கைகுவித்த கருடனார்
காலம் பலகண்ட தம் வேதச் சிறகைக்
காற்றில் உலர்த்திக் கொண்டிருக்க
என்ன சுவாமி! மறுபடியும்
அமுதம் கொண்டு வருவதற்கா?
என்றேனா என்றலும்
அடப்போய்யா! உப்புச் சாறு
யாருக்கு அது தேவை?
அன்றாடம் உத்தமனின்
அரவணைக்கு ஈடாமோ?
ஏதாவது கவி சொல்லும்
கேட்போம் என்றார்.
கடவுள் காதலிலே கசிந்தது போல்
ஊரார் ஒருவர்
ஒரு கம்பம் விடாமல்
எல்லாம் தொட்டுத் தொட்டு
ஓரத்து மூதேவி
ஒரு பக்கத் துர்க்கை
ஒரு கம்பத்து நரசிங்கம்
ஒரு சிலையில் ராமன்
ஓரங்கட்டிப் போட்டுவைத்த
வாகனங்கள் எல்லாம்
தொட்டுத் தொட்டுக் கும்பிட்டு
வணங்கிவரப் பின்வரும் கூட்டமோ
அதைப் பார்த்து அங்ஙனமே தாம் செய்ய
நிச்சிந்தைக் கூட்டத்தைக்
காவல் அதிகாரி விரட்டிவிட
ஒரு பக்கமாய் ஒதுங்கி
ஒன்றுமே அறியாதவர் போல்
உத்தம பக்தர் வர
ஒய்யாரமாய்ச் சிறகணித்த கருடனார்
ஓங்காரமாய்த் தியானத்தில் ஆழ்ந்துவிடப்
பார்த்திருந்த நான் பக்தரிடம்
ஏங்காணும் அப்படிச் செய்தீர்?
ஏனய்யா இந்த விளையாட்டு?
என்றேனா என்றலும்
அப்பாவியாய்ச் சிரித்து வந்தவரும் போனார்
வைனதேயரைப் பார்த்தால்
விரிசிறகு முற்றும் உலர்ந்ததென்றார்
உலகிற்கும் பக்திக்கும்
இடைப்பட்டு விழித்து நின்றேன்.
***
No comments:
Post a Comment