இரண்டிலொன்று முடிவு காண எழுந்து சென்றேன்
நள்ளிரவில் பந்தம் நட்டு
நடுவானப் புதுப் பந்தலிட்டு
நாச்சிமுத்தும் பேச்சிமுத்தும் கட்சியிட்டுத்
தங்கய்ய ஆசாரி தொடர்ந்து பாட
லாவணியின் விறுவிறுப்பில்
காளியே மலைத்துப் போய் வாய் திறக்க
ரவுண்டடித்து ரங்கன்மணி கம்பத்தில் கால் தூக்க
எரியாத மன்மதனார் ஏற்றி வைத்த விஷமத்தால்
புரியாத விழிப்பில் பூங்குறும்பு செய்தவளை
எரிந்த மன்மதனாய் எவர் கண்ணும் காணாது
நழுவி நகர்ந்து நடுகோபுரத்து உள்ளொடுங்கி
முக்கண் கனல் மூட்டி
முன்னுதட்டில் ரதி எரிய
முறுவலித்த சாம்பலிலே
மாகாளி கண் எரிய
எரிந்ததா இல்லையா
என்னாயிற்று என்று கேட்டு
எங்கோ ஊர்முக்கில் கழுதை கதறியழ
எக்கேடு கெட்டால் எனக்கென்ன
என்ற நாயூளை
நடுத்தெருவில் கட்டில் கிழத்திற்கு
நாராசமாய் ஒலிக்க
நடுங்கும் கைக்கல்லும் நாலிடத்தில் மோதி
வீட்டுக்கூரைத் தகரத்தில் பட்டுருளத்
திருடன் என்று திடுக்கிட்டுக் கத்தியதால்
திரண்ட கூட்டம் மாடியெல்லாம் தேடிப் பார்க்க
மாகாளிக் கோயில் மதிற்சுவரில் பூசாரி
முழுபாட்டில் அடித்து
முன்னணைத்த சுருட்டேற்றி
எரிகிறதா என்றிழுத்துப் பார்க்கத்
தெருவிளக்கு தேய்ந்து அணைந்தணைந்து
மன்மதனார் லாவணிக்கு
மறுபக்கம் ஆனதுவே.
***
No comments:
Post a Comment