Friday, November 26, 2021

தியானக் கதிர்கள்

தொடரென்றீர் தோடுடைய பெம்மான் தொடர்ந்தால்
விடையேறித் தாமறையும் விந்தை - சடையேறிப்
பொங்கும் புனலாள் புனிதம் புவிவிரித்தாள்
கங்குல் குழலாள் அருள். 

ரமணப் பொழுதலர்ந்து போந்து நிரவும்
நிமலபோத நல்லிதயம் தானும் - அமர்ந்து
வலத்துறையும் என்றக்கால் வாலறிவன் நற்றாள்
புலமதுவாம் என்று பொருந்து. 

கனவின் பயனென்று காணாத கூறி
தினவெடுத்த நெஞ்சம் துவளப் -- புனமேய்
புனிற்றா எனவாக்கிப் புல்லிட்டால் போமோ
மனிதனில் மாயா குணம். 

விட்டு விடுதலை யாகிநிற்கும் வித்தையினை
பட்டுத்தான் கற்றல் பொருந்துமோ - சுட்டால்தான்
தீயென்றால் சுட்டும்பல் தீயெல்லாம் நீராமோ
காயாக் கதிரி லுணர். 

***

No comments:

Post a Comment