பழைய தார்ப்பாலின் புறமடங்கிப்
போன காலமெல்லாம் வழித்தெறிந்த வேர்வையாய்
வாரிச் சுருட்டி வார்பிடித்து
வாய்தொட்டு நூலிழுத்துக்
காய்கின்ற வயிற்றில்
குத்தூசிக் கூர்பிடித்து
ஆய்கின்ற தோலடித்து
அடிவயிற்றை நிரப்ப வழிதேடிக்
கும்பி எரிச்சலில் கருகிவிட்ட
கிழவன் எங்கு போனான்?
காலத்தின் கரையாய் இருந்தவனைக் காணோம்.
தார்ப்பாலின் உலகத்தில்
தடுக்கி விழுந்த வெயில்
தன்னை யாரும் பார்க்கவில்லை என்று
அசட்டுவெயிலாய் அடிக்கிறது
இருண்டு கிடக்கும் அந்த மூலையில்
இனி ஒளி ஏற்ற கருங்கிழவன் வருவானோ?
வழிவழியாய் வந்தவன்
அவன் தந்தைக்குத் தந்தை
தார்ரோடு வரும் முன்னே
அங்குத் தங்கைக் குளம் இருந்ததுவாம்
குளத்தோரம் புன்னைமரம்
ஊர்க்காரர் தனக்காரர் எல்லோருக்கும்
அவரவர்க்கு உற்ற அளவில் மிதியடிகள்
செய்து எடுத்துப் போவாராம்
அவர் மூதாதைகளில் யாரோ ஒருவர்
சோழக் கொடுமையில் தப்பிக்கக்
கன்னட தேசம் கால்நடையாய்ப் புறப்பட்ட
கருணைமுனி உடையவருக்கு
அவசரமாய் ஓடி அடிக்குறடு வைத்தவராம்
ஆத்தாளின் பாட்டி சொல்லிக் கேட்டதுவாம்
அந்நாளில் மரநிழலில்
ஆடிய ஊசிக் காதில் காசு போகவில்லை
ஆனால் வயிற்றில் பழஞ்சோறு தங்கியது
இப்பகலில் தார்ப்பாலின் அனல் நிழலில்
குத்தும் ஊசி சில்லறையாய்க் கோத்து வந்தும்
பசி மறைக்கச் சாராயப்
பக்கத் துணைக்கும் போதவில்லை
வெற்றிடத்தில் எண்ணங்கள் எதிரொலிக்க
வேறிடத்தில் பேருந்து புறப்படுகிறது
காந்திச் சிலையருகே கலர்சோடாக் கடை
கரைகட்டிய நிழலில் காத்திருக்கக்
கற்பனையும் கார்ப்புகையும்
கண்ணுக்கு முன்னால்
கிழவன் தார்ப்பாலின் குடைநிழலில்
இதுகால் குடிபுகுந்த கடுவெயிலும்
காலத்திலும் பாலை உண்டு போலும்...
***
No comments:
Post a Comment