Tuesday, March 1, 2016

ஜீவனின் நடை

ஜீவனின் நடை தொடர்கிறது உலகில். 
அதனுள்ளே உயிரூக்கம், அருளின் ஆதி சங்கேதம் இயங்கினாலும் 
அதன் சுயேச்சை என்பது அகங்காரத்தின் வழி பயின்று 
பல தடங்களில் சென்று 
காலடிகள் பொறியுண்டு வாடுகின்றன. 
உலகில் உலப்பிலா நேயம் இல்லை 
என்று அது உணரும் ஒவ்வொரு கணமும் 
அதன் கண்கள் தன் ஆதி புகலைத் தேடித் தவிக்கின்றன. 
பின் மறதி. பின் உயிர்ப்பு. மாறி மாறி நுகத்தடி ஆட்டம். 
இந்த ஆட்டத்தில் சோர்ந்து அருளுக்கு ஏங்கி 
இந்த உயிர் குடிப்பதோ இருளின் புன் மடிப் பால். 
யார் இருக்கின்றார்? யார் இறக்கின்றார்?
இவ்வாறு கேள்வி கேட்பது யார்? 
திக்கு, திசை, தான், எதுவும் தெரியாத 
இந்தத் தனிமைக்கே இந்த உயிரை விற்றவள் 
நிச்சயம் ஒரு பிச்சியாய்த் தான் இருக்க வேண்டும். 
தான் பெற்றதையே 
தானும் தன்னையும் அறியாத் தனிமைக்கே 
வேறு யார் விற்பார்? 
அந்த அளவிற்கு துச்சமாகிப் போனது 
எந்த விலை பெற்றிருக்கும்? 
வெறும் தவிட்டிற்கு அல்லாமல். 
எந்தப் பிச்சிக்கும் ஒரு நாள் கொஞ்சம் பித்து தெளியும் அன்றோ! 
அன்று எங்கு நான் உள்ளேன்? 
என் நான் செய்தேன்? 
எங்கு என் குழந்தை? 
என்று ஒரு கணமேனும் பிரமை கலைந்து 
பார்வை நெட்டுக்குத்த நிற்காதா? 
அன்று தன் அருள் எல்லாம் பொங்க 
அருளை வேட்பார் யாருமின்றி 
வெறிதே தன்னை நோகச் செய்யும் அருள் பெருக்கைத் 
தன் நோவு தீரத் தரையில் பாய்ச்சும் கோல் விழுக்காட்டில் 
அந்த அருள் என்னை உய்விக்கட்டும். 
அந்த சத்தி நிபாதம் ஆகிய அருள் வீழ்ச்சியில் 
ஒரு ஜீவனின் உயிர் தாகமானது தீரட்டும் 

***

Monday, February 29, 2016

வீடறுத்தல்

வீடறுக்கும் விட்டுணுவும்
வீடுபேறு தருவாரோ?
காடாடும் கபாலி
காட்டில் துணையாவாரோ?
சிவம்கிடத்தி ஆடு பவள்
பவம்கடத்தித் தருவாளோ?
மூவர் செய்தாலும்
மூவாமல் செய்வாரோ?
மூவாநிலைவிட்டே
மேவியதார்?
மேவியதெவண்?
மேவியதென்?
நாவியலாக் கந்தழியில்
மேவியதார்?
கூவியதார்?
கூறு.

***

பள்ளிக்கூடம்

பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் 
சந்தர்ப்பச் சூழ்நிலையினாலும், 
மனத்தில் உருவான மாச்சரியத்தாலும், 
ஆங்காரத்தாலும், அறிவு போலப் பேசி 
அறிவைக் கைவிட்டு ஆத்திரத்தின் வழியே போய்ப் 
பேசின பேச்சுகளைப் பார்க்கும் போது 
ஒன்று நமக்குத் தெரியவருகிறது.  
‘நாம் யார்?’ ’நம் நிலைமை என்ன?’ 
நாம் மிகவும் சரி என்று நினைத்தாலும் 
நம்மில் நாம் சமநிலை அடைந்தோமா 
இந்தப் படிப்பினைதான் நம் கண் முன் 
தெருட்டிக் கொண்டு நிற்கிறது. 
‘உன்னை நீ அறி’ என்ற டெல்ஃபி அசரீரி 
இன்னும் உரத்துத்தான் ஒலிக்கிறது. 
அது யாரையோ பார்த்து ஒலிக்கவில்லை. 
நம் ஒவ்வொருவரைப் பார்த்தும் 
இதை உணரும் நாள் 
நமக்கான பள்ளிக்கூடம் ஆரம்பம்.

*** 

டெலிபோன்

டெலிபோன் ஒலித்தது
எத்தனை எத்தனை மனிதர்
புதியர் என்ராலும்
தமது சொந்தங்கலையும் நம்பி
சொல்லா ரகசியம் அனைத்தும்
சொல்லத் துடிப்பார் தொடங்கி
முந்தி நான் முனைந்து
அவரை மரித்து
சாரி ராங் நம்பர் என்னும்வரை1

***

சீட்டுக்கட்டு

வாழ்க்கை ஒரு சீட்டுக்கட்டு விளையாட்டு 
கைநிறையச் சீட்டுகள் 
பார்க்கின்ற கைகளுடன் 
பழகுகின்ற கைகளுடன் 
கடந்து போகும் கைகளுடன் எல்லாம் 
விளையாடித் தீர வேண்டிய 
நிர்பந்த விளையாட்டு. 
எந்தச் சீட்டை இறக்குவது என்று 
நாம் தீர்மானிக்கும் முன்னரே 
நம்மைத் தீர்மானிக்க விடாமல் 
நம் தீர்மானத்தை ஒதுக்கியும் 
பக்கத்தில் தலையில் பின்னால் 
கையிடுக்களில் எல்லாம் தலை விட்டுக்கொண்டு 
நமக்குப் பதிலாகப் பிராக்ஸி ஆடுகின்றனர் 
பித்ருக்கள், பெற்றோர், மூத்தோர், முந்தையர் 
இதுவரை இருந்து மறைந்த அத்தனை பேரும் 
மொத்தக் குடியிருப்பு மண்டை ஓட்டிற்குள்! 
தோற்றால் நம் தலையில் போட்டு உடைக்க வேண்டியது 
ஜயித்தால் நாம் அவர்கள் காலில் விழ வேண்டியது! 
என்ன எழவு ஆட்டம் இது! 
என்னை ஆக்கிரமித்து ஊடுருவி 
ஒட்டுமொத்த ஆவிகளும் 
ரவுண்டுக்கு மேல் ரவுண்டு கட்டி ஆட 
ஒதுக்குப் புறமாய் ஓரத்தில் பலியாய் 
பிதுங்கிய விழியின் பாவைக்குள் நான்! 
எடுத்துக் கடாசித் தோற்றுவிட்டு 
உய்யலாலா ஆநந்தக் களிப்பு 
ஆடுதல்தான் தப்பிக்கும் வழியோ... 

***

கோளம்

ஒரு குகை.
குகை என்று சொல்ல முடியாது. 
கோளம். 
24 பொருட்களால் ஆனது. 
வெளியில் தொங்குகிறதா? 
கீழே விழுந்து கொண்டிருக்கிறதா? 
மேலே எங்கேயோ போகிறதா? 
தெரியவில்லை. 
வெளியில் ஏதாவது இருக்கிறதா? 
வெளி என்று ஏதாவது இருக்கிறதா? 
தெரியவில்லை. ஏனென்றால் 
காலம், தேசம், வர்த்தமானம் ஆகிய மூன்றும் 
இந்தக் கோளத்துக்குள்தான் தாங்கிகளாக இருக்கின்றன. 
கோளம் எல்லாப் பக்கத்திலும் மூடிக் கிடக்கிறது. 
கோளத்துக்கு வெளியில் யாரும் போனது இல்லை. 
போக வழியும் இல்லை. 
வெளியிலிருந்து யாரோ எந்தக் காலத்திலோ 
வந்து போனதாகவும், உள்ளிருப்பவர்கள் யாரோ 
எப்பவோ வெளியில் போய்த் தெரிந்து வந்ததாகவும் 
உள்ளே இருக்கிறவர்கள் சேதி சொல்லிக் கேட்பதுண்டு. 
இன்னிக்கும் பல பேர் வெளியில் போக முயல்வதும் உண்டு 
சில பேரை வெளியில் இருந்து வந்தவர்கள் என்று 
பலர் சொல்லிச் சுற்றி உட்கார்ந்து கேட்பதும் உண்டு. 
ஆனால் வெளியில் போகவும் வழியில்லை. 
உள்ளே வரவும் வழியில்லை. 
வந்ததாகப் போனதாகச் சொல்வதில் ஒரு திருப்தி
எங்கேயோ உடைத்து விட்டு வெளியில் இருந்து ஓர் ஒளி 
உள்ளே வந்ததாக அகல் விளக்கு ஏற்றிச் சுடரும். 
மூலைக்கு மூலை அப்படி ஒளி வந்த நினைவுக்கு 
அகல் விளக்குகள் எரிகின்றன. 
ஆனால் எல்லா அகல் விளக்குகளும் 
வெளிச்சம் தருவது என்னவோ 
கோளத்தின் உள்ளே இருக்கிற பிரதேசத்துக்குத்தான். 
கோளத்துக்கு வெளியில் என்று கேட்டால் .... 
இன்னும் பெரிதாகக் கோளம் போட்டுக் காட்டுகிறார்கள். 
என்ன வழி ....? 

***

ஸோலோன்! ...ஸோலோன்...!

யவன உலகத்தின் முனிவரர் எழுவரில் 
புவனமெங்கும் பொற்புகழ் கொண்டோன் 
அவனி வேந்தர் அன்புடன் ஏத்தும் 
நீதியாத்த நல் முனிவரன் ஸோலோன் 
லிதிய மன்னனாம் குரோஸனைக் கண்டான். 
மன்னவன் முனிவன் தம்மிடை மகிழ்ந்து 
அன்னவன் விடைகொண்டு ஏகிடும் போழ்தில் 
மன்னவன் கேட்பான், 

'ஐயனே! உலகில் 
என்னிலும் மகிழ்வோன் எவனேலும் உளனோ? 
என் நாடு எங்கணும் சுற்றி வந்துள்ளீர். 
நன்மை தீமை அறிந்தவர் நீரே.' 

'மன்னனே! சற்றுப் பொறுப்பது நன்று. 
மகிதலம் மீது 
இறுதிநாள் வந்து உற்றிடும் வரையில் 
எவரும் எதுவும் சொல்வதற்கில்லை.' 

'என்ன முனிவரே! எக்குறை கண்டீர்? 
தன்னிகரில்லாத் தனிப்பெரும் செல்வமும் 
முன்னிகர் நில்லா மகத்தான வீரமும், 
கன்னியர் போகமும், கருதுபல் சுகங்களும்,....' 

'இருப்பினும் பொறுப்பது இயல்புடைத்தாகும். 
தருக்குறும் கணம் அதும் கடைநாளாகும்.' 

'முனிவரே! முனிவரே ! 
நீதியின் நடையென்றும் தயக்குறும் தானோ ?' 

புன்முறுவலித்து அகன்றனன் புனிதன். 
இன்பத்தின் மடியில் புரண்டனன் வேந்தன். 
காலம் கடந்தது. 
கங்குல் கவிந்தது. 
கோலம் மாறிப் பகை 
எங்கும் சூழ்ந்தது. 
பாரசிக சாம்ராட் 
சைரஸ் வென்றதும் 
நாராசமாகக் கைதும் வந்தது. 
நயக்கும் இன்பத் தொட்டிலில் கிடந்தவன் 
நடுவெய்யில் தழலெரி 
நடுவண் கட்டுண்டு நின்றான். 
குரோஸ மன்னன் யோசனை யாழ்ந்தான். 
திடுமென ஸோலோன் நினைவுக்கு வரவே 
கடும்நிலை மறந்து குலுங்கிச் சிரித்தான். 
'ஸோலோன் ஸோலோன் ஸோலோன் 
ஸோலோன் ஸோலோன்' 
என்றவன் நகையொலி 
சைர சாம்ராட் காதினை அறுத்தது. 
'பகை மன்னன் நகைக்கக் காரணம் என்ன? 
புகலும் பெயரது என்ன அது என்ன?' 

கோபத்தில் துடித்தான் புதுவெற்றியாளன். 
தாபத்தில் சிரித்தான் பழம்நன்றியாளன். 
ஆபத்து என்று அமைச்சுகள் ஓடிச் 
சோபன முனிவரன் பெயரது என்றார். 
ஸோலோனை அறிந்த சைரஸ் வியந்தான். 
ஓலத்திற்குப் பதிலாய் உரைத்தவன் நினைவு 
காலனின் பிடியில் நிற்கும் கணத்தில் 
மேலோங்கக் காரணம் அறியத் துடித்தான். 

'யாரங்கே! அவிழ்த்துவிடு. 
அழைத்துவா அந்தப் புதிர்வேந்தை.' 
'குரோஸ மன்னா! கூறு என்ன சிரித்தாய்? 
நீதி முனிவன் பெயரினை விளித்தாய்? 
காரணம் கூறு. கடுஞ்சினம் விடுத்தேன். 
மாரண விதியினை நீக்கினேன் கூறு.' 

'பார்வேந்தனே! பண்டொரு காலை 
யார் என்னிலும் மிக்கார் மகிழ்வினில் என்றேன். 
பொறுத்திரு இறுதி நாள் வரையில். 
பெருமிதம் பின்னர் நீ அடையலாம். 
என்று புகன்று அகன்றனன் ஸோலோன். 
மறந்திருந்தேன் இதுநாள் வரையில். 
வெய்யிலும் கனலும் வாட்டும் கணத்தில் 
உய்வகை அறியா ஊழ்நகை போழ்தில் 
தெய்வக் கருணை தெளிந்தேன் மதியில். 
விதி விளையாட்டு விளங்கிடச் சிரிப்பாய்க் 
கதியினுக்கு அச்சம் கழன்றிட நின்றேன். 
நின் ஆணை எனை இங்கு மீட்டது என்றார்.' 

'இன்று நீ நாளை நான் 
என் கண்ணைத் திறந்தாய் குரோஸா ! 
என்றும் உன் நண்பன நான் 
நன்று எனக்குப் புரிந்தாய் குரோஸா ! 
அன்று உனக்குச் சொல்லிய முனிவன் 
எனக்கும் சேர்த்தே உரைத்தனன் போலும். 
நன்று நன்று நாமினி ஆள்வோம் 
சரிநிகர் சமனாய்க் குவலயம் இதனை.' 

'இல்லை மன்னா ! இல்லை. 
ஆட்சியும் மமதையும் 
இன்பத்துப் போதையும் 
இவ்வாழ்வின் வாதையும் 
அனைத்தும் என்னை 
இனிக் கவிய ஒண்ணாது. 
செல்வேன் தனியனாய். 
காடோ மேடோ கிடைத்தது ஊணாய் 
ஏடோ உரியோ உடுத்தது உடையாய். 
உடைந்த ஊழ் இனி ஒட்டுவதில்லை. 
உண்மை உரைத்தான். 
ஒருகோடி நன்றி. 
ஸோலோன் ஸோலோன் 
ஸோலோன் ஸோலோன்...' 

***

Sunday, February 28, 2016

மின்னரங்க நூற்றந்தாதி

( இது வெண்பா எழுதும் ஊக்கத்தில் தொற்றிக்கொண்ட ஒரு வேகம். திரு செல்வப் புவியரசு தம்முடைய கல்லூரிநாள் வெண்பா முயற்சியைப் பற்றி  எழுதியதைப் படித்த போது கடைசி வார்த்தை பார் என்பதைப் பார்த்ததும் அந்தச் சொல்லை வைத்தே தொடச்சியாக எழுதிப் பார்க்கும் ஊக்கம் அதனால் இரண்டு நாட்களில் இந்த மின்னரங்கத்தந்தாதி. வெண்பா நடையில் வைணவம் என்று இரண்டும் கலந்த உபயகவியாக எடுத்துவிட்டேன். இருந்தாலும் 2 நாட்களில் ஒரு நூற்றந்தாதியாக வெண்பா பாடமுடிந்தது ஓர் உவகைதான். ) 

1)
பாரளந்த செம்மல் பனிக்குமென் நெஞ்சத்தைக்
காரளந்த மேனிகொண்டு காவானேல் -- தேரளந்த
வீதியெலாம் சென்று வியன்விண் பெருமானார்
மேதினியில் ஊர்வேன் மடல். 

2)
மடலூர்ந்த நெஞ்சத்து மங்கையர்கோன் தாளை
விடலென்று மென்நெஞ்சே வாழ்வில் -- திடம்பொலிந்த
தாளிணையும் வேல்நுனியும் தண்டமிழும் கொண்டென்னை
ஆட்படுத்தி ஆளும் அரண். 

3)
அரணாகும் மாதவனே அன்பீனும் சேயாய்த்
தருணத்தில் தாங்கும் தயையாய்த் -- திரமே
எவர்காப்பும் என்செய்யும் நம்காப்பும் காப்போ
அவன்காக்கும் காப்பொன்றே காப்பு. 

4)
காப்பு மறந்ததுவும் கண்ணன் கழல்பாதம்
கூப்ப மறந்ததுவும் கையென்றால் -- தீப்போந்
தெரிக்க மறுப்பதுவும் நீர்தான் நனையா
திருக்க வடுப்பதுவும் காண். 

5)
காணார் உலகிதனைக் கண்டவர் தாமோரார்
கோணாகம் கால்மிதித்து நட்டான் குரக்கினத்தை
சேணாடு தந்துவணப் புள்ளுயர்த்திப் பாரித்தான்
கோணாத நெஞ்சுள் புரிந்து. 

6)
புரிந்த மலர்ப்பாதப் புண்ணியனே வேலை
திரிந்து திரைமோதும் மூதுலகம் தாளால்
வரிந்தே அளந்திட்ட சேவடியின் வண்ணம்
தெரிந்தென் உளந்தொட்ட தாள். 

7)
தாள்தடவும் விண்ணுலகும் தன்சோதி வைத்தவ்வூர்
ஆள்தேடிச் சூழ்தருமோர் கீழ்வரவும் -- மாளாத
காதல் மழையாகிக் கன்னிமையோர் பொன்பூக்கும்
போதம் அதுவே புகல். 

8)
புகல்வோம் புரிவோம் புரையறுநல் மூர்த்தி
அகலாது நெஞ்சத்துள் வைத்து -- மிகைவாழ்நாள்
தீர்ந்தும் அவனடிக்கே தொண்டுக் கடன்பூணப்
பேர்ந்தும் உகப்பே பயன். 

9)
பயனெண்ணிப் பாரில் பலவருத்த முற்றார்
செயலெண்ணிச் சோர்ந்தாராய்ச் சென்றார் -- அயன்விதியில்
இட்டதுவே கிட்டிவரும் என்னில் இறையடியே
இட்டமுடன் ஒன்றல் திறன். 

10)
திறனாக நீடெண்ணித் தீர்ந்த விதிக்கே
அறமாவ தேதென்னில் உய்வாம் -- மறவாமல்
மாதவனை மன்ன மனத்தி லிருத்துவதே
ஏதமிலாச் செய்கை யுணர். 

11)
உணர்ந்தும் உளமாழ்ந்தும் ஆருயிர் உண்ணும்
தணந்தும் தருவழிக்கே தாரம் -- மணந்தாலும்
விட்டுப் பிரியாத வீட்டின்பம் பாரித்துக்
கட்டிற்குள் காப்பே கதி. 

12)
கதியை நினைத்துக் கவலுறுதல் வேண்டா
மதிநலம் தந்திடும் மாயன் --- வதியுமிடம்
வைகுந்தம் வாழ்வு மவன்சித்த மாகும்காண்
வைகும் பணிகைங்கர் யம். 

13)
அம்மாநல் வீட்டின் அருமை உணர்ந்திட்டே
வெம்மாய மெல்லாமும் விட்டகல -- வேங்கடனைக்
கூவா திருந்தக்கால் கிள்ளாய்நங் கர்மத்தின்
ஓவாத கட்டு மிகும். 

14)
மிகுநரை இல்லாத மாதவன்தன் மாயம்
உகுநரை இல்லா வலித்தால் -- இகுநர்
இருவினைக் கட்டழிய ஈறிலா இன்பத்
திருமாலால் வீடு பெறும். 

15)
பெற்றும்தன் பேறிழந்தும் பார்முதலாம் புண்ணியமே
கற்கும்நற் கல்வியெலாம் என்றிருப்பர் -- புற்கலமாய்ப்
போந்த வழியெல்லாம் போதந்த மார்க்கமாய்ப்
பாந்தமாய் நிற்கும் பரம். 

16)
பரத்தில்சீர் மாலாகிப் பாம்பணையில் கேட்டுத்
தரையெங்கும் தானுவந்து வந்து -- திரமாக
ஊனுடலில் உள்ளொளியாய் நீடுலகம் உய்வதற்கே
மானுடத்தைச் சார்ந்த சுடர். 

17)
சுடர்கொள் விளக்கேற்றிச் சுந்தரனைக் காண
அடர்கொள் இருளென்னாம் அன்பில் -- திடர்கொள்ளும்
தேற்றத்தைத் தீங்கழலைத் தாமோ தரன்தன்னை
ஆற்றவினி தாமவன் பா. 

18)
பாவும் படுபொருளும் பார்முடிவும் பங்கயத்தோன்
தேவும் திசைவிண்ணும் எல்லாமும் -- கூவுகின்ற
கூப்பாடு கேட்குமிடம் கொண்டடையும் கைச்சரக்கே
ஆப்பவிழும் ஊழின் கடை. 

19)
கடைந்திட்ட வெண்ணையைக் கையகலம் கொண்டு
மிடைந்திட்டு மாலானார்க் கூந்தல் --- அடைந்திட்ட
ஆயனவன் கோவிந்தன் ஆவினத்தை மேய்த்திட்டான்
சேயனவன் என்னலுமோர் சொல். 

20)
சொல்கடந்து தாதைதன் சொல்கடவா பெற்றியினால்
கல்கடந்த ராக்கதனின் நீள்விதியை -- வில்கடந்த
தன்றே அரணியத் தொல்கடந்து தத்துவமாய்
நின்றதந்த நாயகன் பேர். 

21)
பேராப் பிறவி பெயர்க்கும் பெருமான்தன்
வேராம் அடியிணைகள் வித்தாம் -- அயராத
காதல் தொழும்பால் களிபாயும் தொண்டினில்
நோதல்தான் இல்லை நுகர். 

22)
நுகரும் திரிபுலன்கள் நேருற்று நன்மைப்
பகரும் பருமொழியால் பாத்தும் -- அகரத்தில்
காப்பதுவாய் ஆங்கவர்க்கே ஆனதுவாம் ஆன்மாவும்
மோப்பக் குறைவில் உலகு. 

23)
உலகு படைத்ததுவும் உள்ளொடுக்கி வைத்தோ
அலகில் விளையாட்டாம் என்பர் -- விலகாதே
ஈன்ற புகழ்ஞாலம் கன்றுகக்கும் தாய்ப்பசுபோல்
பூன்றநல் லாயன் தலை. 

24)
தலையாவார் மூவருளும் தானே ஒருவன்
கலையா துலகத்தின் கர்மம் --- சிலைகொண்டு
சிந்தினான் தென்னிலங்கைச் சீரும் சிதல்வாழ்வும்
மந்திபாய்த்  தோழமை உற்று. 

25)
உற்றபழி நீக்கி உருப்பிணியைக் கைப்பிடித்தான்
பற்றற்றார் உள்ளம் மகிழ்ந்திடவே --- முற்றும்
துறந்தவர்கள் பக்கம் திரமாகி நின்றான்
மறுத்தாலும் மாச்சொல் வலிது. 

26)
வலிதென்றே உள்வாங்கி வல்லரக்கன் வாழ்வைப்
பொலிந்துநின்ற எம்பெருமான் தொட்டான் -- கலிகன்றித்
தொட்டதமிழ் எங்கெங்கும் தோன்றிக் கிளர்ந்துநின்றே
இட்டமுடன் ஆளும்நங் கோ. 

27)
கோவாகி ஞாலமெலாம் காத்தளிக்கக் கானடைந்தான்
ஓவாமல் என்னுள்ளான் காக்குமவன் -- நாவாயில்
உண்டே உவந்துரைக்கப் பேருண்டே நாம்பின்னும்
கண்டுணர உண்டன்றே கண். 

28)
கண்ணாகி நின்று ககனம் புரந்தாலும்
எண்ணிற்கும் சேயரியன் என்னுள் அமர்ந்தானே
அண்ணிக்கும் ஊறும் அமுதாமன் பர்க்காளாய்ப்
பண்ணினான் என்னைப் பரன். 

29)
பரனடியே சென்றுவந்து பார்வண்ணம் கண்டால்
மரவடியின் மாபணயம் தானாம் -- திரமாக
வேதம் உரைப்பதெல்லாம் வேந்தன் நடைகாட்ட
நீதம் நெறியாகி நின்று. 

30)
நின்றென்னுள் என்றும் நிமலன் தனைக்காட்டான்
அன்றென்னுள் வீற்றதுவும் எவ்வாறு? -- கன்றாய்க்
குனிந்திட்டு நீர்சுவைத்தான் கல்லிதயன் என்னைக்
கனிந்துவந்து காவாத தென்? 

31)
தென்னன் பொருப்பில் திகழ்ந்த பசுந்தமிழை
மன்ன நிறுத்தினான் மாலுக்கே -- தன்பெருமைத்
தானும் அறிவரியான் தாமோ தரன்தாளில்
ஆனான் குருகூ ரரசு. 

32)
அரசுடன் செல்வமும் ஆட்படையும் கொண்டு
பரிந்த குலசே கரன்தன் -- மறமும்
உதிர்த்த இராமனும் ஊர்வந்த பொய்யே
கதிதந்த காப்பெமக் கிங்கு. 

33)
இங்குமங்கும் நின்ற இடைச்சுவரைத் தாம்தள்ளி
மங்காத ஞானம் இயல்வாகப் -- பொங்கோதம்
சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் ஒன்றாக்கும்
ஆழ்ந்த அருளே துணை. 

34)
துணையாவன் யாவன் நெடுமாலை அல்லால்
பிணைதந்து கேட்டாலும் போக்கார் -- அணைதந்து
மீட்டதோர் காதல் மறித்தும் இழக்குமோ
ஈட்டியகைக் கஞ்சன் பொருள். 

35)
பொருளாவ தெல்லாம் பிரமன்நற் தாதை
மருளாகும் மாயத்தை நீக்கி -- அருள்கொண்டு
பூமாதின் தொல்லடியார் நல்லெண்ணம் வித்தாகச்
சேமம் உடைத்திவ் வுயிர். 

36)
உயிரேநீ நல்லை உனைக்காத்துக் கொண்டாய்
அயர்க்கும் அலமந்தென் னெஞ்சம் -- பயிர்ப்பும்
எனைவிட்டே ஏகினதால் ஏதிலார் தம்மை
வினையென்னச் சூழுமிப் பொன். 

37)
பொன்தோய்க் குடுமிப் புகழ்மாறன் வெற்பிடையே
கன்னவிலும் தோள்கண்ணன் தாகம்தான் -- சென்னிக்குத்
தாக்கியதால் தன்னை இழந்தான் தளர்ந்திங்கே
ஊக்கியதும் நல்உலகின் ஊழ். 

38)
ஊழையும் உப்பக்கம் காண்பெரியர் உத்தமன்தன்
பாழைப் பயிர்செய்யும் பான்மைக்கே -- ஆழில்
உடல்கருவி ஊட்டுவினை உய்யும் நெறியாய்
மடலெடுக்க முந்திவரும் மாண்பு. 

39)
மாண்பெரிய வையம் மலிதிரைநீர் பௌவத்தின்
கோணரிய கொள்கைத்தாம் கோலத்தால் -- சேண்பெரிய
நாட்டினிலும் ஈர்ப்புடைத்தாம் இவ்வுலகம் நானிலத்தார்
கோட்பா டுணராரோ தேர்ந்து. 

40)
தேர்ந்திட்ட கொள்கையாய் மாலின் திருவடிக்கே
ஓர்ந்திட்ட நெஞ்சத்தார் ஆயினரே --- ஆர்ந்த
முனிவரரும் யோகிகளும் முன்னைப்பல் வேதம்
கனிந்தபயன் கேசவனென் றே. 

41)
ஏபாவம் எங்குற்றீர் எல்லோரும் என்னானீர்
ஆமாறும் யானறியேன் அன்னைக்கும் என்னானேன்
சேர்ப்பாரும் எங்கேயோ சேவகனும் வாரானால்
மாற்பால் மனச்சுழலில் யான். 

42)
யானேயோ ஓர்நெறிக்கே யத்தினமும் என்கடவேன்
கோனேயோ வேங்கடத்தில் காட்டுங்கை -- வானேர்
வரைமூங்கில் குட்டிக் குரக்காடும் ஆறோ
அரைசேர்த்த அங்கைகள் கூப்பு. 

43)
கூப்பிட்ட யானைக்கே புள்துரத்த வந்துநின்றால்
காப்பிடுமோ காதல் கயம்படுமோ -- ஓர்ப்பிலாய்!
வேர்த்தோடி நின்ற வினதைச் சிறுவனுக்கே
பேர்த்திங்கும் உள்ளதுவோ ஒப்பு. 

44)
ஒப்பாரில் லப்பன் உவமைக்கும் எட்டாதான்
எப்பாரும் உய்ய இவண்வந்தான் -- கப்பாகக்
கையில் குடையா மலையெடுத்தான் குன்றதுவே
எய்ப்பினில் வைப்பாம் நமக்கு. 

45)
நமக்கென்றும் நற்சேமம் நாரணன் பாதம்
உமக்கென்ன வேறுடையீர் கண்டீர் -- இமவானின்
பெண்தன்னில் பங்கானான் மார்க்கண்டர் கொண்டேகி
கண்ணாவான் காட்டே கரி. 

46)
கரிந்திட்ட பிள்ளைக்குக் காப்பும்தான் ஆனான்
எரிந்திட்ட பிள்ளையால் மீட்டான் -- பரிந்துவந்து
பார்த்தர்க்காய்த் தேர்கடவிப் பாருள்ளார் தாமுய்ய
வார்த்தை யளித்தான் கவி. 

47)
கவியானேன் காகுத்தன் காக்கும் திறத்தைப்
புவியெங்கும் போற்றுதற்குப் பூரித்தேன் என்று
சவியாது புள்ளின் பிரிவேக்கம் கொண்டான்
அவியுணவின் வானமரர் வாழ்வு. 

48)
வாழ்வா வதுமேது வாழ்ந்தார் பலரென்ப
வீழ்ந்தாரும் மீண்டார் எனல்மிகையே -- தாழ்வின்றித்
தாதையின் சொல்விடுத்துத் தன்னரசை எய்தென்ன
வேதம் நெறியுரைத்தான் விண்டு. 

49)
விண்டார் எனப்படுமோ வீங்கிள மூங்கிலொடு
தண்டார்நல் வேங்கடவன் தண்ணிலவம் -- அண்டர்தாம்
வந்த முறையீடு கேட்கைக்கே ஆம்நிலையம்
தந்தமுகம் கண்டும் தமர். 

50)
தமருகந்த தெவ்வுருவம் தானாம் உகப்பு
தமருகப்பர் தன்னுகப்பே என்னில் -- சமராம்
களத்தினிலும் தன்னுகப்பாய்ச் சாற்றினான் கீதை
அளப்பரிய தாமவன் ஏது. 

51)
ஏதுக்கிம் மானிடம் பாடிநிற்கும் நற்புலவீர்
வாதுக்காம் நற்பொருளென் வீணன்றோ -- சேதுக்காம்
கல்லும் குரக்கிடவே மண்குளித்த ஓரணிலம்
சொல்லும் பொருளொன்றே ஓர்ப்பு. 

52)
ஓர்ப்பரிய பெம்மான்தன் உள்ளம்கேள் பூங்குயிலே!
கார்ப்பணியத் தாலென் கலக்கங்கொல் -- ஏற்பரிய
குற்றமென் கூறாய் எனக்கேள் குணக்கடலை
நறறவம் தானவன்கைச் சார்வு. 

53)
சார்வே அவனடியார் செய்தவமும் தொண்டாகும்
நேர்வேதக் கூற்றவன்தன் சொல்லமுதம் --- போர்நாள்
பகையொழித்தான் பங்கயத்தான் நூலளித்தான் பத்தித்
தகைமையும் ஈதென்றான் தந்து. 

54)
தந்தம்தாம் கோடுதிரத் தான்முட்டும் கல்லிடையே
சொந்தம் எதுகண்டோ ஆனைப்போர் -- தன்னின்
உறவும் உயிர்நட்பும் ஆனான் அவன்நேர்
உறவில்லை உண்மை உரை. 

55)
உரைக்கத் தவம்செயினும் ஊழிக் குணங்கள்
பரக்கப் பிரமனும் சொல்லான் --- திரையில்
துளியெண்ணிச் சோராரும் சோர்வர் திருமால்
அளியெண்ணிச் செல்பி ரமர். 

56)
அமரர்க் கிடமாம் அரங்கனார்த் தீவம்
குமரர்க்காம் கோகுலமும் ஆகும் -- தமருக்கே
தஞ்சம் அதுவாகும் தாரணியில் வைகுந்தம்
கஞ்சனையே காய்ந்தான் கழல். 

57)
கழல வினையெல்லாம் கைகாட்டும் தாதை
அழலவிரும் நேமி அவன்கை -- மழலையே
தாயுகக்கும் வண்ணம் தமருகந்தான் தாளிணையே
போயிருக்கும் நம்மின் புகல். 

58)
புகலற் கரிதாம் பரமன் புகழை
அகல அரிதவன்நற் காப்பும் --- அகலிடத்தே
ஆராயற் பாற்றோ அவனன்பும் காரருளும்
வேராதல் கண்டும் இழப்பு. 

59)
இழந்தான் பிரமன் இடைச்சியும் பெற்றாள்
உழந்தான் தயரதனும் பெற்று -- முழந்தாளில்
கைவைத்தான் முன்வினைக் காடழித்தான் காட்டாமல்
நைவித்தான் நாளுமெனை இங்கு. 

60)
இங்குமற் றங்கும் இடர்பாய்ந்து நின்றதுகொல்
சங்கங்கள் தங்கும் திருக்குருகூர் -- மங்காத
வைந்நுதிய சக்கரநல் கையன் அருளொன்றே
வைநிதியாம் காரிமாறன் காப்பு. 

61)
காப்பும் பெரும்பேறும் கிட்டுவிக்கும் ஆறாகக்
கோப்புண்டான் தானேயாய்க் கண்ணனையே -- கூப்புங்கை
ஆறன்றே அன்பால் நமவென்னல் வாய்புலர்த்தல்
வீறுசரண் ஆறே அறிவு. 

62)
அறிவதுவும் ஆம்பொருளும் ஆன்றவறி வோனும்
செறியுமறி முப்படையாய்ச் சேரும் -- முறியாத
மூர்த்தியாய் மூவுலகும் ஆனான் முனைகழலே
சேர்த்திடும் சத்தாம் இயன்று. 

63)
இயன்றதே இவ்வுலகம் இன்மை இலதால்
பயின்றதுவும் அப்பரத்துப் பான்மை -- துயின்றதுவும்
யோகு தொலைந்ததுவும் கள்ளமே தன்மையே
யாகமெனல் யாரறிவார் சொல்? 

64)
சொல்லொன்றால் நின்று சகம்படைத்தான் சொற்பொருளான்
சொல்லேயாய்த் தன்னுருவும் ஆகிநின்றான் -- சொல்லால்
அகப்படான் சிந்தை இறந்தானேல் அன்பால்
அகப்பட்டுக் கொண்டான் தழும்பு. 

65)
தழும்பார்த்த தாம்பொன்றால் தாயும் தளைக்க
அழும்பார்க்கும் அஞ்சுமந் நோக்கும் -- தொழுங்காதல்
தொண்டர்க்கே கட்டுண்ணத் தொல்நோக்கில் ஆய்ச்சியவள்
அண்டர்கோன் கற்பித்தாள் அன்று. 

66)
அன்றே உலகம் அளந்ததுவோ அன்றெனிலோ
கன்றேதான் மேய்த்திடவே கற்றதுவோ -- நன்றாகத்
தேர்கடவும் பெம்மானார் தீர்ந்தார்நல் தொண்டிற்கே
யார்கடப்பார் கண்ணன்தாள் தொண்டு. 

67)
தொண்டிற்கே உள்ளம்தான் தீர்ந்தால் திவத்தினிலும்
அண்டர்க்கே அன்பாய் இருப்பர்கொல் -- கண்டார்க்கே
காதல் கடல்புரையக் கண்ணன் விளைவித்தான்
நோதல் தவிர்த்தான் பதம். 

68)
பதமும்நல் பாரிப்பும் பக்குவமும் பத்தர்
நிதமும் அவனாகம் செய்யும் -- சதமாகச்
சந்நிதியில் தாமிருக்க வேட்ட சடகோபன்
இந்நிலத்தில் மீண்டான் பரிந்து. 

69)
பரிந்து திருவும் அவனுள்ளம் மாற்றிப்
புரிந்ததுவும் பேருதவி யாகும் -- தெரிந்ததுவே
தேவர்கோன் தன்னிச்சை மிக்கோன் திருந்திவந்த
சீவனையே சீற்றம் கொளும். 

70)
கொள்ளக் குறைவிலனாம் என்றெண்ணும் தாதையே
தள்ளற்குக் கோபித்தால் தான்மகிழும் -- விள்ளற்
கரியதாம் விந்தை கமலைதாள் போற்றல்
உரியதாம் என்றும் உயிர்க்கு. 

71)
உயிரில் பயிர்செய்தான் உத்தமன்தாள் அன்பைச்
செயிரில்நற் பேறடைந்தார் சிச்சர் -- அயிர்க்கும்நீள்
கர்மத்தால் கட்டுண்ணாப் பெற்றி தருவானால்
மர்மத்தில் செய்வான் குரு. 

72)
குருநிலத்தில் கொண்டெடுத்து விட்டதேர்த் தட்டில்
உருவழிய விட்டான் பெருவில் -- பருமொழியால்
தேற்றி அவனாகம் பூண்டான் திரமாக
ஊற்றத்தில் ஊழியமாக் கொண்டு. 

73)
கொண்டைப்பூ சூட்டிப்பின் கோமகற்குத் தான்தந்தாள்
கெண்டையுண் கண்ணாள் புகழ்க்கோதை --- பண்டைச்சொல்
கேட்டுப்பின் பட்டர்கோன் தான்தந்தான் ஆண்டாளை
வேட்டதிரு மாலே விழைந்து. 

74)
விழையுமொரு நல்லிழையாள் நெஞ்சுள் மருகிக்
குழைந்தேதன் இன்னுயிரை நீத்தாள் -- அழையா
விருந்தாகிப் புல்லினான் ஆகம் ஒருத்தி
மருந்தாகா தென்னோ மறித்து. 

75)
மறித்திட்ட மைநாகம் மீண்டே அனுமான்
குறித்த இடம்தேடிக் கண்டான் -- நெறிகுழலாள்
உள்ளமறிந் துத்தமன்பேர் சொன்னான் உயிருக்கே
பள்ளமடை யாய்க்கை குவித்து. 

76)
குவித்தொன்றாய் மன்னர் குலமாளச் செய்தான்
புவித்தாயின் பாரம் குறைத்தான் -- செவிக்குறுதிச்
செஞ்சொல் தொடையீந்தான் ஆகம் சடகோபன்
மஞ்சமெனத் தான்துயிலும் வேந்து. 

77)
வேந்தர் விரைதேரின் பின்போனான் வில்லியும்
ஏந்திழையும் தம்பியுமே கண்டானாய் -- மாந்தர்
மயக்குற்றார் என்றார் மயக்கம் தெளிந்தான்
துயக்கற்றுத் தீர்ந்தான் முனி. 

78)
முனிவன்தான் முன்னவர்க்கே மூலத்தில் வந்து
கனிவார்நல் ஈட்டின்பம் கூறக் -- கனியாத
என்னுள்ளம் கொண்டானே என்றும் துறந்தாரும்
இன்பற் றதைக்கொள் பவர். 

79)
பவமும்செல் நாவாயும் பண்ணும் பரமன்
திவமும்தான் வேறொன்றைச் செய்யும் -- அவமே
எனைநோக்கின் ஓர்நரகம் எற்றுக்காம் தான்நோக்கின்
தன்னைப்பின் போதாமை வெள்கும். 

80)
வெள்கிப்போய் வீழ்ந்தாராம் வீரர் விரதிகளாய்
எள்கி நகர்ந்ததுவாம் வெற்றியுமே -- உள்குடைந்தும்
அள்ளிப் பிரிவதுவாம் சிற்றுயிரின் குற்றங்கள்
தெள்ளியபேர் கொண்டான் திறத்து. 

81)
திறம்பாது வையத்தைத் தன்னுள் இருத்தி
அறமாகி என்றும்தான் காத்தான் -- மறமாகி
வையம் துடைப்பான் அடிக்கே புகழ்மழிசை
உய்யும் வழியுரைத்தான் உற்று. 

82)
உற்று வினையிரண்டும் ஊட்டும்போ தெல்லாமும்
பற்று விடல்குறித்துப் பேசினான் -- சுற்றம்
எனக்கே சடகோபன் நற்றமிழ்நல் நட்பால்
மனக்கேதம் மாற்றினேன் நான். 

83)
நானோ தமிழ்செய்தேன் நாரணன்தொல் நல்லடியார்
ஏனோதான் என்பக்கம் நோக்கினார் -- வானோக்கி
நின்ற பயிர்தளிர்ப்ப நீடுபுகழ் மாறன்சொல்
நன்றே திகைப்பே தினி. 

84)
இனியறிந்தேன் என்னை இறைவர்க்காம் என்று
நனியறிந்தேன் என்நெஞ்சில் உண்மை -- மனிதர்க்காம்
மாநெறியாய் மன்னும் புகல்நெறியாய் வேதத்துத்
தூநெறியாய்த் தோன்றும் சுடர். 

85)
சுடரும்வை வேல்நுனியும் சுந்தரத் தோளும்
அடரும் இருள்கடியும் நோக்கும் -- விடலரிதே
வீட்டின் படிகட்டி வேதத் தமிழ்விரித்துக்
காட்டும் கலிகன்றித் தாள். 

86)
தாள்கொண்டே என்நெஞ்சில் பூட்டிப் பெருங்காதல்
ஆள்கொண்டும் என்னை அளிப்பானோ -- மாளாநோய்ப்
பீடிக்கும் மஞ்சம் கிடத்துமோ மானவேல்
நீடிக்கும் ஆலி நிகழ்த்து. 

87)
நிகழ்த்தும் மிசைநிற்கும் நிட்டையில் நீளும்
அகழ்த்தும் நெடிதுயிர்ப்பில் ஆகம் -- புகழ்மலியும்
காமர்ப் புகூர்த்தாதைப் பொற்கழலே காமம்தான்
சேமமாய்ப் பூண்ட சதம். 

88)
சதமகனார்க் கேள்விக்குச் சத்தியத்தில் வீழ்ந்தான்
சதமிதுவும் காட்டும் சமிக்கை -- நிதமிதுவே
தன்னொப்பாய் ஆக்கும் தனில்மிகுக்கும் தன்சேய்க்கே
என்னொப்பு தான்தருக்கும் தாய். 

89)
தாயாகி நின்று தமிழீந்தான் சேவடிக்கே
ஓயாமல் நாமியற்றும் கைங்கரியம் -- ஏய்ந்த
உடையவர்தம் கீர்த்தியினை உள்ளத்தில் வைத்தான்
அடையவளைத் தான்செம் பொருள். 

90)
பொருளென்று வாழ்வில் புகழாய் நிலைத்தான்
அருளென்றே இன்புறுநல் அன்பர் -- மருளகற்றி
மாணப் பெரும்பொருளே மன்னவைத் தானுளத்தில்
காணற் கரியதந்த ஈடு. 

91)
ஈடும் எடுப்புமில் எந்தையும் ஈன்றதாயும்
தேடும் பொருளுக்கே பூட்டாமல் -- நாடுங்கால்
நல்லனவே சீர்மைக்கு நன்மை குணம்நாடி
நில்லெனவே ஊக்கம் அருள். 

92)
அருள்மாரி பாணன் புகழ்மழிசை ஐயன்
குருகூர்ச்சேய் தேடுகவி நாடாள் பெருமாள்
திருமாலைத் தொண்டனுடன் பட்டனருள் கோதை
அருளோடும் யோகியரும் மூன்று. 

93)
மூன்றென்றும் மன்னும் பொருளாகும் முத்திக்கே
ஊன்றென்றும் உள்ளத்துக் காதல்தான் --ஈன்றவள்சேய்
ஊட்டும் இயலொத்திங் குண்மையை ஈந்திட்டான்
ஏட்டில்நம் லோகா ரியன். 

94)
இயன்ற வழியெல்லாம் நற்பொருளை ஏற்றுப்
பயிலும் உளத்தன்பின் வந்தோன் -- குயின்ற
பனுவல் குருகூரன் உள்ளத்தைப் பேணி
அனுதினமும் தந்தான் அமுது. 

95)
அமுதிலும் ஆற்ற இனிதாகும் ஆண்டாள்
சமுதாயப் பாவைக்கே சாற்றும் -- அமைந்த
உரையதற்கே உள்ளமெலாம் ஆழ்ந்திடுவர் சான்றோர்
புரையற்ற போதம் தெளிந்து. 

96)
தெளிவந்தும் தேராதும் நம்மாழ்வார் தாள்கள்
களித்தும் கலியொழித்தோம் கண்ணா -- விளித்தாலும்
கேளாய் வியன்ஞாலம் கூடித் திருவடிக்கே
ஆளாய்ச் சதிர்த்தாலும் என்? 

97)
என்னேநாம் பெற்றிட்டோம்? எண்ணில் வலத்தாராய்
இன்னேயாம் பெற்றுவந்தோம் தேசிகரை -- மன்னியிடும்
வேதத் தரும்பொருளை வித்தகமாம் நூற்கடலைப்
போதத்தீம் பாணன் உரை. 

98)
உரைகடந்த மாட்சி உளமெல்லாம் ஆண்டு
கரையில்சீர் மாமுனிவன் தன்மை -- நிறைகுணத்தான்
ஓங்குபுகழ் ஈட்டை உரைத்தான் அரங்கர்க்குத்
தாங்குமவன் தாளென் மனம். 

99)
மனத்தின்கண் நின்றகலான் மாட்சியிலும் முன்னோன்
எனைத்திங்கள் ஊழி உரைக்கில் -- அனைத்தேயாம்
ராமா னுசனென்று நாடுவார் நல்வாக்கே
ஓமென்ன லாகும் செவிக்கு. 

100)
செவிக்கினிய செஞ்சொல் சடகோபன் தாளைப்
புவிக்கினிதாய்ப் போற்றுவர் சான்றோர் -- கவிக்குக்
கதையுமதன் உட்பொருளும் கண்ணனே ஆவான்
சுதையுருவம் ஆகுமிப் பார். 

***

Saturday, February 27, 2016

பொன்மயல்

பெண்ணொளி பூத்த
பூவினை ஊதும்
புரிவண்டார்க்கும்
பொன்மயல் பிறந்தது
கண்ணா கண்மலராய்! 

எண்ணொளி இங்கிதம்
விண்ணொலி மீட்டிக்
கண்ணில் கனிந்தது
மண்ணில் விளைந்தது
உண்மை புலர்ந்தது
உத்தமனே! உன்
உளங்கனிவாய்! 

புள்ளொலி சிலம்பிட
உள்ளருள் விம்மிட
நள்ளிருள் ஒளிவிட
விள்ளுமுன் வியன்குழல்
கள்ளமொழித்தது
குள்ளக் குளிர்ந்திடு
கள்ளழகா! 

வாம்பரி இவர்ந்து வந்தனையே!
நோமுளத் துரிசு இரிந்தனையே! 
தள்ளுவன் உன்னைத்
தாவியணைப்பன்
ஆவியுள் குளிரும் நெருப்பாகிப்
பாவியென்னிதயப்
பராய்த் தவிசேறிப்
பாம்பணை யென்றே
யோகு புணர்ந்தாய்!
ஆம்பரிசுணர்ந்தேன்
ஓம்பறைந்தேன்
நாமெனும் உறவில்
நான் மறைந்தேன்

***

ஆத்மஞானம்

பெருகிவரும் காட்டாறு
அதை ஒவ்வொரு துளியையும் திருப்பி
வந்த திசை வழியே
சென்றடங்கி ஓய்ந்து தெளியும்
மனத்தின் கந்து அழி நிலையோ போலும்
ஆத்மஞானம் என்பது! 

அகண்ட நதி

ஆழநெடுங் கடலன்ன அகண்டநதி
அமேசான் பல்லாயிர காவதம் நீளும்
வற்றி உலர்ந்த காலத்தும்
படகுகள் போகும்
பன்னூறு காவதம் உள்ளும்
மழை பொழிந்து பனிமலை பொடிந்து
பெருகு வெள்ளம் விழைகான் பரப்போ
உருவினில் ஓர் சிறு கண்டமது ஒக்கும்.
வேட்டை அயர்ந்திடும் உயிர்தமை
வேட்டை அயர்ந்திடும் உயிர்தமை
வேட்டை அயர்ந்திடும் உயிராய்
ஆட்டையுருளும் காலம்
மீன்செதில் உருட்டி
மரக்கிளை உதிர்க்கும்
கனிபடு விதையில்
களிபடு மீனின் கடைவாய்க் குதப்பி
வெளிப்படுபவையோ
காலக்கரமாய் வான் தொடு
மரமென மீளும்
அமேசான்
காலத்தின்
உள்பாவாடையாய்க் கழட்டி
புதியது அணியும்
முதுமை அறியாக் கன்னியாய்
முதுநீர்ப் பௌவ முயக்கம். 

*

அந்தி

அந்தி
மேலைத் திசையெங்கும்
நீண்டு நிவந்து ஓங்கிப் பரந்த மலைத்தொடர்
பருவங்கள் பலவற்றை
ஒரே நேரத்தில் தொட்டிலாட்டும்
அங்கங்கே விண்முட்டும் சிகரங்கள்
பருவங்கள் கொடுமையாய்ச்
செங்குத்தாய் மாறும்
குறுகிய கால இடைப்போது
நடுநடுவே புவியடுப்பில்
சுட்டெரிக்கும் கொதிநீர்
ஓரடி எடுத்து வைத்தால்
அப்புறமோ உறைபனி
இரண்டின் இடைக்கோட்டில் நின்றே
உயிர்கள் தம்மைப் பேணும்
மயிரிழை, தப்படி, தடுக்கிவிழல்
ஒன்று கொதி மரணம்
அல்லது உறைமரணம்
ஆபத்தின் இடைகழியில்
ஜீவித ரேகை.
செல்லும் நதியும்
சமயத்தில் உறைந்து விடும்
துள்ளும் உணவும்
பனிக்கடியில் மறைந்துவிடும்
உணவுக்கேங்கி உறைபனி குத்தும்
புள்கூட பனிப்படுகை பொன்றிவிடும்
ஓடியதும் விரட்டியதும் ஒன்றாய்ச் சாகும்
வெப்பம் வந்து உருக்கியதும்
தேடி அவை சுவைக்கத்
தேடி வரும் விலங்கு
நோட்டம் இட்டு வரும் பூதக் கழுகு
காலம் இவற்றுக்குக்
கடிகாரம் திருகி வைக்கும்
ஓலமிட்டு என்ன பயன் என்றே
ஒன்றிற்கொன்று உணவாகி
ஒரு கால நதியில்
நுழைந்து வெளியாகி
உயிர் மரணம் என்ற இசை
உருவாகும்
இசை மீட்டும் ஒன்றும்
இசை கேட்கும் ஒன்றும்
இல்லை என்ற திரை விட்டுப்
பின்னால்
மெல்ல சிரிக்கின்ற மர்மம்
அல்லின் நாப்பண் புலனாகும். 

*

அமேசான்

அமேசான் அடர்ந்து ஆழ்ந்து கனத்த கானம்.
அடித்தடம் புரியாத ஆரண்யம்.
ஒரு கிளையில் பல உயிரினம், பல குடும்பம்
ஒரு மரமோ ஜீவராசிகளின் வகை உலகம்
ஊர்வன பறப்பன தாவுவன தொங்குவன தாண்டுவன
கூவுவன உறுமுவன காறுவன சீறுவன கத்துவன ஓலிடுவன
இன்னபல மருகும் வனப் பெருக்கம்.
பச்சைப் பசும் இலை பார்வைக்கு ரம்மியம் உண்டால் விடம்
விட இலை உண்டு வாழும் கட்டாயம்
விதை ஓட்டில் விடம்
கவனமாய் உடைத்துண்ணும் கிளிகள்
ஆயினும் அவற்றினுள் விடம் புகும்
’விடமுண்ட கண்டர்’ பலர்
விரைந்து நாடும் மருந்தாய்க்
குழைந்த களிமண் முறிக்கும்
அதிலும் ஒரோவகை தேடி உணல் வேண்டும்.
இலையெனில் விடமேறி வாழ்வு சாம்பிப் பொன்றும்.
எங்கும் பெருக்கம் ஒவ்வொன்றிலும் அபாயம்
விடமுறிவுக் களிமண் அசந்துண்ட மந்தியை
ரகசியப் புலி தாக்கும்
ஈன்ற குட்டியைப் புரக்கும் தாய்
தேடும் உணவின் வழியில் உயிர் துறக்கும்
முட்டை பொரித்தவை
பொரிப்பதற்குள் மற்றவை தின்றவை போக
எஞ்சியன பிழைக்கும்
அஞ்சி அஞ்சித்தான்
அக்கணம் ஒவ்வொன்றும் வாழ்வு ஊரும்
யோகம் பயின்று உடல் நிறுத்தி
மீண்டும் உயிர்க்கும் சில
ஒன்றின் வாய் தாண்டி ஒன்று தப்பும்
’வாய்மை’யில் விழுந்தவை மறக்கும்
உணவென்றும் கழிவென்றும் இல்லா
ஒரு பெரும் சுழற்சி
உயிர் ராட்டினம். 

*

அட்டகாமா

அட்டகாமா கடும்பாலை
விட்ட குறைக்கும் விழல் நீரும் இல்லை
தொட்ட குறைக்குக் குழி நீரும் இல்லை
மலை தொட்டுக் கடல் தொடும்
மரித்த பாலையில்
நிலப்பாழ் நீர்ப்பாழ்
நிலைப்பதுவும் ஊழ்
அங்கும் ஒரு ஜீவன்
மங்காமல் தொடரும்
காலை உருகி மாலை உறையும்
கடலோரம் சேர இரவெல்லாம் பயணம்
வீசிய பனிமூட்டம்
கவிந்த கரைத் தாவரத்தில்
இளங்காலை இளக்கும்
பனிச்சொட்டைக் குடித்து
உயிர் தக்க வைக்கும்
சூக்குமம் கற்றன ஜீவிக்கும்
நாளை காலையில்
நுனிப் பனி நீர் வீழும்
என நம்பிப் பகலெல்லாம்
இரைதேடும் மிருகம்.
மறைதேடும் ஒன்றங்கு
மறைவின்றித் தெரியும்;
திரைமோதும் கடல்
பனிமூடும் மாலை
கதிர் வெதுப்பும் காலை
உயிர் வாழ்வின் தவணை. 

*

செராதோ பாந்தனால்

நடந்து முடியா நிலப்பரப்பு
பறந்து முடியாச் சதுப்பு நிலம்
திரிந்து முடியாப் புல்விளைப் பைங்கால்
செராதோ பாந்தனால்
பெருநாடன்ன பரவிய சதுப்பில்
உருவாகும் உயிர்கள்
ஓராறு மாதம் கடுங்கோடையின் வறட்சி
மறுவாறு மாதம் பெயலின் மிரட்சி
நிலத்தின் மனத்தில் நெருடும்
உளவியல் பிளவன்ன பருவப் பிரிவினை
வறண்டு காய்ந்த புல் தரை
முதல்கார் மின்வீழ் வெப்பில்
பற்றித் தீ படர்ந்த அக்கினிக் கொடியும்
சுற்றும் காற்றினைக் குடித்துப்
பேயென நகரும்
நீர்மையற்று வாடிக் குவிந்த
சருகுத் தரைகள்
சத்தினை இழந்த தாவரம்
நொடித்த மரங்கள்
நொய்ந்த வளர்ச்சி
நெருப்புக் கொடியால்
நீவிய நிலப் பரப்பு
கரிக்கோடிட்டுச் சுழல் வளி ஆடும்.
புற்கள் காய்ந்து கலுழ்ந்த தரையும்
அரும்சுரம் அன்ன கடுங்கால் வீச
உரும் இடி உரப்பிற்கு ஏங்கும்;
ஒரு பெயல் மறு பெயல் தொடர் பெயல்
எங்கும் மீட்டுருவாக்கம்
பதுங்கிய உயிர்கள் பூக்கும்
ஒதுங்கிய உயிர்கள் உணவிற்கு அலையும்
மடிந்தவை மறுபிறப்பன்ன தொடர்ச்சியில் தழைக்கும்.
பரந்து அளந்த தீயின் கரிக்கால்
புற்றினுள் கரையான் புவிக்கீழ் வாழ்வைத்
தொடும்திறன் இழந்த நகையாய்ப் பொங்கிப்
புற்றென எழுந்து கோட்டையாய்ப் புல்நிலம்
புள்களின் வேட்டையாய்,
நோட்ட மாடமாய்
எறும்புணும் விலங்கின் இன்சுவைக் கூடமாய்
அரும்பிடும் காட்சி அளவிலதாகும்;
வெள்ளம் கொணரும் பல்வகை மீனினம்
விரிமுக முதலைகள் வாயினில் தப்பி
உயர்முக நீரினுள் ஒளிந்தவை பிழைக்கும்;
சதுப்பினில் அளைந்த பன்றிவகைகள்
குதுகலம் மிக்குக் கொள்ளை நீரில்
ஒயிலாய் நீஞ்சும் போதுதான்
மூர்க்கமாய் நீந்தும் மலைப்பாம்பு விழுங்கும்;
ஓராறு மாதத்தில் ஒரு யுகம்
எழுந்து முடியும்
அரையாண்டுப் பிரளயத்தில்
அனைத்துமே சுழலும். 

*

புது ஆண்டு

நஞ்சமர் கண்டன் காக்க
நெஞ்சத்தில் வஞ்சம் வைக்கும்
அஞ்சத்தகு நஞ்சைத் தாங்கும்
விஞ்சத்தகு திறனைச் சிறிதே
தஞ்சம்புகும் எற்கும் தந்தால்
எஞ்சும்நாள் கடக்கலாகும்
பிஞ்ஞகா! பிறையும் சூடும்
விஞ்ஞானம் தரினும் நன்றே. 

முத்தாண்ட மோன முறுவல் முகிழ்த்தே
பித்தாண்டும் என்னைப் பிரியாது நித்தியமாய்ச்
சித்தாண்ட சத்தாகும் சிந்திக்கச் சொல்லாகிப்
புத்தாண்டாய் வந்த பரம்.