நிழல்விழும் சாலை மீது
சக்கரங்கள் உருள நிழல் புரளும்
ஊர்திகள் புகை கக்கும்
மூச்சுமுட்டி நிழல்நிறம் புகைபிடிக்கும்
நிழலைக் கையோடு கூட்டிச் சென்றுவிடு
சென்று மரத்தின் கீழ்ப் புதைத்துவிடு
அன்றேல் நண்பகல் வரை காத்து நின்றால்
உச்சிப் பரிதி உன்னிழலைப்
பாதக் குவட்டில் தாலாட்டும்
உன்னிலும் பெரியதாய்
நீண்டு கிடக்கிறது நிழல்
நிழல் வாலன்று
உன் விருப்பம் போல் ஆட்ட
நீயே ஆட வேண்டும் அஃது அசைய
தானாய் வரும் உன் தாள் பணியும்
தன் போக்கில் நீளும் விரிவடையும்
தள்ளி வந்து நில்
நிழலின் தலை சாலையில் கிடக்கிறது
நாட்கணக்கில் காத்து நின்றவள்
நகர்ந்து வருகிறாள்
நகர்ந்து நகர்ந்து நிழலின் தலையால்
கன்னத்தில் குவி இதழில்
கொம்மை முலைக் குவட்டில்
மாறி மாறி இட்டால்
முத்தங்கள் நிழலாய் நீளாதோ
என ஓங்கி அடிபெயர்க்கு முன்
அவளே வந்தாள் நேர் நின்றாள்
அன்பின் நிழலாய்ப் புன்னகைத்தாள்
நிழலின் தலை இன்னும் சாலையில் நெருட
நிஜத்தின் தலை சுற்றச்
சேர்ந்தன நிழற்தலைகள் தம்முள்
சாலை நீங்கித் தனியாய்
நிழலின் நிழலில் நிழல்
***
No comments:
Post a Comment