Thursday, November 18, 2021

பறவை போகும் இடம்

ஊர்ந்துசெலும் சிற்றெரும்பே!
எங்கே போகிறாய்? 
ஊருகின்ற காலறியும்
கால்விரையும் மண்ணறியும்
மண்ணில்வரும் மணமறியும்
நானறிவேனா?
நரனே!
நானறிவேனா? 

ஆழ்கடலில் திமிங்கிலமே!
அவசரத்தில் அங்காத்திட்டவாய்
மூடாமல் விரைவதென்ன?
எங்கே போகிறாய்? 
ஆரய்யா கேட்கிறது?
பக்கவாட்டில் திரும்புதற்குப்
பக்குவமில்லை இப்போது
பரவாயில்லை வாருமிங்கே.
வானமழை தான்பொழிந்து
விரிஉலகம் தான் நனைந்து
விரிந்து மண்ணில்
புகுந்த தண்ணீர்
எங்கே போகுது? 
கதிரவனின் ஓரக்கண்ணில்
காதலாகுது.
புதிர் அவனின் பகலினிலே
ஆவியானதும்
கதிர்க்கரத்தைப் பற்றியெல்லாம்
எங்கே போகுது? 

பறவையே போகுமிடம் எங்கே 
உணவுக்கான நேரம் போகும்
ஒரு நிமிஷம் தேடிவிட்டுத்
திரும்பி வந்தால் பொழுது போகும்
ஒற்றையடி ஓரத்தில்
ஓரால நிழலமர்ந்து
ஒரு நால்வர் நடுவமர்ந்து
ஒன்றும் பேசாதீர்
ஒரு நொடியில் திரும்பிடுவோம்
உம்கேள்வி எங்கு போகும்?
என்றந்தப் புள்ளும்
எதிர்வான் முட்டில் எங்கோ
இரைதேடிச் சென்றதுவால்
ஆலின் இலை கிடந்தால்
துயிலும் சுகம் தோன்றிடுமால்
பயிலும் பகற்கனவில்
பள்ளிகொண்டேன்
பல்லூழிப் பாழின்
பள்ளியறைத் துயில்வேனைப்
பறவை வந்திங்கே
பள்ளியெழுப்பும்வரை


***

No comments:

Post a Comment