Wednesday, November 24, 2021

தீபாவளி

இன்னும் இரண்டுமாதம் இருக்கிறது 
நரகாசுரன் வதமாக 
வெடிப்பட்டியல் போன வருடத்தது 
எடுத்து ஒரு முறை உத்தேசமாகப் பார்த்தாயிற்று 
போட்டு வைத்த கணக்கைக் கூட்டிக் குறைத்து 
ஓர் ஆடிட்டே நடக்கும் 
அப்பன் கைவரிசையில் 
கோவிந்து ஆத்தில் தலை தீபாவளி 
சிவகாசியிலிருந்து பதிவு 
நேர் இறக்குமதியாம் 
கூடப் பிறந்ததெல்லாம் பெரிதாகி விடிந்து 
வீட்டிலும் தலை தீபாவளி வர 
வருடங்கள் பலவாகும் 
ஒரே ஒரு முறை 
போட்ட பட்டியல் அப்படியே வாங்கிவிட்டால் 
அதுதான் சொர்க்கம் 
அது ஒரு நாள் நடக்காமலா போகும். 
சாதாரணமாக மங்கலச் சொற்கள் 
முழங்கும் வீடு 
அமங்கலத் திட்டுக்களுக்கென்றே 
தீபாவளி வருகிறது 
பிச்சைக்காரப் பரதை 
எருமை தரித்திரக் கம்மனாட்டி 
இவ்வளவும் சேர்த்து உச்சாடனம் ஆகித்தான் 
அப்பன் வாயில் பேச்சு வரும் 
என்ன இது! என்ற சுருதி 
அடுக்களையில் தீயும் 
அழுகைவெடி தாராளமாய்ப் புழங்கும் 
எங்கள் ஆத்திரங்கள் புஸ்வாணம் ஆகும் 
எதிர்வீடு கோடி ஆகம் மூன்றாகம் தள்ளி 
இந்த முகவரிகளின் தோழர்கள் வந்துவிட்டால் 
பிறகு ஆத்திரமென்ன? அவதி என்ன? 
சட்டை நுனியில் அழுகை சங்கமமாக 
ஒற்றைச் சக்கரம் ஓட்டித் தெருவில் 
ஒதுங்கி நின்ற இடமெல்லாம் 
சரக்கட்டு, பூச்சட்டி, ராக்கெட்டு 
வெடிக்காத வெடிகள் எங்கள் கிடங்கிற்கு 
வேடிக்கை பார்த்து வீதிவீடுகள் தீர்ந்த பின்பு 
’தெப்பக் குளத் தெருவில் சர அடுக்கு’ 
செய்திக்குப் பின்னே கைச்சக்கரங்கள் பறக்கும் 
ஊர் சுற்றும் சிறுவர்கள் 
ஒரு வீட்டிற்கா சொந்தம்? 
ஊருக்கே சொந்தமானவன் 
உள்ளே படுத்திருக்கப் 
பேருக்குச் சொந்தமானவன் 
கோபத்தில் காத்திருக்க 
யாருக்குச் சொந்தம் நாங்கள் 
தெருவோடும் சூரியன்கள் 
வருவோர் போவோர் எல்லாம் 
வாங்கி வந்த சேதிகளைத் 
தெருவெங்கும் தேடித் 
தெளித்துவரும் ஸ்ரீமான்கள் 
தீபாவளிக்கின்னும் பத்துநாள் இருக்கிறது 
பத்தாநாள் இன்றே திரி பற்றத் தொடங்கியது 
பாபுவாத்துப் பத்தாயிரம் வாலாவா 
பத்து நிமிஷமாக ஓயவில்லை 
பட்டாசாலையில் அப்பன் தூங்கியாச்சா பாருங்கள் 
அகப்படாமல் நழுவ ஆறடிச் சந்து இருக்கிறது. 

***

No comments:

Post a Comment