யவன உலகத்தின் முனிவரர் எழுவரில்
புவனமெங்கும் பொற்புகழ் கொண்டோன்
அவனி வேந்தர் அன்புடன் ஏத்தும்
நீதியாத்த நல் முனிவரன் ஸோலோன்
லிதிய மன்னனாம் குரோஸனைக் கண்டான்.
மன்னவன் முனிவன் தம்மிடை மகிழ்ந்து
அன்னவன் விடைகொண்டு ஏகிடும் போழ்தில்
மன்னவன் கேட்பான்,
'ஐயனே! உலகில்
என்னிலும் மகிழ்வோன் எவனேலும் உளனோ?
என் நாடு எங்கணும் சுற்றி வந்துள்ளீர்.
நன்மை தீமை அறிந்தவர் நீரே.'
'மன்னனே! சற்றுப் பொறுப்பது நன்று.
மகிதலம் மீது
இறுதிநாள் வந்து உற்றிடும் வரையில்
எவரும் எதுவும் சொல்வதற்கில்லை.'
'என்ன முனிவரே! எக்குறை கண்டீர்?
தன்னிகரில்லாத் தனிப்பெரும் செல்வமும்
முன்னிகர் நில்லா மகத்தான வீரமும்,
கன்னியர் போகமும், கருதுபல் சுகங்களும்,....'
'இருப்பினும் பொறுப்பது இயல்புடைத்தாகும்.
தருக்குறும் கணம் அதும் கடைநாளாகும்.'
'முனிவரே! முனிவரே !
நீதியின் நடையென்றும் தயக்குறும் தானோ ?'
புன்முறுவலித்து அகன்றனன் புனிதன்.
இன்பத்தின் மடியில் புரண்டனன் வேந்தன்.
காலம் கடந்தது.
கங்குல் கவிந்தது.
கோலம் மாறிப் பகை
எங்கும் சூழ்ந்தது.
பாரசிக சாம்ராட்
சைரஸ் வென்றதும்
நாராசமாகக் கைதும் வந்தது.
நயக்கும் இன்பத் தொட்டிலில் கிடந்தவன்
நடுவெய்யில் தழலெரி
நடுவண் கட்டுண்டு நின்றான்.
குரோஸ மன்னன் யோசனை யாழ்ந்தான்.
திடுமென ஸோலோன் நினைவுக்கு வரவே
கடும்நிலை மறந்து குலுங்கிச் சிரித்தான்.
'ஸோலோன் ஸோலோன் ஸோலோன்
ஸோலோன் ஸோலோன்'
என்றவன் நகையொலி
சைர சாம்ராட் காதினை அறுத்தது.
'பகை மன்னன் நகைக்கக் காரணம் என்ன?
புகலும் பெயரது என்ன அது என்ன?'
கோபத்தில் துடித்தான் புதுவெற்றியாளன்.
தாபத்தில் சிரித்தான் பழம்நன்றியாளன்.
ஆபத்து என்று அமைச்சுகள் ஓடிச்
சோபன முனிவரன் பெயரது என்றார்.
ஸோலோனை அறிந்த சைரஸ் வியந்தான்.
ஓலத்திற்குப் பதிலாய் உரைத்தவன் நினைவு
காலனின் பிடியில் நிற்கும் கணத்தில்
மேலோங்கக் காரணம் அறியத் துடித்தான்.
'யாரங்கே! அவிழ்த்துவிடு.
அழைத்துவா அந்தப் புதிர்வேந்தை.'
'குரோஸ மன்னா! கூறு என்ன சிரித்தாய்?
நீதி முனிவன் பெயரினை விளித்தாய்?
காரணம் கூறு. கடுஞ்சினம் விடுத்தேன்.
மாரண விதியினை நீக்கினேன் கூறு.'
'பார்வேந்தனே! பண்டொரு காலை
யார் என்னிலும் மிக்கார் மகிழ்வினில் என்றேன்.
பொறுத்திரு இறுதி நாள் வரையில்.
பெருமிதம் பின்னர் நீ அடையலாம்.
என்று புகன்று அகன்றனன் ஸோலோன்.
மறந்திருந்தேன் இதுநாள் வரையில்.
வெய்யிலும் கனலும் வாட்டும் கணத்தில்
உய்வகை அறியா ஊழ்நகை போழ்தில்
தெய்வக் கருணை தெளிந்தேன் மதியில்.
விதி விளையாட்டு விளங்கிடச் சிரிப்பாய்க்
கதியினுக்கு அச்சம் கழன்றிட நின்றேன்.
நின் ஆணை எனை இங்கு மீட்டது என்றார்.'
'இன்று நீ நாளை நான்
என் கண்ணைத் திறந்தாய் குரோஸா !
என்றும் உன் நண்பன நான்
நன்று எனக்குப் புரிந்தாய் குரோஸா !
அன்று உனக்குச் சொல்லிய முனிவன்
எனக்கும் சேர்த்தே உரைத்தனன் போலும்.
நன்று நன்று நாமினி ஆள்வோம்
சரிநிகர் சமனாய்க் குவலயம் இதனை.'
'இல்லை மன்னா ! இல்லை.
ஆட்சியும் மமதையும்
இன்பத்துப் போதையும்
இவ்வாழ்வின் வாதையும்
அனைத்தும் என்னை
இனிக் கவிய ஒண்ணாது.
செல்வேன் தனியனாய்.
காடோ மேடோ கிடைத்தது ஊணாய்
ஏடோ உரியோ உடுத்தது உடையாய்.
உடைந்த ஊழ் இனி ஒட்டுவதில்லை.
உண்மை உரைத்தான்.
ஒருகோடி நன்றி.
ஸோலோன் ஸோலோன்
ஸோலோன் ஸோலோன்...'
***
No comments:
Post a Comment