திட்டிச் சந்தை அடைத்தபடி
நகரவில்லை
கட்டை போட்டும் பயனில்லை
வடக்குத் தெருவும்
மேலைத் தெருவும்
திட்டிச் சந்தும்
பார்த்துக்கொண்டு
ஏதோ யோசனையில்
போட்டது போட்டபடி நிற்கிறது
முதலில் தொட்டுக் கொடுத்தது யார்?
கேள்வியை அமுக்கிப் பிடித்து
மோவாய்க் கட்டையில்
அழுத்தி வைத்தபடி
அம்மாமிக் கிழவிகளின்
அங்கலாய்ப்பும் அடங்கியது
யார் தொட்டால் தேர் நகரும்?
நீர் மோர்ப் பந்தலுக்குள்
நீண்டதொரு சர்ச்சை
தீண்டாதார் ஒருவருக்கு
வைணவர் என்பதற்காய்
இறுதிக் கடனிறுத்த
பெரியநம்பி வீட்டெதிரே
அக்காலம் இப்படித்தான்
அன்றொரு நாள் நின்றது காண்!
அத்துழாய் வைத்த சூளில்
பெரிய தேர் கட்டுண்டுப்
பெயராமல் நின்றது ஓய்!
பேசாமல் மெஷின் போட்டு
ஓட்டிச் சென்றுவிட்டால்
தொல்லையில்லை
ஓய்ந்து போய் வாழ்க்கையின்
ஓரத்தில் வந்து சேர்ந்து
ஊரைக் கெடுக்க வந்த
உபயோகப் பேச்சு.
காருக்கு வழிவிட்டுத்
தேரிழுத்தால் தேவலையாம்
தெருமுக்கில் தேரும் நிற்கிறது.
திசையெட்டும் கண்டிருந்தும்
அசையாமல் நிற்கிறது
கிராமங்கள் சக்கரத்தைச் சுற்றிவந்தும்
சூடங்கள் கொளுத்தி வைத்தும்
சாமி வந்தாடும்
கோவிந்தா கைகளினால்
தேங்காய் உடைத்து வைத்தும்
இருகையும் விட்டேனோ
திரௌபதியைப் போலே
என்றிறைந்து பட்டிக்காட்டுப்
பத்தினிமார் பதறியழ
வேப்பெண்ணை நாத்தம் விலகிவா
என்று சொல்லி
வண்ண ஒயிலார்கள் வரிசையாய்ச்
சாக்கடையின் ஓரத்தில் ஒதுங்கிச் செலத்
தம்வீட்டுத் தலைச்சன் திருமணம் போல்
தயிறும் நறுநெய்யும்
பருப்பும் மூட்டை நெல்லும்
பழத்தாறும்
பாலுக்குப் பசுவும் கன்றும்
அழுதுவரும் கைப்பிள்ளை
ஆளுக்கொரு தோளமர
மாலுக்கு வையமளந்த மணாளர்க்குச்
சேலையும் வேட்டியும் சேர்த்துவிட்டுத்
தெருவோரம் கடையோரம்
திட்டிச் சந்தோரமெல்லாம்
கோவில் நடையெங்கும்
கொள்ளிடத்து மணலெங்கும்
கல்யாண மண்டபத்தில் கூடியமர்ந்தது போல்
கொலுவிருக்கும் கொள்ளைப் பாசங்கள்
கூடி அழைத்து வந்தும்
கோயில் மணவாளர்
மாடத் தெருமுக்கில்
மாட்டிய தேர் நிற்கிறது.
தடுத்து நிற்கும் காரணத்தை
ஆய்வது போல்
முந்தைப் பரிதியவன்
மேலைத்திசை தான் குனிந்தான்
உதவிக்குக் கைவிளக்கு
சந்திரனும் ஏந்திவர
உள்ளிருக்கும் உத்தமனோ
ஒன்றும் சொல்லாமல்
ஒரு முறுவல் பூக்கின்றான்
தேர்முன்னே பாயும்பரி
கனைத்த சிரிப்பில்
கிளுகிளுத்து ஓர் ஆந்தை
கூடிச் சிரிக்கும் அந்தத்
தெருமுக்கில் அசையாமல்
தேரோ நிற்கிறது.
***
No comments:
Post a Comment