Thursday, November 4, 2021

பரணில் வைத்த சொல்

மூலத்தில் முளைவிட்ட கருத்தொன்றை 
மூலப் பழங்கதையை 
மூச்சில் உயிர் பெய்து மூண்ட நறுங்கவியை 
மூட்டி வைத்து மூலக் கனலூட்டும் 
வெப்பத்தை வாங்கி வைத்த வார்த்தைகளை 
நினைவுப் பரணேற்றச் சொல்லேணி சாத்திச் 
சாராத தத்துவத்தில் சமைந்து வரும் 
சுயம்பாகச் சொக்கத் தழலெழுந்த 
செம்பொற் கட்டுரைத்த சத்தியத்தை 
மூளாத முத்தி முனைப்பில் முடிச்சிட்டு 
முன்பரணில் போட்டு வைத்தேன் 
முடிச்சொ பெரிதில்லை 
மூச்சுக்கு அவிழ்ந்துவிடும் 
நடக்குங்கால் நான் குனியுங்கால் 
நால்வார்த்தை பேசுங்கால் 
ஊடாடி நிற்குமோர் ஒளிப்பிழம்பாய் 
நினைவுப் புரியவிழ்ந்து 
நயமான ரஸவோட்டம் 
நாடி உளம் கவ்வும் 
இன்ப நாடியிலே தேனொலிக்கும் 
மாடியிலே பெய்த மழை 
வெண்கொடுங்கை வழியாக விரைவது போல் 
ஆதியில் பெய்த அருள் வெள்ளச் சேதியில் 
சென்மாந்திரக் கணக்கெல்லாம் 
கரைந்து கருத்துருவாய் 
வாக்கின் கொடுங்கை வழி 
வாய்மொழியாய்க் கொட்டுங்கால் 
வந்த வழி போன வழி 
வரவிருக்கும் வாய்த்த வழி 
எல்லாம் ஒரு வழியாய் 
உருவெடுத்த மாயத்தில் 
ஒற்றைக் கண் திறக்கக் 
கற்றைக் கதிரின் வழி தெரிந்த காட்சியினில் 
பரணேறிப் பார்க்குங்கால் 
பாரெல்லாம் கவியுமருள் எழுந்து நிற்கும் 
விரிவான் பறந்து வரும் 
புள்ளெல்லாம் பரம்புனத்தில் 
கவிக்கதிரின் மணி கொறிக்கும் 
அரியாசனம் புதைந்த 
அம்பொற் பதுமைகள் இசைத்த பண்ணில் 
பரணில் வைத்த சொல் 
பரத்தில் இவர்வான் முனைந்து 
பூரணத்தில் மௌனமாகும். 

***

No comments:

Post a Comment