Sunday, November 21, 2021

குளத்தில் கதிர்

ஊருக்குத் தென்கோடிக் கீழைமுக்கில் 
தெருவோர மண்டபத்தின் எதிரே 
ஒற்றைச் சதுரமாய் அமைந்த தெப்பக் குளத்தில் 
தாமரை மலர்கள் நாணும் 
இலைகள் நீர்மேல் 
உருண்ட முத்துக்குள் 
ஒளிந்து வான் நோக்கும் 
பச்சைக் கரும் பாசிக் குளம் 
சாலையோரச் சுவரில் வெயிலுக்கஞ்சி 
எதிர்க்கரையில் நிழற்குளுமை 
ஒருக்களித்துப் படுத்திருக்கும் 
வெயிலுக்கும் குளிர்நீர்க்கும் 
விகிதமாய் அமிழ்ந்திருக்கும் 
எருமையின் மேலெலும்பு முருட்டில் 
சிற்றலகு தேய்த்துப் புன்சிறகைக் 
கோதிவிட்டுக் கொள்ளும் சிறுபுள் 
கூவக் குரல் கொடுக்கும் இணைப்புள் 
எங்கோ மரப்பச்சை மையத்திருட்டில் 
காகங்கள் கரைந்து கதிரவனை 
மேலேற்றும் உச்சிப் பொழுதில் 
குளத்தின் மறுகோடி மேற்கு படித்துறையில் 
மூன்று பெண்கள் அமர்ந்து 
முக்கால் கால்வழித்து 
மூழ்கியெழக் குனியுங்கால் கண்டதனால் 
மூண்ட சினமோ முகக் குறியோ 
முன்னவளும் பின்னவளும் தாமமிழ 
நடுவிருந்த பேதை 
நயம் காட்டி வாராயோ என்றதனால் 
கயம் படிந்த கதிரும் காலோய்ந்து 
போம் திசையில் புறப்பட்டேன் 
ஓமென்று ஒன்றும் பொருட்டு 

***

No comments:

Post a Comment