Thursday, November 11, 2021

மதம்

நெடுஞ்சாலை தார்ப்பாலை 
நிலத்தில் கால் வைக்க அஞ்சி 
நீரோடை அந்தரத்தில் நிற்கிறது 
உள்ளத்தின் நா வறண்டு 
ஒரு குவளைத் தண்ணீரை 
அமுதமாய் ஆக்குகிறது 
கள்ளத்தனத்திற்கும் 
ஒண்ட இடமின்றிக் 
கடும் வெயில் 
கண்ணில் அனலூதும் பகல் 
“கடவுள் என்பது யார்? 
எந்த மதம் சிறந்தது?” 
என்று கேட்டுக்கொண்டே 
ஒரு வழிப்போக்கன் 
கடும் வெயிலில் 
கண்ணில் அனலூதும் பகலில் 
வழியே போகும் மனிதா! 
நீயே நின்று நிதானித்து 
ஒரு கடவுளைச் சொல்; 
உனக்குள்ளேயே ஒரு மதம் செய் 
வழிப்போக்கன் - 
‘யார் அதைப் பின்பற்றுவது?’ 
‘பார்த்தாயா! 
மதம் என்ற ஒன்றை 
உருவாக்கு என்றதும் 
உன்னில் நீ நினைத்தாய் இல்லை 
பின்பற்றுவோனைத் தேடுகிறாய் 
கடவுள் என்றதும் 
நீ அதில் காதல் கொண்டாய் இல்லை 
பக்தனைத் தேடுகிறாய் 
கடவுளோ மதமோ 
யாரும் இவற்றைத் 
தன் பற்றாகத் தேடுவது இல்லை 
பின்பற்றும் மற்றொருவனை 
எண்ணி இவன் வடிக்கும் 
கண்ணீர்க் கடலில் மிதக்கும் 
முதலைத் தீவுகள் அவை. 
தன்னில் தனக்காகத் 
தான் தேடுவோன் இந்தப் 
பிரச்சனை என்றொன்று 
இருப்பதாக நினைப்பதில்லை 
என் செய்ய?’ 
நிலத்தில் கால் வைக்க 
அஞ்சிய நீரோடை 
அந்தரத்தில் நிற்கிறது 
கடும் வெயில் 
கண்ணில் அனல் தூற்றும் பகல். 

***

No comments:

Post a Comment