Saturday, February 27, 2016

பாரதிச் சிந்தனை

பாரதிரப் போர்நடத்திப் பஞ்சைகளாய் மானிடவர்
வேரழியப் போவதற்கே வேகமுடன் வேந்தர்கள்
தாரணியில் செங்குருதி சிந்திச் சமர்செய்தார்;
காரணியும் வானம் கதியற்ற புல்லுயிரைத்
தான்சுமந்து தாளாது தண்கதிரும் வெப்போடி
ஏனிந்த மன்குலத்தில் இப்புன்மை எனவாடிக்
காக்கும் குரலொன்றைக் காலந் தொறுமனுப்பும்
நீக்கமறத் தானிறையும் நித்தியத்தின் ஒத்தடமாய்
வாக்கு வடிவாகி வையமிசை தான்பூப்பப்
போக்கு வரவற்ற பூரணத்தின் பொற்குடத்தில்
போந்த வொருதுளியாய்ப் பூக்கின்ற காதலிலே
மாந்தர்தம் வாழ்வு மரிக்காமல் மீட்டுயிர்க்கும்
சூக்குமத்தைச் சொல்லத்தான் சித்தரவர் தாம்போந்தார்!
ஊக்கத்தால் உள்ளத்தால் ஊனில் உயிர்வளர்த்தார்!
சாதிக்கு வேலிகட்டிக் கள்ளப் பயிர்வளர்ப்பார்
சூதில் பலியாகிச் சூரியனும் அயர்வானோ!
ஏதுக்கிம் மாயையென இன்னல் வெறுத்தவனும்
ஆதிப் பரத்தில் அடங்கித்தான் போவானோ!
ஆதலினால் காதல் புரியென்ற ஆண்டகையும்
பேதலித்துப் பெண்ணொடுவாண் பிணங்கும் மதிகேட்டைத்
தூதுரைத்துச் செல்வானோ துங்கமதி நுட்பத்தீர்!
வாதுக்குச் சொல்லாமல் வாய்மைக்குச் செப்புங்கால்
துய்ய உயிர்க்காதல் தீதறுநல் மார்க்கமென
உய்ய உலகிதற்கு ஓதிவைத்த மந்திரத்தைப்
பையவே தான்விளக்கும் பாடியத்தைக் கூறானோ!
ஐய!வே தாந்தம் அதற்கும்தான் செப்பானோ!
மாய உலகின் மயக்கறுக்கும் மாநெறிகள்
ஆயும் திறல்வல்லீர்! ஆன்றபொருள் கூறீரோ!
நேயமுடன் நின்மலனார் நீள்கழல்கள் தாம்பற்றித்
தேயமிதில் தோய்ந்து திடவாழ்வு நாமியற்ற
வாய்த்த வழியுரைத்த வள்ளல் கவியானான்
மாய்த்த மனப்புன்மை மீட்டெழுப்ப முந்தாமல்
பாரதத்தால் பாரதத்தைப் பாருயரத் தான்செலுத்தும்
பாரதியை வாழ விடல். 

***

No comments:

Post a Comment