ஆழ்ந்த உள்ளப் பேழ்வாய்ப்
பேரார்வம் சொரிந்து
அஞ்சலி செய்தோம்
அர்ப்பணமாய் அன்பைப் பெய்தோம்
வாழ்ந்தவன் மறைந்ததனால்
வானுலகு தான் கவிந்து
வரமாட்டான் என்றதனால்
கனிவு மீக்கூர்ந்து
கண்ணீரில் மிதந்து
போன காலப் பொந்துகளில்
புனிதம் கூடுகட்டியது
மண்ணில் திரிந்தவரை
விண்ணளந்த பெருமாள்
மரித்து மண்ணளக்க
மாண்பின் வளக்கை
வான் குளக் கண்ணீர் வழித்தெறிந்து
தானளந்த பரிதி
விழுந்தெழுந்த கணக்கு
வாழ் நாளாய்க் கோணாமல்
கல்லறையில் முட்டியது
கங்குத் தீ நக்கிக் கரியாகிக்
காலத்தில் மரித்த உயிர்
இறப்பில் உயிர்த்தெழுந்த
அதிசயத்தின் ஆராய்ச்சிமணி
சேகண்டி சிந்திச் சவத்திற்குப்
பாதையெல்லாம் பறித்தமலர்
இறைத்துப் படுத்த உயிர்
இயற்கையில் கலந்து இலயமாகப்
புயலான எண்ணங்கள்
போன வழி எங்கே?
பொன்றாக் கவிஞனாய்ப்
பூரித்த பரவசத்தில்
விளைத்திட்ட வீறாவேசம்
வடிந்த வழி இதுதானோ?
தரணியில் இதுவரையில்
தாளாது நாமாற்றும்
தொடர்கதையும் இதுவேயோ?
தோன்றலுக்கும் மிச்சமிதோ?
தோன்றும் உயிர் தொடரும்
தீயுண்ணாத் திறல் எதுவோ?
***
No comments:
Post a Comment