Saturday, November 20, 2021

மாசித் தெப்பம்

தெப்பம் மிதக்கிறது 
காலை விழித்ததில் மனம் 
மகிழ்ச்சியில் மிதக்கிறது 
நண்பகலுக்கென்று ஒரு தனி சுகந்தம் 
மாலைக்கென்று ஒருவித தெளிவு 
இரவுக்கென்று இது என்ன ஒரு வெளிச்சம்! 
இடைச்சுவரெல்லாம் இடித்து 
இருக்கின்ற வீட்டையெல்லாம் சேர்த்து 
ஒரே அறையாகச் செய்துவிட்டார்களா? 
தெருதான் இந்த வீட்டின் ரேழியா? 
என்ன இது! 
இன்று மாத்திரமா? 
அல்லது இனி என்றுமேயா? 
மாசித் தெப்பம் 
மக்களுக்குத்தான் என்ன மிதப்பு! 
பீப்பாய்கள் உருட்டி மிதவையாக்கிச் 
சவுக்கங்கழி கட்டிப் படுகையாக்கி 
மூங்கில் கழி கட்டி அடிப்பீடமாக்கி 
மண்டப ஜோடனை மணி ஆசனம் 
வண்ண வளைவு வர்ண ஜொலிப்பு 
குளக்கரை ஒட்டிக் கூடிய மக்கள் 
தெருவோரத்தில் காடா விளக்குகள் 
கலர்கலராக இனிப்புகள் 
கைவளை கம்மல் காதுத்தோடு 
கஜம்கஜமாக ரிப்பன் சரடு 
வேர்க்கடலை பட்டாணி காராமணி 
இருள் என்னும் பட்டுப்பேழை 
வைத்து மூடிய ரத்தினங்கள் 
இந்தக் காட்சிகள் 
இங்கேதான் உறவுகள் 
உரசலில் கையெழுத்திடும் 
ஒப்பந்தம் நிறைவேறும் என்றல்ல 
ஒரு பந்தம் இனிக்கும் என்பதற்காக 
ஒரு முறை இரு முறை மூன்று முறை 
சுற்றி வந்துவிட்டால் 
பின் வேட்டுச்சத்தம் ஆகாசவெடி 
அதே வெடிக்காரன் ஆயிரம் ஆண்டுகளாக 
அவன் ஒரு வெடிச்சித்தனாம் 
மிதக்கும் பொழுது 
அது ஒளி விளங்கும் சொர்க்கபுரி 
’ஆதிகாலத்தில் இந்தக் குளம் 
ஒரு கடலாய் இருந்ததாம் 
ராமர் காலத்தில் கூப்பிட்டதும் வராத 
குற்றத்தால் குளமாகச் சுருங்கிவிட்டதாம் 
இருந்தாலும் கருணை 
குளத்தையே கடலாக ஆக்கி 
மூன்று முறை வலம் வந்து கௌரவிக்கப்படுகிறது 
நன்றியில் நீர்ப்பிண்டமாகும் கடலரசன் 
நீருக்குள்ளிருந்து தான் ஓர் ஒளிப்படகில் 
மேலெழுந்து மிதவை ஒளி ஓடத்தோடு 
படிந்து கொள்வானாம் 
நமக்கு மேல் அவனுக்குக் கீழாம் 
அதான் அந்தத் தெப்பத்தின் கீழ் 
அதைப் போன்று நீரில் தெரிகிறதே அதுதான் 
அங்கிருந்து மேலுக்கு 
உள்ளேயே ஒரு சுரங்கப் பாதை 
இவன் மட்டும் வந்துவிட்டுப் போவதற்கு 
ஆனால் கண்டவரில்லை 
ஏதோ அந்தக் காலத்தில் 
கரியமாணிக்கத் தாத்தா 
கண்ணுக்கு மட்டும் பட்டுடுத்தாம் 
கடலரசன் கோபித்து 
யாருக்கும் சொல்லாதே என்று சொல்லிவிட 
வாயைத் திறக்காது மௌனியாகவே சென்றாராம் 
யார் கண்டார்கள்?’ 
தெப்பத்தின் போது மட்டும் 
மிதந்து மேல் வந்து 
பின் அமிழ்ந்துவிடும் 
பலகோடி வாய்மொழிப் 
புராணங்களில் இதுவும் ஒன்று. 
ஆயிற்று. தெப்பம் தெப்பம் என்று 
மாசித் தெப்பம் ஆயிற்று 
இனிமேல் அடுத்த வருடம்தான் 
பார்த்து! ஓரமாகப் போகாதீர்கள் 
முள்ளிருக்கும் இல்லையேல் 
யாராவது மலம் கழித்திருப்பார்கள் 
இப்படி வாருங்கள் சாலை நடுவாகவே 

***

No comments:

Post a Comment