அப்பன் முதுகில் படுத்துத் தூங்கியதாய் நினைவு
தந்தையின் வேர்வை நாற்றம்
இன்று கூட என்னால் சொல்ல முடியும்
எழுந்து பார்த்தால் காலையில் மழைத் தண்ணீர்
மின்சாரக் கம்பம் சுற்றி மஞ்சள் குளம்
ஊற்றெடுத்த உவகை இன்னும் தித்திக்கிறது
உடலில் ஏதும் துணியின்றி
அம்மணமாய் அலைந்திருந்த வயது
இல்லை. அம்மணமே ஆடையாய் உடுத்திய நினைவு
கீழே ஆடுகின்ற ஆண்குறியும்
உடலாகத்தான் இருந்தது
வெட்கமும் விரசமும் அதைப் பிடித்துத் தொங்கவில்லை
பார்ப்பவர்கள் முகம் சுளித்துத்
தங்கள் ஆடையை மறைப்பதற்கு
வழி தெரியாது திணறினார்கள்
அவர்கள் அசிங்கத்தை மறைக்க
நாங்கள் டிராயர் போடவேண்டும் என்றார்கள்
என்ன இந்தப் பெரியவர்கள்!
எங்கள் தலைக்கு மேல் வளர்ந்துவிட்டும்
தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்!
தட்டாமாலைக்குத் தோழர் தோழியர் கூடிவிட்டனர்
எல்லாரும் ஒரே யூனிஃபார்ம்.
‘நாரமுண்டை! முண்டகட்டியா நிக்கறது!
இங்க வந்து இந்தக் கவுனை மாட்டிண்டு போயேன்!’
என்ன இவர்கள் பெரியவர்கள்?
எதற்கெடுத்தாலும் ’சொன்னாக் கேளு’
சொல்வதெல்லாம் திட்டு
நினைப்பதெல்லாம் அசிங்கம்
‘சரி வாடா! அந்தாத்துத் திண்ணைல விளையாடலாம்’
தட்டாமாலை தொடங்கி விட்டது
தொந்தரவாய் நிற்காதீர்கள் பெரியவர்களே!
***
No comments:
Post a Comment