தெருமுனையில் வருகிறது
நாங்கள் வாங்கியதன்று
தினம் வந்து எங்கள் வீட்டில் கறந்து
ஊற்றும் பால்காரியின் மாடு
அதன் கண்ணுக்குட்டிதான் எனக்குச் சிநேகம்
ஏனோ மாடு எங்கள் நட்பை மெச்சவில்லை
நான் பக்கத்தில் போனால்
கொம்பை ஆட்டும்
கன்றுக்குட்டி என்பக்கம் வந்தால்
வெறிக்கும் பதறும்
தள்ளி நின்றால் சாணி கழியும்
சிறுநீர் கொட்டும்
அதன் சாணியைக் கண்டால் பிடிப்பதில்லை
ஆனால் பல முதியோருக்குப் பிடித்திருக்கிறது
ஒரு நாள் இரண்டு நாள்
மாடு வரவில்லை கைப்பால்தான்
கன்று இறந்து விட்டதாம்
சரியாய்க் கறக்கவில்லை
இன்னும் மூன்று நாள் கழித்துப்
பசுமாடு வந்தது கன்றுபோல் ஒன்றுடன்
கட்டிவைத்த மாடு பசுபோல் நின்றது
கொம்பை ஆட்டவில்லை
கண்ணுக்குக் கீழே நின்ற கன்றைப் பார்த்து
பசு என்னையும் பார்த்தது
கன்றைத் தொட்டேன். சீறவில்லை
மாட்டைத் தயங்கித் தொட்டுத்
தடவிக் கொடுத்தேன்
தலையை நீட்டி அரைக்கண் மூடியபடிக் காட்டியது
கடைக்கண்ணில் ஒரு துளி உருண்டு விழாமல் ...
***
No comments:
Post a Comment