உலகத்தில் நியாயம் இருக்கிறதா
உண்மைக்குப் பொருள் உண்மைதானா
தீமையின் நாற்கால் சுற்றிச் சுற்றித்
தட்டாமாலை விளையாடும் தில்லுமுல்லுகள்
இடிந்து தலையில் விழாத வானம்
இவர்கள் தெம்பின் விளிம்பு
வானத்திற் கப்பால்
பேய்த்தேர்களின் பந்தய ஓட்டம்
மண்ணில் பொய் பவனி வருகிறது
வழி எங்கும் மண்டகப்படி
உபயதாரர்களின் நிரல் நெருக்கி வழிகிறது
சொர்க்க ஸ்ரீமானாய்த் துரியோதனன் சிரிக்கிறான்
குந்தி அவனுக்குப் பால்சோறு ஊட்டுகிறாள்
தருமனின் துடிதுடிப்பை
விளையாட்டு காட்டியபடி.
கடவுள் என்று சொன்னாலே
தீமைக்கேன் நமுட்டுச் சிரிப்பு
குப்பைக் கூளங்களாய் வாழ்க்கை
விடை எங்கோ இங்கேதான் விழுந்திருக்கிறது
பொறுமையாகத் தேட வேண்டும்
அழிவிற்கு ஏங்கிக்
கால நதிக்கரையில்
ஊடலில் சிணுங்கி நிற்கும்
உலகைத் துடைக்க
ருத்திரனின் சிங்காரம்
அழிவே உணவாய் அதையும்
கவர்ந்துண்ணும் உலகை..
நியாயங்கள் உலகத்தை
நிறுத்துகின்ற உட்சாரம்
நியாயத்தைக் கூறிட்டு
நடையாடும் பேய்கள் நட்டமிட்டால்
பாயாத தெய்வத்தில் பொருளென்ன
உணவாய் உருப்பலவாய்
விடத்தை விலை கூறி
விநியோகம் செய்யும்
குணக்கேட்டின் குமைச்சலில்
குவலயம் கொலையுண்ணப்
பணநாகம் போர்த்த
பிச்சனார்ப் பாழ்க்கூத்து
அன்றிங்கே போக்கேது?
புரைதீர்க்கும் நன்மையேது?
உயர்வை வெறுத்திங்கே
உலுத்தர்களின் உதடாட்டம்
பொய்யைப் பூச்சொரிந்து
புறப்பாடு செய்யுங்கால்
உய்யும் வகையேது
உருத்திரன் உமிழ் தீயல்லால்?
உலக உருண்டை
மேசை மீது உருள்கிறது
காலொடிய மேசை குனிந்து
பாழில் வாய் நனைத்த உலகக் கோளம்
தச்சு வேலை நிமிர்த்தத் தானெழுந்த
மேசை மீது மீண்டும் உருண்டது
முன்னுருண்ட உலகமாய்.
***
No comments:
Post a Comment