப் பாவைக்கே
தெள்ளமுத விள்ளுரைகள் தீங்குரவோர் தாமியற்றிப்
பள்ள மடையாக்கிப் போந்தார்நம் நெஞ்சத்தை
விள்ளற் கரியனாம் வேதப் பெருமானும்
உள்ளம் கலந்தொளிர உற்றபொழு தாயிற்றால்
துள்ளி யெழுந்து தோய்ந்தேலோ ரெம்பாவாய்.


7. (கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து

கீசுகீ சென்றுநம் உள்ளம் கிளுகிளுப்பப்
பேசுதிருப் பாவைப் பலபதியம் பார்த்தனையோ
வாச நறுங்குழல் கேசவனும் நம்வாழ்வில்
தேசு பொலியவும் தீர்ந்தவன் சேவடிக்கே
ஆசு கடிந்தேநாம் ஆளாக ஆண்டாளும்
பேசும் திருவுளமும் திண்பொருளும் ஓர்ந்தனையோ
நாயகத் தென்மனமே! நாரா யணன்கீர்த்தி
வாசிக்க விண்ணும் விழைந்தேலோ ரெம்பாவாய்.


8. (கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு

கீழ்வானம் வெள்வரைக்க கோவிந்தன் வாசற்கீழ்
ஆழ்ந்தோம் அருமறைகள் ஆண்டாள் அருள்செய்ய
வாழ்ந்தோம் வரம்பெற்றோம் வையம் திருநாடாய்
ஏழ்மைக்கும் உய்ய இயன்றநல் ஈடாகித்
தாழ்ச்சி தவிர்ந்தோம் நமனுக்கிங் கென்கடவோம்
வாழ்ச்சி விழைந்தோம் விரிநீர் உலகெங்கும்
சூழ்ச்சி தவிர்ந்து சுடரும் மனத்துள்ளீர்
ஏழ்பாரு முய்ய இயம்பேலோ ரெம்பாவாய்.


9. (தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய

தூமணி மாடத்துக் கற்றுத் தெளிந்திடவே
தாமோ தரனார்க்குத் தக்க நெறியென்றே
நாமுணரச் சொன்ன திருப்பாவை நற்பொருளால்
ஊமையரோ முள்ள முணர்வெழுந்து உன்னதமாய்த்
தீமை யகன்று திறல்விளங்கு மன்பிற்குச்
சேமம் புகன்றிட்ட செய்யமறைப் பாவைக்கு
நாமம் நவின்று நலந்திகழ் கோதைக்கே
நாமென்றும் ஆளாய் நவின்றேலோ ரெம்பாவாய்.


10. (நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்

நோற்றுச் சுவர்க்கம் புகுந்தாலும் நாமினியும்
ஏற்ற அருந்துணையாய் ஈடன்ன பேருரைகள்
ஆற்றப் படைத்தோம் அழிவுறோம் ஆண்டாளைப்
போற்றிப் புகலடைந்தோம் பூமன்னு மார்பனடி
ஏற்றும் தகவுடையோம் இவ்வுலகம் வாழ்ந்திடவே
ஆற்றும் பணிகற்றோம் அல்லல் அகன்றிடவே
ஊற்றுப் பெருக்காகி உள்ளம் புரந்திடவே
போற்றித் தொழுது புகன்றேலோ ரெம்பாவாய்.


11. (கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

கற்றுக் குரவர் குணங்கள் பலபொலிந்து
உற்றார் உவகைக்கே ஓதுதமிழ் வேதத்தில்
பெற்ற பலபொருளும் பேணும் மறைமுடியாய்
உற்ற திருப்பாவை ஓதினாள் நற்பாவை
கற்ற மதியுடையோம் கண்ணன் கழலிணையே
உற்ற கதியுடையோம் ஊக்கத்தில் ஒன்றானோம்
எற்றைக்கும் யாம்கவலோம் எவ்வுலகும் சுற்றமென
உற்ற உணர்வில் உகந்தேலோ ரெம்பாவாய்.


12. (கனைத்திளம் கற்றெருமை கன்றுக் கிரங்கி

கனைத்திளம் கற்றவர் கல்விக் கிரங்கி
நினைத்துளம் வீற்றெழில் நாரணர்க் காக்கும்
பனித்துடல் மெய்விதிர்ப்பப் பத்திமை செய்யும்
குனித்தவக் கோவலன் கொண்டிடச் செய்யும்
தனித்தவம் மாற்றித் திரள்விசும் பாற்றும்
வினைமுகம் பாற்றியே விண்ணெறி காட்டும்
மனத்துக் கினியநம் மாதவன் கோதை
புனைந்த தமிழ்மாலை போற்றுவோ மெம்பாவாய்.


13. (புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனை

புள்ளின்வாய்க் கூற்றினில் பார்வண்ணம் கண்டெழுந்து
கள்ளம் தவிர்ந்துநீ கோதைமொழி கூறாயோ?
உள்ளம் புலர்ந்துநீ உத்தமனை நாடாயோ?
விள்ளற் கரியபொருள் விந்தையாம் பேருரைகள்
மெள்ள உனக்கே முயங்கித் திளைத்திடவோ?
தள்ளத் தகுமோ? தரணிவாழ வேண்டாமோ?
பிள்ளைப் படியுரைத்துப் பாருலகு தானுய்ய
மெள்ளப் புகன்று முழங்கேலோ ரெம்பாவாய்.


14. (உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

உங்கள் புழக்கத்தால் உள்ளத்துள் கோவிந்தன்
திங்கள் கதிர்முகம் தண்ணருள் செய்துநின்றே
எங்களை முன்னம் எழுப்பிடச் செய்தானால்
சங்கத் தமிழ்மாலை சூட்டும் சுடர்க்கோதை
துங்கப் பொருளுரைக்கும் தூயோர்தம் தெள்ளுரைகள்
அங்கப் பறைகொள்ளும் ஆர்வத்தால் வாசற்கண்
சங்கை அகற்றியே சேர்ந்தியாம் கற்பதற்கே
நங்களோ டுங்களை நாடிவந்தோ மெம்பாவாய்.


15. (எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ

எல்லே இளம்நெஞ்சே! இன்னம் தயங்குதியோ
அல்லல் படுவதுமேன் ஆன்றோர் உரையுளவே
வல்லையுன் கற்பனைகள் வாலறிவும் யாமறிதும்
வல்லீர்நும் பேருரையில் யானேதான் ஆழ்ந்திடுக
ஒல்லைநீ இவ்வுலகிற் கோதாமல் உந்தனக்கோ
எல்லாரும் தோய்வாரோ தோய்வார்தாம் தோய்ந்தறிய
வல்லானை ஆழ்வார்கள் வாழ்வான விண்ணாண்டாள்
நல்லானை நம்பியைநாம் பாடேலோ ரெம்பாவாய்


16. (நாயகனாய் நின்றநந்த கோப னுடைய

நாயகன் நாரணன் நங்கையராம் நல்லுயிர்காள்
வேய்ங்குழல் ஓசை விதித்த திருப்பாவை
மாயனை நாடித்தான் மாதவனார் கோயில்முன்
தூயோர்தம் தொல்லுரைகள் நற்றுணையாய் நாமணுகி
ஏய்ந்தமன மென்னும் இணங்குநல் காவலனால்
தோய்ந்த உளமென்னும் நந்தகோ பன்தன்னால்
ஆயன்தான் ஆதியில் நேர்ந்த உயிர்த்தொண்டே
வாய்ந்துநாம் வாழ விழைந்தேலோ ரெம்பாவாய். 


17. (அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்

அம்பரமும் தண்ணீரும் சோறும் நமக்காகும்
உம்பர்கோன் உத்தமன்பால் உள்ளும் உயிருமாய்
எம்பிரான் தாளிணையில் என்றுமே காதலாகிச்
செம்புலத்துப் பெய்நீராய்ச் சேர்ந்தென்றும் ஒன்றிவாழும்
அம்புலத்துக் கான்றவழி ஆண்டாள் தகவுரைத்தாள்;
நம்பிகாள் நங்கைமீர்காள் நாடுமினோ நல்லுரைகள்;
நம்பரும் நன்மையெலாம் நானிலம் காணலாகும்
வம்புலாம் சீர்திகழ வாழ்த்தேலோ ரெம்பாவாய்.


18 (உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்

உந்து மதகளிறாய் உன்மத்த மாகிமனம்
தந்ததொல்லை தீரத் திருப்பாவை தான்தந்தாள்
அந்தமிலா வாழ்ச்சிக்கே அச்சாரம் தானானாள்
கந்தம் கமழும் குழலால் கிருட்டினனைப்
பந்தித்து வைத்தே பரமாகத் தந்தருளிச்
செந்தமிழ் வேதியர்க்கே செப்பும் மொழியானாள்
வந்தித் தவருரைத்த வானுரைகள் வாசித்தே
சிந்தித்து வாழ்பொருளே செப்பேலோ ரெம்பாவாய்.



19. (குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

குத்து விளக்காகிக் கோதுகலப் பாட்டாகி
வித்துமாய் வீட்டிற்குத் தானாம் திருப்பாவை
நத்தி நமக்காக நாச்சியார் தானருளப்
புத்தியோகு தானருளும் பூரணன் பள்ளிகொள்ளும்
தத்துவமும் தண்தகவும் தெள்ளுரைகள் தாம்விளக்க
எத்துக்கிவ் வின்னாமை இப்பாரைத் தான்நலியும்
தித்திக்கும் பாடல் திகட்டா அருளமுதம்
பத்தியுடன் பாடிப் பொலிந்தேலோ ரெம்பாவாய்.



20 (முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

முப்பத்துப் பாட்டிற்குள் மாதவனைப் பூட்டியே
எப்போதும் நந்தமக்கே எய்ப்பில்வைப் பாக்கினாள்
செப்பன்ன மென்முலையாய்ச் சீருரைக்குள் ஆட்பட்டே
அப்பாஞ்ச சன்னியனும் ஆரா வமுதானான்
கப்பம் தவிர்த்திங்குக் காதலாய்க் கண்ணனுக்கே
எப்போதும் ஏங்கி இயல்வதாம் வாழ்விதனில்
முப்பதும் முந்துரையும் உக்கமும் தட்டொளியாய்
இப்போதும் என்றும் இயம்பேலோ ரெம்பாவாய்.



21 (ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

ஏற்ற நலங்கள் இயல்வாகித் தாம்சுடர
மாற்றா மதிநலத்தால் பேருரைகள் தாமொளிரப்
போற்றியாம் பாடத் திருப்பாவை தந்தருளி
ஆற்றப் படைத்தவர் அஞ்சுகுடிக் கோர்மகளாய்
ஊற்ற முடைய உத்தமனைத் தான்வரித்தாள்;
நாற்றத் துழாய்முடி நாரணனை நாம்பெறவே
தோற்றே அவள்தமிழில் தொல்புகழ் பாடிப்போய்
ஆற்றா தடிபணிந்தே ஆழ்ந்திடுவோ மெம்பாவாய்.



22. (அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான

அங்கண்மா கர்வத் தகங்காரம் விட்டகன்று
செங்கமலை தானருளச் செய்யதிருப் பாவைக்கே
எங்கள் இதயமெலாம் ஏக்கமும் கொண்டதுவால்
மங்காப் புகழுடைய மாகுரவோர் தம்முரையால்
சங்கத் தமிழ்மாலைச் செய்யபொருள் போந்ததுவால்
திங்களும் ஒண்சுடரும் தண்கதிர் கண்மலர
எங்கள்மேல் சாபம் இழிந்து திருமாலும்
அங்கண்ணால் நோக்கி அருளேலோ ரெம்பாவாய்.



23. (மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

மாரி பெயல்நெஞ்சில் மாவுணர்த்தும் காலத்து
வேரி கமழ்சிந்தை வீடளிக்கும் வேராகிச்
சீரிய சிங்கா தனமாம் திருப்பாவைப்
பேரியல்வே பல்குநல் பாங்கான பேருரைகள்
மூரி நிமிர்ந்து முழங்கிடவே யாம்வந்த
காரியம் ஆராய்ந்து கண்ணன் கருணையினால்
சீரிய சிந்தையும் சிந்தாநல் பத்திமையும்
ஆராய்ந் தருளநாம் ஆர்த்திடுவோ மெம்பாவாய்.



24. (அன்றிவ் வுலக மளந்தா யடிபோற்றி

அன்றிவ் வுளமெலாம் ஆண்டாள் அடிபோற்றி
சென்றங்கு நம்மகந்தை செற்றாள் திறல்போற்றி
பொன்றவே சங்கை புகன்ற உரைபோற்றி
கன்றுதீய சிந்தை கெடுத்தாய் கழல்போற்றி
குன்றாத காதல் கொடுத்தாய் குணம்போற்றி
வென்றே எமையெடுக்கும் நின்தாள் விறல்போற்றி
என்றென்றுன் பாசுரமே ஏத்தி உரைகொள்வான்
இன்றுயாம் வந்தோமால் ஏற்றேலோ ரெம்பாவாய்.



25. (ஒருத்தி மகனாய்ப்  பிறந்தோ ரிரவில்

ஒருத்தி மொழியாய்ப் பிறந்தே உரவோர்
அருத்த வுரையாய்ப் பரந்தே ஒளிர
தரிக்கிலா தாகிநம் தீங்கு கழியக்
கருத்தைக் கவர்வித்துக் கள்ளம் அகற்றி
விருப்பென்ன நின்ற நெடுமாலாய் வேயர்
திருப்பாவை தந்த தமிழால் திருமால்
திருத்தக்க அன்பால் தமியர்யாம் பட்ட
வருத்தமும் தீர்ந்துநாம் வாழ்ந்தேலோ ரெம்பாவாய்.


26. (மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்

மாலாய் மனவண்ணம் மாதவற்கே ஆகிடுமால்
வாலறிவர் தாம்விரித்த வானுரைக்கே ஏங்கிடுமால்
பாலாழி விட்டிங்குப் பார்வண்ணம் தாங்கிடுமால்
நூலாழி நுட்பம் நுவன்றநம் கோதைக்கே
மாலாகி நெஞ்சழிய மன்னுபெரு வாழ்வுக்காம்
சாலப் பெரும்பறையும் சங்கமுடன் நீள்கொடியும்
ஞாலமெலாம் உள்ளடக்கும் ஞான விதானமும்
ஆலின் இலைகிடந்தே ஆள்வானை ஆண்டாளைக்
கோல விளக்காகக் கொள்வோம்நாம் எம்பாவாய்.



27. (கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்றன்னைப்

கூடாரைக் கோவிந்தன் வெல்லும் உரையாகி
நாடாரை நாரணர்க்கே ஆட்படுத்தும் ஆண்டாளைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்
நாடும் நயக்கும் நல்லுரையும் நாவினிக்கச்
சூடகமும் தோள்வளைக்கும் மாலுக்குத் தோதாகிப்
பாடும் அகச்செவியின் பூவாகிப் பேருரைகள்
ஆடும் பொருளாழம் ஆடையும் பாற்சோறும்
மூடுநெய் தோய முழங்கேலோ ரெம்பாவாய்.



28. (கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்

கறவைகள் புன்சிரிக்கும் கல்விக்கே தேர்ந்தோம் 
துறவிலோம் திண்மையிலோம் தீமைக்கே கற்றோம்
அறமிலாப் பாரிதனில் ஆண்டாளைப் பெற்றோம்
குறையொன்று மில்லாத கோதைமொழி கற்றோம்
உறவேல் நமக்கென்றும் ஓதுமுரை உற்றோம்
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் செய்யும்
சிறுமை மதிமாற்றிச் சிந்தையினை ஆளும்
பொறுமை யுனக்கேயாம் போந்தேலோ ரெம்பாவாய்.



29. (சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

சிற்றஞ் சிறுகாலே நின்திருப் பாவையினை
முற்றா மதியுடையோம் வந்துநாம் சேவித்துப்
பெற்றதாம் பேருரைகள் நல்கும் பொருளாழ்ந்து
கற்றுன் திருவடிக்கே குற்றேவல் யாம்வாய்ந்தே
இற்றைப் படிப்பால் இயம்பியசொல் அன்றுகாண்
இற்றைக்கும் என்றைக்கும் நின்னருள் பாவையினால்
உற்றோமே யாவோம் உலகெலாம் ஒன்றாவோம்
மற்றைநம் வேகங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.



30. (வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்

வங்கக் கடல்கிளர்ந்த மாவுரைகள் காட்டுபொருள்
திங்கள் முழுதும் திருப்பாவை தான்விளங்க
எங்கள் இயல்வும் எமைக்காக்கும் தன்னியல்வும்
மங்காப் புகழ்பறையாம் மாதவனார் சேவடியும்
சங்கத் தமிழிசைத்து நங்கள் குலம்வாழ
அங்கத் திருப்பாவை ஆண்டாள் அருளியவா
பொங்கு மலியுவகை பூரிப்பத் தாம்சொல்வார்
எங்கும் திருவருளால் தாம்மகிழ்வ ரெம்பாவாய்.

* * *

திருப்பாவை முப்பதில் தீந்தமிழால் வீடும்
அருள்பாவை போற்றிப் புனைந்தேன் - மருள்தீர
மார்கழியில் ஆண்டாளம் மாதவனை மன்னியசீர்
ஆரமுதப் பாவின் அருள். 

***

No comments:

Post a Comment