Tuesday, November 16, 2021

கழைக்கூத்து

விளையாடித் தெருப்புழுதி 
அளைந்துவந்த நினைவாலே 
தார்போட்ட நெடிய வீதி 
நிற்காமல் வருகின்ற நடுங்கு குரல் 
நிறுத்தாமல் தொடர்கின்ற நாட்டு மேளம் 
உறுத்தாமல் ஓங்கு குரல் உச்சத்தாயி 
ஒரு கழைக் கூத்தாடி அவன் 
ஒரு சாண் வயிறே 
வித்தை காட்டிப் பிழைக்கின்ற வாடிக்கைக்கு 
விதவிதமாய்த் துப்பட்டா சலங்கையெல்லாம் 
ஒரு பைசா உருண்டு விழும் ஓசைக்காக 
ஓயாமல் ஓலமிடும் ஒற்றைக் குரலில் 
பாழ்வயிற்றில் 
பசிமாற்றி வைப்பதற்காய்ப் 
பக்குவமாய் நடைபயிலும் பெண்ணலத்தை 
ஒய்யார நாட்டியமாய் 
ஊடுருவும் கண்விழிகள் 
ஒரு பைசா நாணயமாய் 
உருண்டு விழும் பழங்கைலி 
தவழ்கின்ற பருவத்தும் 
தனியாகத் தந்தியின் மேல் 
கவிழாது நிற்பதற்காய்க் 
கற்கின்ற கழைக்கூத்தில் 
காட்டும் வித்தைகளோ 
ஒன்றிரண்டே என்றாலும் 
கடவுளுக்கும் எதிர்க்கடையாய் 
ஆடுகின்ற வாழ்க்கையிது 
கடவுள் மட்டும் வாழ்ந்ததென்ன? 
ககனப் பெருவெளியில் 
காலத் தந்தியூடே 
கழையின்றிக் கூத்தாடும் 
ஒரு கழைக்கூத்தனாய்க் 
கடவுளவன் ஆடும் கூத்தில் 
காண்கின்ற வித்தைகளோ 
கணக்கெல்லாம் ஒன்றேதான். 
பேரிடிப் பறை கொட்டிப் 
பெருவாளி மழை கொட்டிக் 
கூர்மின் நெருப்பாட்டிக் 
கூதிர்பனி கடுங்குளிராய்க் 
கொள்ளைபுயல் கொடுநோய்க் 
கும்மிருட்டுக் கத்திரியாய்ப் 
பிள்ளை விளையாட்டைப் 
பேரண்டத் தவிசேற்றிப் 
பழையவான் கம்பளத்தைப் 
பார்வைக்கு விரித்ததிலே 
வீழுமுயிர் விழைவில் 
வியன்காசு தான் பொறுக்கும் 
வினையாடி 
வித்தை வேறெதுவும் கல்லாதான் 
கனையாழிக் குரலெடுத்துக் 
காதின் பறை கிழிய 
முனைகின்ற மூல 
முக்காலப் பெரும்பாட்டில் 
புனைகின்ற பொய்பூசிப் 
பூரணத்தை விலைபேசிப் 
பூமிப் பந்துருட்டிப் போத்தந்த 
காரணனே என்றாலும் 
புரையோடிப்போய் நிற்கும் 
புன்மையினைக் களைந்து விட்டு 
நன்மையினை நாட்டுகின்ற 
நியாயம் தெரியாதான் 
தெரிந்தாலும் 
நேர்மையின் கோபம் புரியாதான் 
புரிந்தாலும் 
மானிடத்தின் மாட்சி பயிலாதான் 
படைத்தவனாய்ப் பேர்கட்டிக் 
காப்பவனாய்க் கதைகட்டி 
அழிப்பவனாய்ப் பூசிவைத்த 
அரிதாரம் கலைந்துவிட 
அய்யோ பாவம்! 
அடுத்த முச்சந்தியிலே 
ஆரம்பம் செய்கின்றான் 
அதே கழைக்கூத்து. 

***

No comments:

Post a Comment