இன்னும் காணவில்லை
மேளம் கூடக் காதில் விழவில்லை
ஒன்றுமில்லை. மட்டை விழுந்துவிட்டது
எங்கே? யாராத்தில்? எந்தத் தெரு?
வடக்குத் தெருவில்
கடிகார ரிப்பேர் கண்ணாமியாத்தில்
ஓஹோ! அதுதானா காரும் சைக்கிளும் பறந்தன
சொல்லியனுப்பி யாயிற்றா?
அவாத்துல அந்தக் கிழம்
நெடுநாள் இழுத்துக்கொண்டு கிடந்தது
அது இல்லை... உயிரோடதான் இருக்கிறது
வெளியூரிலிருந்து ஒருவர் வந்தாராம்
கொஞ்ச நாள் தங்குவதாகக் கூறித்
திண்ணையே சொர்க்கம் என்று கிடந்தாராம்
திடுதிப்பென்று நேற்றிரவு காலமானார்
மூச்சில்லை பேச்சில்லை உடல் விறைத்தது
மருத்துவர் வந்து மேற்கொண்டு
ஆகவேண்டியது ஆகட்டும் என்று சொல்லிவிட்டார்
மூட்டை முடிச்சு என்று ஏதுமில்லை
முன் வாழ்க்கைச் சங்கதிகள் தெரியவில்லை
தூரத்துச் சொந்தம் என்று சொல்லிக் கேள்வி
எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டதற்கு
இங்கிருந்துதான் இங்கிருந்துதான்
என்பதைத் தவிர பதில் இல்லை
போகட்டும் பாவம் சில நாள் தானே
என்று இருந்துவிட்டார்கள்
கோயில் பிரசாதம் கொள்ளிடக் குளியல்
திண்ணைத் தூக்கம் தெருக்களில் சுற்றல்
நேற்றிரவு படுத்தது
என்னை யாரும் எழுப்ப வேண்டாம்
என்று சொல்லிச் சாய்ந்தது தானாம்
உடல் ஒரு மாதிரி விறைத்துக் கிடக்க
என்னவோ ஏதோ என்று பார்த்தார்கள்
சரி.. அதற்கென்ன
யாருமில்லையேல் கோவிந்தா கொள்ளி
அதுதானே முடியாது ஏனென்றால்
இப்பொழுது காலையில் பார்த்தால்
அந்த மட்டை எங்கோ காணவில்லை
இட்ட மாலையும் உடுத்திய துணியும்
அப்படியே இருக்கிறது
அதற்குள் இருந்த உடல்
எங்கே என்று தெரியவில்லை
மட்டை விழுந்தது எல்லோருக்கும் தெரியும்
மட்டை எழுந்தது எவரும் காணவில்லை
தேடுகிறார்கள்
மட்டை எங்கே எழுந்து போகும்?
உருண்டு விழும்?
கடிகார முள்ளைப் பார்த்துக்கொண்டு
நிற்கிறான் கண்ணாமி
மட்டை விழுந்ததால்
புறப்பாடு இன்னும் ஆகவில்லை
எடுத்த பின்னர்தானே எல்லாம்
போவதற்கென்றே வந்து தொலைத்துப்
புறப்பாட்டை நிறுத்தி விடுகிறதுகள்.
***
No comments:
Post a Comment