Monday, November 29, 2021

எழுதிக்கொண்டிருக்கும் காவியத்திலிருந்து சில கதிர்கள்

காவியம் எதைப் பற்றி?  
காலத்தின் கரை வீற்ற நித்யங்களைப் பற்றித்தான் 
காவியம் கதுவியெழும். 
நித்தப் பொருள் அனைத்தும் ஆலயமாய்ச் சேரும் இடம் மனிதன். 
அவனைத்தான் காவியப் பெண் 
அன்றிலிருந்து காதலில் கட்டிவிட நினைக்கிறாள். 
கைக்கிளையாய் ஆகிவிடுமோ என்று பெருமூச்சு எறிகிறாள். 
உலகின் பல மூலைக்கும் சென்று 
இரவுக்குறியும் பகற்குறியும் வைக்கிறாள். 
வந்தாய் போலே வாராதாய் என்று ஏங்குகிறாள். 
வாராதாய் போல் வருவானே என்று எதிர்நோக்குகிறாள். 
பாங்கரும் விறலியரும் பரிந்து சென்ற பெரியோரும் 
இன்னும் திரும்பிய பாடில்லை. 
எத்துணையோ சிற்றில் இழைத்துச் சிணுங்குகிறாள். 
சிதைத்து அந்தச் செல்வன் சிந்தை மகிழ்விப்பான் 
என்று காலத்தின் அத்துவாக்கள் எங்கும் 
விழி வைத்து நோக்குகிறாள். 
உள்ளம் கவர் கள்வனை 
உருவெழுதிப் பூத்த உவகையில் உடல் நனைகிறாள். 
என்றும் நெட்டுயிர்ப்பே இவள் பங்காய் 
அந்தப் பெருந்தகையோன் திரிகின்றான் தனைமறந்து, 
பாடிவீடெங்கும், தன்னும் உருவும் பெயரும் நினைவயர்ந்து. 

வாழ்வின் விடிவெள்ளி பிலிற்றும் கதிர்தோய்க் 
காலக் கரும்புனல் கருத்தோடிக் காணாவான் கருசுமந்து 
பால்நிறப் பைந்தடப் பரத்தின் பள்ளிக்கட்டில் 
மாலாகி மகத்தில் ஆயிரமாய்த் தலைவிரிய 
மூலத்தூண் உதைத்து முட்டித்த முன்னூக்கம் 
காலத்தூள் பரப்பிக் கண்விரித்த சையோகம் 
ஒலியில் உருவாகி உருகடந்த மெய்யாகி 
மெய்யாக்கும் பொய்யாப் புலத்தின் வித்தாகிச் 
சூழும் கோலத்தின் சுயத்துள் செறிந்து 
பாழில் விரிந்த பைங்கமலத் தண்தீயில் 
ஏழாய்ப் படிந்து எழுந்த எழில்யோகு 
ஊழாய் விடிந்த உன்மத்தக் கணமொன்று. 

கல்லுருகிக் காற்றாய்க் கலந்து 
காரிருளின் காட்சியற்ற கதிராய்க் 
ககன வெளியற்ற உள்ளாய்ப் 
பெயருரு பிறங்காப் படைப்பின் முற்கணக் குழம்பாய் 
உயிரின் அண்மைக்குள் ஒருபெரும் தொலைவாய் 
உற்றறி கருத்தின் அரும்பா முனைவாய் 
அறியா பரப்பில் கூறுகள் குலையா 
இயலும் தகையாய் இயற்றா தொகையாய்ப் 
பயிலும் பரநதிப் புலமாய் விரியப் 
படைப்பின் உருக்கோவை பெயர்ப்பனுவல் குவையோடு 
பக்குவமாய்ப் புணர்ந்திசையப் பூரித்த பொன்வேளை 
பொழுதசைய உழுபுலத்தின் கொழுவாய் 
அகமாகிப் புறமாகா அண்டமுன் அவத்தையினில் 
திறலும் விரிவும் இருப்பின் களிப்பும் 
வேக வளையாய் விறலாய்க் கெழுமி 
விரவிய தம்முள் வித்திட விளைந்த 
விண்ணின் மண்ணாய்ப் பூத்தது வானம். 

வானின் வடிவச் செதில்பரல் குழைந்து 
வேகத் தண்ணளி விண்பூப்புறைய விரைவின் நிகழாய் 
ஒன்றைக் கடந்த பலவின் வீச்சாய்த் 
திரைகொள் முரணாய் மாற்றவளியாய்த் 
தடம்படு காற்று திறல்சூல் கவ்வத் 
திறல்முற்றித் தீயாகித் தெய்வத் தண்ணளியாய்த் 
தருநீர்மை நீராகித் தரைகொண்ட கருவில் 
உருவாகி உணவாகி உயிராகி உடல்கொண்ட 
உணர்வாகி ஒன்றாக பலவாகும் ஒருஜீவன் 

ஒரு முட்டை அணுத்தட்டை 
ஒன்றிற்குள் உருவாகும் ஓரிரட்டை 
ஒன்றைப்போல் ஒன்றாகி வேறாகிப் பலவாகி 
மாறாகிப் பெருகிவந்த வையம் 
கூறாகிக் கோணணுவின் கோப்பாகிக் 
கொண்ட வடிவின் கூடிவந்த குணமாகிக் 
குணம்தொடுத்த தொடர்பாகித் 
தொடர்பாலே பல்திறனாய்த் தோற்றமாய்த் 
தொடநின்ற தேற்றமாய்த் திரண்ட 
பொருளாய்த் தழைத்த மையம் 
பலவான இயல்பாட்டில் பொருத்தமுறக் கூடியவை 
பருண்மையாய்ப் பொதுளிய நிலையம் 
ஆகாத சாத்தியங்கள் அண்டப் பொதுசத்தாகி 
ஆடாத திறல்செறிவு அலையாகி 
அலையாத பொதுவில் கோடாத பொருளுக்கு 
அரும்பாகி உருவற்ற பொருள்முயக்கம் 
கருக்கொண்டு வெளியாக்கி 
வடிவோடு தொலைவும் வரும் போகும் நிகழ்வும் 
வடிவற்ற நிகழ்கண நடுக்குறு விரைவும் 
காணாத காட்சியின் கண்ணற்ற பார்வையில் 
கோணாத கோலமாய்க் கொண்டுதிகழ் கருத்தாகிப் 
புலப்பட வெளிப்படு படைப்பிடைப் புடைப்பொடு 
புரிபடப் புறப்படு ப்ரபஞ்சமாய் ஆனதும் 
நீராகி நிலனாகி நிதானமாய் 
நின்றெரியும் கதிராகி நிலவுமாய் 
நில்லாத பருவமாகி நீட்சியாய்க் குறுக்கமாய் 
நிவந்துடன் ஆழ்ந்துபின் அகன்றலர் இயக்கமாய் 
உவந்தபேர் தொடர்ச்சியாய் உருகெழு வாழ்க்கையாய் 
உற்றதொரு வைய நாப்பண் ஓரூர். 

அலைமீது ஏறிவந்த ஆற்றல் 
பாழின் வாய்புகுந்து பொருளாகித் தோற்றுக் 
குலைந்தவலை கொண்டையினில் மின்னக் 
குலையாத உயிரோடுயர்ந்து 
உணர்வாகி உற்றமனமென்ன 
ஊரை வளைத்துவரும் ஆற்றில் 
உயிர்திகழும் பயிர்ப்பான பசுமை 
உணர்வாகித் துயில்கொள்ளும் கருமை 
விழிபயிலும் அறியோகு புணர்வில் 
செழிக்கின்ற திருவாகிச் செவ்வான் 
பழிக்கின்ற தருக்கிளையில் பயிலும் 
மொழிக்கிள்ளை மிழற்றுமொரு தீஞ்சொல் 
தரங்கம் ரங்க ரங்கா அரங்க மரங்க ளுறங்கும் 
உறங்காத சான்றாகி உருளும் காலம் 
அறங்கா வலாகி அயரும் வேளை 
எண்கோண மூவுருளை எந்திர மாயையொன்று 
கண்காணாக் காம்பில் கறங்கும் நின்று 
பொய்யாய் வடித்த புத்தமுதம் பொருளில் படிந்து 
பையவெழுந்த பல்வடிவாம் பசப்பின் மெய்யில் 
தைவந்த நாவின் தீர்க்கம் சுழித்துச் 
சுட்டும் நுனியாய் எந்திரச் சுரும்பில் ஆர்க்கும் 
இருட்டுக் குளம்பாய் ஒளியின் தடமொத்தும் தமப்பாழ் 
சுருளாகி விரிநாகச் சுரமுழைக்குள் பதுங்கும் 
ஒலியென்றும் ஒலியற்ற வெளியென்றும் 
திரண்டஒரு கோளம் பொரித்துப் 
புறவோடு பொன்சிவப்பாய் வான்தடவ 
விரித்து வெளிப்போந்த வியன்புள் விரிசிறகு 
முன்னசை ஓசையாய்க் குரலாய் முடுகிய 
சிறகின் நீழல் சொல்லும் பொருளுமாய்ச் 
சிவணிய சிலிர்ப்பில் சென்றந்த முழையை நோக்கும். 
நோக்கரிய நுண்ணுணர்வின் நுகத்தடி 
நுவலா நன்மையின் நறவத் தீஞ்சுவை 
நயக்கும் வாக்கில் கால்வைத்து வரைகடந்தெழுந்த பரத்தின் 
போக்கரிய பதமாய்ப் புக்கரிய நிலையாய்ப் 
பூரித்த புதுவிண் பூரணம் திளைப்பப் 
பூவா மலரின் மோவா நாற்றம் 
பொன்றா விசையாய்ப் புலத்தில் புரிய 
ஒன்றிய உணர்வின் குருத்தில் ஓயா 
ஒற்றைக் கண்ணும் இமையா முனைப்பும் 
இரட்டையைத் தன்னுள் இயற்றிட இயைந்த 
ஏகம் ஆங்கண் இயன்றது தூணாய். 


காதற்ற கேள்வியில் ஓசையற்ற பேரோலம் 
மீதுற்ற மௌனம் விழுங்க விழித்தது வெளி 
சலனமின்றிச் சமைந்தது இருப்பு 
சத்தியம் புலனில் மெய்ப்படக் கனிந்தது காலம் 
சங்கம அலைத்திறல் சரிந்தது சடமாய்ப் 
படைப்பின் போர்வையில் பனித்துளித் தடமாய்த் 
தனித்து உயிர்த்து உயிரி தொகைத்து இரை நாடி 
மனித்தப் பிறவியாய் மலர்தரு நாள்வரை 
மாறிய பரிணாம மதகின் நீட்சி 
கால சொப்பனத்தின் காட்சியை மறைப்ப 
எழுந்த குரக்கினக் கூர்மதி திறப்பப் 
பிறந்த மனத்தில் பிறந்தமுன் மனிதன் 
இறந்து காட்டிய வழித்தடம் விண்ணில் 
அப்பால் உலகின் அடித்தளம் இட்டது 
பிறந்த உயிர்கள் புவியின் முலையுண்ண 
இறந்தவை வானின் மடிமுட்டியதும் 
சுரந்த பாலைச் சுரவெளி கரந்த 
வெறுமை விரித்தது விண்ணின் பெருமை. 
இரவும் துயிலும் கனவும் இறப்பும் 
எழுப்பிய மானதம் ஏந்திய ஏக்கம் 
விழுமிய மதிப்பின் விண்ணுரு வாக்கமாய்க் 
கெழுமிய குருத்தின் கொள்கைப் புராணம் 
விள்ளும் துவக்கப் புள்ளிகள் வாழ்வின் 
உள்ளுறை இறைந்து உண்மையைச் சூழ்ந்து 
உவட்டா மாயத்தின் உரைப்பெருக் காயின. 


பிரபஞ்ச இயக்கம் இயற்கையின் மாற்றம் 
காலச் சுற்று உடலின் விகாரம் உளச்சலனம் 
எல்லாம் மனித செய்கையைப் பிரித்துக் காட்டியது 
பிரபஞ்சம் என்ற முழுமையின் அறியாமை 
பிற அறிவுகளை உள்ளடக்கியது 
அடைந்த அறிவுகள் தம் ஆழ்பொருளின் அடிவானத்தப்பால் 
அறியாமையின் பிரபஞ்ச வரைக் கோட்டை 
உயிர்ப்பின் ஸ்தம்பித கணங்களில் உன்னித்து ஈர்த்தன 
உயிர்ப்பின் இடுக்குகளில் உட்பொசிந்த உண்மைகள் 
பிரபஞ்சத்தின் அறிவுருவக் கட்டுமானங்களைப் பலசமயம் 
அடியோடு மாற்றின அல்லது அவற்றின் 
இடிமானங்களில் அமர்ந்து சிறகடித்தன 
காலம் கரைக்க முடியாத உண்மைகள் இருப்பது போன்று 
அள்ளிச் செல்லமுடியாத இடிபாடுகளும் தங்கித்தான் போகின்றன 
திடீர் அழிவுகள் நெடிய தொடர்ந்த இழுபறியான இருப்புக்கு 
உலகம் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் 
ஒப்பனையான சிலிர்ப்புகளே அல்லது சிணுங்கல்களே 
எந்த முன்னேற்றமும் இல்லாது நெடுங்காலம் 
மருகிச் செல்லும் உலகைத் துரிதப் படுத்திவிட முடியாது 
என்று மனிதன் உணரும் பொழுது 
தான் துரிதமாக முன்னேறத் தொடங்குகிறான் 
முன்னேறும் பொழுது அவன் உணருவது 
என்றும் உலகம் நகர்ந்ததுகூட இல்லை என்பதே 
நகராத உலகத்தில் தான் மட்டும் எங்கு எப்படி 
நகர்கிறோம் என்று அவன் குனிந்து நோக்குங்கால் 
உலகைக் கடந்து விடுகிறான். 
உலகைக் கடந்தவனுக்கு நிற்க இடமில்லை 
இருக்க மட்டுமே 
இருக்கத் தெரிந்தவனுக்கு இன்மை புழக்கத்தில் இல்லை 
இன்மையைக் காணவேண்டும் என்று நினைப்பவன் 
அதற்கான இடத்தையும் தனக்குள் எடுத்துச் செல்கிறான் 
இன்மையைக் கண்டேன் என்று அவன் ஒருவேளை சொன்னால் 
அது தனக்குள் சுமந்து சென்ற இடத்தினின்று 
தான் தனியாய் விலகி நின்றதேயாகும் 
அவன் விலகி நிற்கும் அவனுள் நின்ற வெற்றிடம் 
அவனைத் துரத்த ஆரம்பித்து விடுகிறது 
எங்கெங்கோ ஓடி இரைத்துச் செல்லும் அவன் 
உண்மையில் தனக்குள்ளேயேதான் புரண்டு படுக்கிறான் 
அவன் தப்பித்துக்கொள்ள ஒரே வழி 
முன்னேற்றம் என்பது உண்மையில் 
தான் அறியும் மனிதனாகத் தன்னை  
உணர்ந்து இருப்பதே என்பதை உணர்கிறான் 
அறியும் மனிதன் செயல்களை 
அறிவின் சமிக்ஞைகளாகக் கண்டு 
அதற்கேற்றபடிச் செயற்கோவைகளைச் 
சமைத்துவைத்த நிரலின் சுகிருதத்தில்  
சரியும் தன் கவன முனைகள் 
சார்ந்தெழச் சூழ்ந்த சஹாயத்தில் சுகமடைகிறான். 
பிரபஞ்ச அறியாமை அவனை வெருட்டும் 
பாதாள அறையின் மேற்கூறையாய்க் கவியாமல் 
அவன் விசித்தெழ என்றும் வரையற்று விரியும் 
வாய்ப்பின் வான்புலனாய் 
அவன் விரிசிறகு நிமிர நிமிட்டும் 
உள்வதியும் சன்னதமாய் 
உணர்வுள் உத்கீதமாய்த் தொடர்கிறது. 

உணர்வுள் இசையெழப் பெற்ற மனிதன் உறங்குவதில்லை 
ஒரு புல்லிலும் அவன் நாடி ஒலிக்கிறது 
புலரிகள் அவனுள் அஸ்தமனமற்று விளங்காநின்ற 
பரிதியின் கலைகளைக் கணக்கிட முயன்று களைப்பவை 
யுகசந்திகளில் ஒருவேளை அவன் நின்று நோக்கலாம் 
அவன் பார்த்த இடங்கள் பாரம்பரியங்களாகிப் 
பின்வருவோர் பயிலும் நடைவண்டிகளாகத் தொடர்கின்றன 
எங்கும் அடங்காச் சத்தியம் 
செயல் முடுக்கிச் சிமிழ்த்த சடங்கிலும் அடங்காதெனச் 
சந்ததம் அவன் உணரினும் 
சடங்கிடைச் சருவும் சையோகத்தில் சுகிப்பவன்போல் 
விடாது நிரல்பட இயற்றும் வினைத்திட்பம் 
வரைகடந்த ஒன்றைத் தொட்டுப் பயில வாய்த்ததுபோல் 
வழங்கும் மாயையின் வசதி அவன் வாழ்நாள் துணை. 


காடு பூத்த தத்துவத் தேடல்
கடக்கவொண்ணா மரணத்தின் மடிபிடித்துக்
கேட்ட கேள்வி மரித்தபின்
ஜீவன் இருக்கிறானா இல்லையா?
இருக்கிறான் என்று சிலர் இல்லை என்று சிலர்
உண்மையைச் சொல்ல உயிர் எடுக்கும்
மரணத்தால்தான் முடியும் என நினைத்துக் கேட்டவன்
பதிலுக்கு மௌனத்தைக் கண்டான்
மௌனம், கிளர்ந்த கேள்வியும் அடங்கிக்  
கிளவியாக்கமும் ஒடுங்கிக்  
கருத்தின் அரும்பும் ஆடாக் கட்டி மௌனத்தில்
தானென்ற உருவும் அகன்ற தனித்த அருவத்தில்
கேள்விக்கும் பொருளில்லை
கேட்கப்பட்ட மரணத்திற்கும் பொருளில்லை
என உணர வாய்த்த தருணங்களில் உரை ததும்பி
உறைந்த பாளங்களாய் உபநிஷத வாயமுதம்
உன்னித்தெழுந்த உயிர் புணர்ந்த 
உணர்வின் முத்தங்களாய்
நினைவின் கன்னங்களில் 
நிலாக்குறியிட்டு நித்தியமாயின. 


முனிவனின் நடுக்கம் ஓய்ந்து 
தீர்க்கமுற்றது தியானம் 
உலகங்கள் உருண்டு உருண்டு தம் கதை பேசின 
மலை முடிகள் கடலடியாகிக் 
கடலடிகள் மலைமுடியாகச் 
சூடேறிய கடலை ஆற்றி ஆற்றி 
யாரோ அருந்த யாரோ கொடுக்கக்  
காலம் உருண்டுகொண்டிருந்தது 
இதழ் வைத்துக் குடித்த வட்ட நிலவம் 
வைத்து வைத்து ஊற்றிக் கொண்டிருந்த 
முறை தவறாமல் நடந்து கொண்டிருந்தது 
உயிர்க் குலம் ஒன்றென்று 
ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தது சாவு 
மனிதரில் பேதங்கள் இல்லை என்று 
நினைவு படுத்தியவண்ணம் நிகழ்ந்து கொண்டிருந்தது பிறப்பு 
நதிக்கரையில் மலைக் குகையில் மனிதன் 
நாகரிகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான் 
வேகமாகச் சென்ற காலம் அவன் கையில் 
கல்லையும் செம்பையும் இரும்பையும் போட்டு விட்டுச் சென்றது 
ஆயுதம் பிடித்த கை ஆயுளைப் பறித்தது 
வாயு தன் போக்கில் உயிரின் வேந்தனாய்த் திகழ்ந்தான் 
தீ என்னும் விருந்தாளி 
விண்ணை விட்டு மண்ணுக்கு வந்தவன் 
மனிதரின் தாதியானான் மரிப்பவர் அமரரானார்.  
பலவான மனித குலம் கூடி 
அனுபவத்தின் பாடமென்ற தூரிகையால் 
காலத்தின் கலைக் கழகத்தில் 
மனிதன் என்ற ஓவியம் எழுத முயன்றது 
ஓவியத்தைக் கண்ட காலம் தன்னைத் தானே காமுற்றது 
மணக்கத் தன் பிம்பத்தை மண்ணில் நிறுத்தி 
நகரத்தில் அரசன் நாட்டிற்கு மன்னன் 
பேரரசில் மாவேந்தன் என்று 
புறந்தள்ளி ஓய்ந்த காலக் கிழவிக்கு 
இன்னும் வரன் வாய்க்கவே இல்லை. 


வறண்ட மனப்பாலை காய்ந்து 
விதிநொந்த அறிவின் வெப்பில் 
வாழ்வின் வெள்ளப் பெருக்குலரா 
விதையூற்றும் கரிந்து வெறுப்போடி 
விரவும் மணற்பந்தற்கீழ் வெருட்டும் காற்று 
வரையாத ஓவியமாய் வெளிரும் வானம் 
ஒளியின் பித்தம் தலைக்கேறி 
ஓடாப்புனலை கனவுகாணும் தரை 
ஊழிக்கு முன்னின்று உடற்றிய வெறுமை 
ஒளிவற்றுக் கரவற்று ஓய்வற்றுக் கறங்கும் அம்மணக்கூத்து 
அளியற்ற நெஞ்சின் ஆர்ப்பாட்டமாகி 
வெற்றுமின் விரிசலிட்ட வெண்மேகம் 
பழியுற்ற வாழ்வின் பசலையாய்ப் 
பார்மூடும் அசட்டு வெயில் 
நீர்மை காய்ந்த நிலக்கோடாய் 
நெருடும் குருட்டு யோசனைகள் 
சார்ந்து சரிந்து சுவன்று சுமந்த மணற்குன்றுகளாய்ச் 
சலித்த மனப்படிவங்கள் 
வாய்த்த குரல் நனைக்கும் வாயூறும் எச்சில் 
வற்றாச் சுரப்பாக விழையும் வேட்கை 
சேய்மைக்கும் அண்மைக்கும் 
சமன்பாடு காணாப் பார்வையின் வெறித்த நோக்கு 
காலடித் தடத்துள் கால் பதியும் மணற்குழிவாய்த் 
துயர நினைவின் தோய்வு 
நிச்சல வாழ்வை நிலையாதாக்கி 
நடுக்குற வீசும் சூறையாய் விதியின் சுழல் 
பேய்க்கபந்த விரையும் கூம்பாய் 
அவப்பண்ணின் அதிர்வில் சிதறும் 
எதிர்கால அச்சான்யமாய் ஊமை ஊளைகளின் தொடர்ச்சி 
வெற்றியின் தருணங்கள் தோல்வியின் பரப்பில் 
விடாய் வெறியூட்டும் துளிகள் 
மயங்கித் தலை சாய்வதன் முன்னம் 
அருஞ்சுரம் கடந்த தண்வள நினைப்பின் கிளரூக்கம் 
நின்றுதன் நெஞ்சில் நேரும் சிந்தனை எல்லாம் 
நிர்மூலமாக்கும் நெட்டுயிர்ப்பு 
என்றுமுள உண்மை என்பதனை 
மூன்று காலங்களில் தேடிப் புகையும் பொய்மை 
உயிரின்மை உருக்கொண்டு வாழ்வுபோல் திரியும் கயமை 
ஊனம் தகுதியாகி உருக்கரந்த அழுக்காறு 
அனல் வெப்பாய்ச் செய்யும் வாட்டம் 
ஊருணி நச்சுப்பொய்கையாய் ஊட்டும் 
ஆலத்தை உவக்கும் தன்வெறுப்பு 
அகந்தைக் கிழங்குகள் ஆகாயத்தில் புதைந்து 
மண்ணில் படரவிட்ட கொடிகள் 
உறிஞ்சி முடித்த நீர்மையாய் உபசார வார்த்தைகள் 
சுட்டெரிக்கும் வெயிலிலும் 
காயாத பசையாய்ப் பசப்பின் குழைவு. 

***  

No comments:

Post a Comment