பரிசுத்தனாய் இருந்தேன்
அண்டத்தின் ஆதி அன்று
இந்தப் பிறவியின் ஆதி
சிறகு அடிக்கடி விரிய
என் பாதங்கள் கீழே
வான் விரைந்து செல்லும்
சன்னலோரத்துச் சிறு மேடையில்
கதவில் சாய்ந்து நான்
சாயங்காலத்தின் இரசிகனாக
ந்டுப்பகலின் நாயகனாக
விடுமுறை நாட்களின்
இளங்காலை ஏந்தலாக
மாறும் பொழுதெல்லாம்
என்னிலிருந்து ஓர் களிப்புனல் கசியும்
வாழ்க்கையே இந்த வேக மகிழ்வின் விகசிப்பு
என்றிருந்த காலத்தில் ஒரு நாள்
அசிங்கம் என்ற அளவுமுள் துடிக்க
ஆண்குறியைத் தொட்டேன்
சமுதாயத்தின் மின்சாரம் தாக்கியது
தலையில் மின் தாக்கும்
ஓர் இன்பப் புயலை எழுப்பத்
தலையை நிமிர்ந்து பார்த்தால்
மாடிச் சுவருக்குப் பின்னிருந்து
பின்னல் சுவரின் மீது தொங்கியபடி
ஆசைக் கண்கள்
உண்ணும் பொருள் போல்
சுவை இல்லையெனினும்
ஊறும் இன்பத்தில் உலகம் சுருங்கியது
உலகம் மீண்டும் விரிவடைய
உடல் அடங்கி
உள்ளம் ஓடிப்போய்த் தனியே நின்று
கள்ளப் புலம்பல் தொடங்கியது
வானத்தின் விட்டம் இடிந்து விழுந்து
சிறகுகள் ஒடிந்து சக்திகள்
விழுந்த உத்திரத்தின் அடியில்
அழுந்திக் கிடந்தன
நடக்கக் கூடாதது நடந்துவிட்டதென
நரநரவென்று வெறுப்பு கொட்டியது
வழக்குத் தீர்ப்பதற்கு ஆற்றல்
ஆடி ஆடிச் சோர்ந்தது
கீழின் அடியாழத்தில் நான்
தப்பிச் செல்ல வழியின்றித்
தலையைத் தூக்கி உயர்த்தி எங்கும்
பரப்பாக வான் மேலே
பிராயச்சித்தமும் மிருதிகளும்
பாவமும் மன்னிப்பும் பரிதவிப்பும்
குற்ற உணர்வும் குமைச்சலும்
தன் கழிவிரங்கலும் உடைத்துக்கொண்டு
எங்கும் வழிந்து குட்டையாகிச்
சமுதாய உறுமலும்
அடக்குமுறைத் தவளைச் சத்தமும்
குழந்தை முட்டை பொரிந்து
மனிதன் எழுந்த பூகம்பம்
***
No comments:
Post a Comment