Wednesday, November 24, 2021

உயிர் விடுதல்

தூக்குமாட்டிப் போயிட்டானாம் 
அதுதான் கும்பல் 
நேற்றிரவு நெடுநேரம் 
தெற்குவாசல் நண்பர்களுடன் 
அரட்டையாடி இருந்தானே 
பார்த்தேனே! அடப்பாவீ .. 
காலையிலா? ராத்திரியிலா? 
ஏன் கேட்கிறீர்கள் போங்கள்? 
என்றும் இல்லாத திருநாளாய் 
விடியற்காலம் எழுந்து 
தன் துணியைத் துவைத்தானாம் 
வெளியே எங்கோ போனான் என்று நினைத்தார்கள் 
விட்டத்தில் தொங்கியதை 
விளக்குமாறு எடுக்கச் சென்ற 
வேலைக்காரி கத்தியதால் கண்டார்கள் 
காதல் தோல்வியாம் 
கணக்கு வாத்யார் பெண் கூட ஊரில் இல்லை 
ஆண் என்றால் காதல் தோல்வி 
பெண் என்றால் கற்பின் தோல்வி 
பெரிய இடத்தில் ஆள் தெரியும் என்றதனால் 
போலீஸ் வழக்கு எதுவுமின்றி முடித்து விட்டார்கள் 
ஆனால் அவன் எழுதி வைத்து 
விட்டுப் போன கடிதத்தை என்ன செய்ய? 
‘பதினோராம் வகுப்பில் 
தோல்விக்குத் துயரம் தாங்கவில்லை. 
முழுப்பொறுப்பு கல்வி அதிகாரிக்கு 
தொலைந்துவிட்டால் அவரைப் போய்க் கேளுங்கள் 
எட்டாம் வகுப்பிற்காவது 
என்னைப் பாடமாய் வைக்கச் சொல்லி’ 

‘ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் 
என் உயிரைத் தந்திருப்பேன் பதிலுக்கு. 
பேசாமல் செய்தானே படுபாவி’ 
என்றழுதான் உயிர்நண்பன் 
‘அடப்போடா பைத்தியமே! 
தொட்டதற்கெல்லாம் உயிர்விடவா தோன்றுவது? 
தொட்டாற்சுருங்கியாடா வாழ்க்கை? 
உன் கர்மத்தைச் செய். 
பலனுக்காகக் கவலைப் படாதே 
எவனெவனுக்கு எதுஎது என்று தெரிந்தவன் 
எல்லாம் பார்த்துக்கொண்டு படுத்திருக்கிறான்’ 
என்று பொரிந்து தள்ளியது 
தொண்ணூறு வயதுக் குழந்தை 
‘இனிமேல் இந்தப் பையன்களைத் 
தனியே விடக் கூடாது 
தத்துப்பித்து என்று செய்யறதுகள்’ 
என்றது அங்கலாய்த்தபடிக் கலைந்த கூட்டம். 

***

No comments:

Post a Comment