Friday, February 26, 2016

டீக்கடை

ஊருக்கு நடுவில் ஒரு டீக்கடை 
ஒரு சிங்கிள் டீக்குச் சொல்லிவிட்டு
உள்ளத்தின் ரேழியில் இறங்கினால் 
சென்று முடிந்ததோர் பாதை
சொல் சமுதாயச் சந்தையில்.
மார் கழித்த பனிக் குளிரில்
பீடிகையாய் விட்டபுகை
வெதுப்பேற்றும் விலாப்புறத்தில்
உயிரெழுத்தும், மெய்யெழுத்தும்
ஆயுதமும் அள்ளிப்போட்டு
அக உணர்வின் அடுப்பேற்றிப்
புகவியலா பொருட்குகையில்
புகுந்துவிட ஒரு குளிகை
புடம்போட்டு எடுத்துவிட
பொறுமை காத்தேன்; 
பொறுமையிலா மனமும்
பதமறியா நாவும்
பொருள் தெரியாச் சோர்வும்
என்ன இது புரியவில்லை 
நச்சினார்க்கினிய சிவன்
நகர்வலம் வந்தார் போலும்; 
அத்தனை ஒலிகளையும்
மொத்த எழுத்தோடு
அள்ளி அவர் உடுக்கினிலே
போட்டடைத்துச் சொருகிவிட்டுப்
புறப்பட்டு வந்துவிட்டேன். 
சொல்ல மாட்டானோ?
ஆறுகிறது.
இன்னொரு சிங்கிள் போடப்பா! 

***

No comments:

Post a Comment