விளையாடித் தெருப்புழுதி அளைந்ததூஉம்
அம்மணத்தை அறியாது
அறிவித்தால் புரியாது
ஆடை ஒரு சுமையாய்
அலைந்து திரிந்ததூஉம்
சுரத்தில் உளறிடவும்
சுற்றி உடம்பில் எங்கும்
குளிரத் துணிமடித்துப்
பத்தை போட்டுக் கிடந்ததூஉம்
சுற்றித் திரிந்த வேகத்தில் சகாக்களுடன்
சருக்கும் பாறையொன்று
தெப்பக்குளத்தருகே இருக்கென்று
சொன்னவன் வழிநடத்தச்
செல்லும் படையின்
சுற்றிவரும் சொகுசில் சென்றுவிட்டு
வீட்டில் விசிறிமட்டைக் காம்பால்
அடிவாங்கியதும் விதியே!
நீயமர விரித்திட்ட வீராசன இருக்கைதானோ!
என்னுள் என்று வந்தாய்?
இத்தனை நாள் எங்கிருந்தாய்?
இதுவே கதியென்று காதோரம் பேசியதும்
விதியே நீதானோ?
முட்டை மிட்டாய் சொர்க்கமென்று
அழுகையே படையாக
அலறிவிழும் அடிகள்
மிட்டாய் வரும் படிகள்
என்றே அழுத்தத்தில் அழுகை சுதிகூட்டத்
தொலை என்று சில்லறைகள்
தரையில் சிந்தியதே
விலை அதற்கு நீதானோ, விதியே?
வாசலில் நின்றாயோ?
அலைகின்ற மனத்தின்
அவசத்தில் நுழைந்தாயோ?
யாரும் அறியாமல்
உள்நுழைந்தாய் என்றாலும்
அறிந்தே நின்றிருந்த
என் அறியாமை உரசி நின்றாய்
காண்கின்ற காட்சியெல்லாம்
உன் கைவண்ணம் ஏந்தி நிற்கும்
சூழ்ந்துவரும் நிகழ்வெல்லாம்
சூழ்ச்சியே உன் சார்பாகும்
நீயன்றி நான் நின்ற
திருக்கணங்கள் நினைவுண்டு
நானன்றி நீ நிற்க
ஒரு கணமும் இயல்வதில்லை
என்று நீ வந்தாய் என்பதன்று முக்கியம்
இன்றுன்னைக் கண்டுவிட்டேன் என்பதனால்
இனி உந்தன் சாகஸங்கள் செல்லாதன்றோ?
’நான்’ என்று
நான் பவனிவரும் தேரில்
நானன்றி நீ பவனி வந்த இதுநாளில்
ஏனென்று ஒரு கேள்வி எழுந்ததிலையே
ஏனென்று நினைக்கின்றேன். இதுதான் விந்தை.
***
No comments:
Post a Comment