Friday, November 5, 2021

சொன்னவற்றின் வலைப்பின்னல்

நாமே சொன்னவற்றின் 
சுயவலையில் சுழல்கின்றோம் நாமே 
ஆதிகால முனகல் உறுமலைத் 
தாண்டிச் செல்லாமல் சுற்றுகிறோம் 
சுகம் நமது வழிநடத்தும் விண்மீனாய் 
யுகங்கள் உருண்டு 
யுக்தி பிறந்து 
அகத்துள் உணர்வு குனிந்து 
ஆன காலமெல்லாம் சுற்றிவந்த நூற்கண்டு 
அண்டத்திற்குக் கோவணம் கட்டும் 
பரிணாம காலத்தின் 
பிண்டப் பசுவை மந்திரித்துத் 
திறக்கத் தேதி வைக்கத் தேடுவது 
திரிகாலத்தின் பஞ்ச அங்கப் பிரதியை 
உரிவைத்த வெண்ணையாய் உயிர்ப்பொருள் 
ஊழியின் உத்திரத்தில் துஞ்சும் 
ஆதிகால மனிதன் முதுகின் மேல் 
மனிதன் முதுகின் மேல் 
மனிதன் மேல் முதுகில் 
உரியடிக்க உந்து காலும் 
ஊன்றி நிற்கும் ஒரு கழிக்காலம் 
சொல்லுடன் சொல் மாட்டிச் சுழலவிட்டுச் 
சொன்னவற்றின் வலைப்பின்னல் சிலந்திகள் நாம். 

***

No comments:

Post a Comment