உன்னை இன்னும் நான் அறியவில்லை
கண்ணொடு கண் புணர்வின்
உச்சத்தில்
இமை விரிய இதழ் குவிந்து ஒன்றியது
இதழோ டித ழிழையக்
கண் மூடியது
கை விரியக்
கற்பனை செருகிச் சுழன்றது
சுழற்சியின் உன்மத்தத்தில்
கைகள் தேடித் தேடி
விரல் மேயும் ஈரண்ட முகடு சுற்றிக்
கொழுமுளை வருடிக்
கூரலகின் பேழ்வாய்ப் பாழ் குனிந்து
ஊறிவரும் படைப்பின் தீயில்
பட்டெழுந்த சுழல் கங்கு ஆலில் தவழ
இடையாட்டில் இனனுணர்ந்து
உன்னுருவைக் கைக்கண்டு நின்ற கணத்தில்
கால் பிணையக் கரை உடையக்
கூடிய களிப்பின் பாலத்தூடே
களிவெறி கொண்ட உயிர்
தள்ளாடிச் சென்று புகச் சுழித்த
இன்பச் சூறையில்
நின்றவை தலைகீழாய்
நடந்தவை பறந்து
பறந்தவை சுழன்றுச்
சுழன்றவை ஊடுருவிச்
சுக சமாதியில் ஊறச்
சுயம் துயிலும் சிவக் கனவில்
சில்லிட்ட விழிப்பில் சமைந்த
சோர்வின் சுகத்தில்
ஒருக்களித்து உன்மேல்
உற்று நான் நோக்குங்காலைப்
புயலோய்ந்த தோலின் தீவுள் நீயும்
பெயலோய்ந்த வடிவின் வானில் நானும்
***
No comments:
Post a Comment