ஏன் இந்தச் சலிப்பு எதைச் செய்தாலும்?
புத்தகத்தின் நித்யத்துவம்
புழக்கத்தில் வந்துவிடாது எந்த நாளும்
இறப்பதற்குப் பதில் இல்லை
என்ன செய்ய?
எல்லோர்க்கும் இதுவே பிரச்சனை
அறிந்தால் அமரனாவான்
ஆனால் அழியாமல் இருக்க மாட்டான்
இதற்கா தொல்லை?
மாறுகின்ற உலகில் மாறா நிலைக்கு
மாரடித்து என்ன பண்ண?
மாறும் எல்லாம்
மரணத்தைப் புரிந்துகொள்ளச்
சுடுகாட்டில் போய் நின்றால்
செத்த உடல் சத்தியத்தைச் சொல்லிச் சாமோ?
செத்தவை இருப்பதல்ல சுடுகாடு
சாவதில் மீந்தவை நிலைமாறும் இடமே சுடு இடு காடு
ஆன்மா இறப்பதில்லை.
யார் கேட்டார்கள்?
இருப்பதுதான் இறக்காமல் இருக்க வேண்டும்
இருப்பதாகக் கேட்டது
இறக்காமல் இருந்தென்ன போயென்ன?
ஆன்மாவையா தொட்டுப் பேசி
அடித்து அணைத்துப் பிடித்துப்
பற்றி வாழ்கின்றோம் நாம்?
அறிவுக்கு அப்பால் ஒரு தொடுவானில்
தோன்றாமல் புரியவரும் துரியமாய்..
ஏதேதோ சொல்வார்கள்..!
ஒன்று. தோன்றுகின்ற ஒன்று நிலைக்க வேண்டும்.
இல்லையேல் நிலைக்கின்ற ஒன்றை நாம்
தொட்டுப் பயில வேண்டும்
நாம ஆக நமது உறவு ஆக
மாறுகின்ற இந்த நதி கரையின் வடிவமெல்லாம்
மாறாத வானத்தைத் தொட்டுக்கொண் டிருப்பதைப் போல்.
***
No comments:
Post a Comment