Thursday, November 18, 2021

ஊட்டும் நாய்

ஊட்டினேன் ஊட்டுகிறேன் 
ஊட்டிக்கொண்டே இருக்கின்றேன் 
ஓலமிடும் வண்டிகளும் 
ஊடு எழும் புழுதிகளும் 
மாலை கடந்து 
இரவு நுழைந்து 
மயங்கும் இருளில் 
புகுந்து பரவும் 
ஒளியின் காலடித் தடயம் 
ஓடும் வண்டிகள் ஏறிடுமோ? 
உருண்டு சக்கரம் தேய்த்திடுமோ? 
விரட்டி வினைதீர்த்த 
வீராப்பு நாயாளன் 
உயிர்மருந்து செயித்ததனால் 
பெருத்து வயிறு தொங்கப் 
புழையெல்லாம் தேடி வந்து 
பழங்கிழவி பாய்விரிக்கும் 
பக்கத் திண்ணையின் மேல் 
பாங்கான படிக்கட்டுப் 
பின்புறத்துப் பஞ்சணையில் 
பெற்றுப் போட்டுவிட்டுப் 
பெருகிவரும் தாய்மையினை 
உற்றுச் சுமந்து வந்து 
உயிர்ச்சுமை தாங்கியென 
உயிரோடுள்ள ஒரு நாய் எனக்கு 
ஒன்றுக்கிரண்டாய் குட்டிகள் 
உச்சாணி மண்டையிலே 
ஊற்று சுரக்கிறது 
ஊட்டினேன் ஊட்டுகிறேன் 
ஊட்டிக்கொண்டு நிற்கின்றேன் 
உற்று நோக்கிப் போவீரே! 
உயிர்ச்சேதி உண்மையினை 
உரைத்துத்தான் போகீரோ? 
ஊளைநாய் ஊரைக் கூட்டியது 
ஊளைதான் இட்டதுவா 
உரையாடச் செய்ததுவா 
ஊளையில் சொல் இல்லை 
ஊமை வாக்கு ஓலமிட 
ஊட்டியது ஊட்டும் நாய் 
ஊட்டிக்கொண்டே ஓடியது. 

***

No comments:

Post a Comment