Friday, November 26, 2021

மதிவென்ற நினைவு

ஆழ்ந்த சிந்தனையின் வேர்கள் 
உயிர்ச்சாரம் கொண்டு ஓங்கும். 
அவ்வப்பொழுது வந்து போகும் காமமும்
உயிரில்தான் நெறிகட்டும்.
எது உயிரின் அடையாளம்?
உயிராகி நிற்கும் உள்ளத்தின் ஆழமா?
உயிருக்காக வேர்பாயும் காமத்தின் வேகமா?
என்ற குழப்பத்தில் மீன் பிடித்துக்
கூடைகூடையாய்ச்
சமயச் சந்தைகளில் விற்பனையாகும்.
சிந்தனையின் கட்டிடங்கள் சரிந்துவிழச்
சருவியெழும் காமமும் சுயமன்று
என்று விஞ்ஞான விளக்கில்
விரியும் விமரிசனமாய்
அறிந்தும் அறியாத மாலைப் பொழுதாய்
விடிவும் இருளும்
விரவி நின்ற வெள்வரைப்பாய்ப்
புரிந்தும் புரியாத தெளிவின் முகத்திரையில்
முத்தாடி நின்ற முழுவெண்மதி சூடிப்
பித்தான காலத்தில்
பிறங்கும் ஓர் பேருண்மை
உறங்கும் அறிதுயிலில் ஒரு கனவாய்
உருவான பொழுது மதிவென்ற நினைவு. 

***

No comments:

Post a Comment