Wednesday, November 3, 2021

சிந்தை படிந்த செம்மண்

சின்னக் கதை பேசிச் 
சிரித்துப் பொழுதயரும் 
சமுதாயச் சாவடியில் 
பிரித்துப் பொருளுணரப் 
போராத போக்கிற்கு 
உரத்த குரலெழுப்பி 
ஒரு கொட்டாவி விட்டு 
ஊர் பொங்கிச் சோறு தின்ற 
உதிரும் இலைகிழித்துக் 
குரைக்கும் நாய் முதுகில் பேன்பார்த்து 
முழுநீலக் காக்கை 
முறைத்துக் கரைவதிலும் 
முறைவைத்து வம்பளக்க 
முந்துமர இலைக்கூட்டம் 
உரைக்காத ஒரு சேதி 
ஓடுநதி கண்டுகொள்ள 
உறங்கும் தலைமுறைகள் 
உறுமுகின்ற தூக்கத்தில் 
ஒரு கனவில் விழித்து 
மறுநனவில் கண்ணயரும் 
மானிடத்தின் சலசலப்பில் 
மகத்தான பெருங்காலம் 
கூழாங் கல்லுருட்டிக் 
கூடவரும் பொழுதுருட்டிக் 
கொண்டு சொருகி வைத்த 
கடுஞ்சுழல்கள் எத்தனையோ 
அத்தனையும் வழித்துணையாய் 
மரத்துப் போய் மனவிழுதில் 
மாற்றித் தலைசாய்த்து 
மல்லாந்து செவி சாய்த்த 
சிந்தை படிந்த செம்மண். 

***

No comments:

Post a Comment