Wednesday, November 10, 2021

கவிதை உள்ளம்

கவிதை உள்ளம் ஒரு காற்று 
எவ்விடத்தும் உட்புகுந்து வந்துவிடும் 
ஆனால் அவற்றையெல்லாம் 
சுமந்து வந்து நிற்காது 
கவிதை உள்ளம் ஓர் ஒளிப்பிழம்பு 
ஒற்றிப் படிந்த பொருள் துலக்கிப் 
பொன்றும் இருள் கடிந்து 
பொற்காட்சி விரிக்குமன்றிப் 
பொருளாய்த் தான் மாறிப் பொன்றாது 
கவிதை உள்ளம் ஒரு வான் 
அனைத்தும் அதில் அடங்கும் 
அனைத்திலும் அஃது இருக்கும் 
ஆனால் அஃது மற்றொன்றாய் ஆவதில்லை 
ஆகவும் முடியாது 
ஆனாலோ மற்றெதுவும் இருக்காது 
கவிதை ஒரு தீ 
திறலனைத்தும் திளைத்தெழும் ஆணிவேர் 
திரண்ட பொருள் வர்க்கத் திகழ்வுக்கு மூலவிசை 
தரணிக்கே உள்ளோட்டம் 
என்றாலும் 
தீயின் இயல்பு மாறிப் 
பருப்பொருளாய் ஆன கதை 
பாரில் புராணத்தில் பகுத்தறிவில் 
எங்கும் பயின்றதில்லை. 

***

No comments:

Post a Comment