Thursday, November 11, 2021

கவிஞனைக் கவிஞனாய் இருக்க விடல்

கவிஞன் அவன் 
கவிஞனாய் இருக்க விடுங்கள் 
காட்டித் தந்த திருக்காட்சியில் 
கருத்தைப் பறி கொடுத்தீர் 
நன்று. அத்துடன் விட்டு விடுங்கள். 
ஏதோ பதில் நன்றி செய்வது போல் 
அவனைத் தூக்கிச் சென்றோடி 
உச்சாணிப் புரையில் உயர வைத்துவிட்டு 
உள்நடுங்கி 
உயிரின் குலைநடுங்கி 
உன்மத்தமாகி அவன் 
உங்களுக்குக் குரல் கொடுக்கக் 
கீழே கூடி நின்று 
கூப்பிய கையராய்க் கூவுகிறார் 
“மனிதன் அல்லை நீ 
மாதேவன் 
விண்ணின்று அவரோகணித்த விந்தை 
தரைபாவாத் தெய்வ நிழல் 
கரையேற்ற எங்களைக் 
கடவுளே அனுப்பி வைத்த 
கலங்கரை விளக்கம் 
கருணை கூர்” 
அந்தோ கவிஞனவன் பரிதாபம் 
ஆத்ம சுடர்ச்சுவாலைச் சூடுதணிந்து 
மண்ணின் மடமைக் கூதிர்க் குளிரெடுத்து 
உண்ணின்று உடற்றும் நடுக்கத்தில் 
மண்ணின்று மக்கள் மறையாரோ? 
விண்ணின்று ஒரு தேவன் 
விரைந்து வந்திட்டுக் 
கண்ணான மண்ணில் என்னைக் 
கிடத்தானோ கிண்ணகம் எடுத்தென்னுள் 
களிபாய மண்ணைத் தழுவி 
இடேனோ ஒரு முத்தம் 
என்றென்றே ஏங்கிக் கலங்கிடுவான் 
கலக்கம் நீக்கக் 
கொண்டு வாருங்கள் ஓர் ஏணி. 

***

No comments:

Post a Comment