Thursday, November 4, 2021

நரைவெண் கழுதை

தண்ணீர்க் கோட்டில் தலைநனைத்த காகங்கள் 
கரைந்தே உலகைக் காக்கச் சென்றன 
மணல் உடுத்திய துணியாய்த் 
தொடர்ந்த ஆற்றில் மீன்கள் 
ஆழம் தேடின 
விண்மீன் வியந்து விளங்கிய பசும்புல் 
கோரை கொக்கரிக்கப் பதில் தரவில்லை 
கொண்டவன் காவியில் காசிவாசி ஆகிட 
ஊர்வம்பின் கொள்ளிடமாய் 
உருக்குலைந்தவளின் குறிப்பற்ற பார்வையில் 
கோணிச் சரிந்தது கூனல் பிறை 
ஆனை படுத்து அகன்ற மடுவில் 
மீனாய்த் துள்ளிய பிள்ளைக் களிப்பில் 
ஆற்றின் மேலே அகழ்ந்த குழியில் 
பள்ளி கொண்டவன் மஞ்சனமாடத் 
தெளிநீர் மொண்ட தாமரம் சிரிக்கப் 
பொழுது சாயும்வரையில் 
பொதியின் கவலையற்றுக் களி மீக்கூர 
நகையாடிய நரைவெண் கழுதை 

***

No comments:

Post a Comment