யமுனையின் கரையில்
தெய்வ வெள்ளத்தில்
திவ்ய ஆற்றினில்
சிறிதும் இறங்கி நனையாத
ஓர் கிழவன் நான்;
இழந்தவன் ஆனேன்.
மயிற்பீலி கொண்டு
ஒரு சிறு பிள்ளை
மாடுகள் ஓட்டி வருவதும் உண்டு;
குறும்பன் அவன் என்று
எச்சரிக்கையாக நான்
இருந்ததும் உண்டு;
இழந்தேன் ஏ பாவம்!
கிருஷ்ணன் என்றே சொல்லுவார்கள்;
வண்ணம் வைத்து அழைப்பார் போலும்
என்றே இருந்தனன்,
என்னே என் மடமை!
‘ஊருக்கே நீ தெய்வமாடா?
உன்னைப் பலர் சொல்லுவதேன்?’
என்றொரு நாள் கேட்கையிலே
‘கன்று மேய்ப்பவன் என்னிடம் நீர்
கிண்டல் செய்வதோ சொல்லும் ஐயா?’
என்று நகைத்தவன் சென்று விட்டான்.
இன்றும் நகைக்கும் என் பேதைமையே.
தன் முன் இருந்தவன்
தெய்வமென்றே பின்னால்
தானுணரும் கொடுமை
தனிப்பட்டதோர் அவலம்.
அவன் பேசிய பேச்சினுக்கே
இன்று புதுப் பொருள் தெரிந்திடுதே.
அன்று உணர்ந்தேனோ
கன்று உணர்ந்ததைக் கூட நான்?
சென்று மணலினில் குன்று குகையினில்
கன்று காலிகளின் கால்கள் இடுக்கினில்
நின்ற மரக்கிளை நிவந்த கவட்டினில்
முந்தும் அலைகளின் ஆற்றின் நடுவினில்
எந்தப் பக்கமும் தேடித் தேடி நான்
வந்து வந்து நோக்கினும் பயனிலையே!
மந்த புத்தி என்னை நொந்தும் பயனில்லையே!
மாட்டிடையன் என்று அவன்
தோற்றம் அளித்தான்;
மாட்டின் குலம் என்று இன்று
தோற்றம் அளிப்பேன்.
அன்றவனைக் கண்ட போது
ஒன்றும் கண்டிலேன்;
இன்று காணும் நேரத்திலே
அவனைக் கண்டிலேன்;
நன்று நன்று போகட்டும் நான்
இழந்தவை கோடி;
சென்று வந்து போன கதை
எத்தனை கோடி!
என்றும் அவன் எனை வெறுக்கக்
காரணம் உண்டு;
என்று அவன் அடியிணைக்கே
சேர்வதும் உண்டு?
கோடிக் கோடி உயிரினமும்
கொள்ளைபெரும் கோடி.
ஓர் உயிர் நான்; என்னை அவன்
காண்பதுண்டோ நாடி?
பக்தர்களும் முனிவர்களும்
பன்னெடுங்கால் யோகிகளும்
என்னெடுங்கால் இயற்றுதவம்
இன்றுமுற்றும் தொடருமெனில்
என்னிலைதான் என்னெனவே
தன்னைப்போலத் தெரியாதோ?
ஆனாலும் ஒரு வருத்தம்
போனாலும் வந்தாலும்
போக்குவரவொழிந்தாலும்
நீக்கறியா கேள்வியொன்று
நிலைகுத்தி நிற்கிறது.
ஆகாத எல்லாம் ஆக்கும் பெருங்கடவுள்
போகாத எல்லாம் போக்கும் பரங்கடவுள்
சோகாக்க வைக்குமெந்தன்
சொந்த அறியாமைதனை
எந்த வழியாலும் நீக்கத்தான் அறியாதோ?
மந்த புத்திக் காரனுங்க!
மன்னிச்சிட வேணுமிங்க.
உலகமெல்லாம் படைக்கின்ற உத்தமனார்
கலகம் செய்யுமெந்தன்
கள்ள இருள் அஞ்ஞானம்
விள்ள அறியாமல்
விடைபெற்றுப் போனாரோ?
தள்ளிவிட்டுப் போனாலும்
தலைமைக்குப் பணிந்திடுவேன்;
எள்ளிவிட்டுப் போனாலும்
என் ஆண்டை என்று மகிழ்ந்திடுவேன்.
அள்ளிக்கொண்டு போவதற்கே
கொடுத்துத்தான் வைக்கவில்லை;
உள்ளத்தில் தனை உணர்த்த
உத்தமர்க்கு ஏன் முடியவில்லை?
உறைந்த பனியாகி
ஓங்குகின்ற மாயையெனில்
மறைந்து நின்ற மாதவனார்
சோதிக்கே சூடு பத்தாதோ?
அறைந்து வைத்த கர்மம் என்றால்
அதுதான் வலிது போலும்
அச்சுதரைக் காட்டிலுமே!
ஏதோ என்பங்காய்
எனைவிட்டுப் பிரியாத
பிரித்தாலும் பேராத
பெருத்த மாயைக்கே
தோழமையும் பூண்டு விட்டேன்;
எக்காளம் ஊதி
எதிர்ச்சங்கம் தானூதி
மிக்கபுகழ் அச்சுதனார்
மாஞாலம் புரக்கட்டும்;
ஓருயிரின் அஞ்ஞானம் ஊதத் தெரியாத
கார்மேக வண்ணனார்
ஊதி நிரப்பட்டும்
ஊரெங்கும் ஊதுகுழல்.
***
No comments:
Post a Comment