Friday, February 26, 2016

நடு நிசி இதயம்

பூம்போதுகளில்
நடுநிசித் துயிலும்
பனித்துளி போன்று
உள் இதயம் நடுங்குகிறது;
வேகும் என் ஆவியினுள்ளும்
உன்னிதயப் பனிவாடை ஈர்கின்றது.
நெருப்பை விழுங்கும்
குளிர்வீசி நிற்கும் மாயம் எங்கு கற்றாய்?
தீயுண்ணும் பார்வையில்
நீ திரஸ்கரித்த பனிக்கடுமை
வாயுண்டுமிழ்ந்த என்னுயிர்
விரக்தியின் வெப்பத்தில் பிழைக்கிறது.
ஆதிகாலப் பந்தம் என்றால்
அந்தமிலா உறவாய் இருந்துவிட்டுப் போ
இல்லையெனில் அநாதையாய்
இயற்கை எற்றுண்ண எனை விற்றுப்போ.
தொல்லையற்றுக் கழியும் உன் நாட்கள்
தொலைவில் தொடர்பற்று என்னைத்
துண்டாக்கும் வாட்களாய்த் துருப்பிடிக்கும்;
உண்டாக்கும் வழியறியாக் காலம்
உடைத்து வந்த குடமுருட்டும் நீராய்க் கழியும்;
உன்மத்தம் ஆனாலும் உனை எண்ணா
மனம் மட்டும் தந்துவிட்டு
மாகாளியாய் வையம் புர!
சீக்காளியாய் ஒரு சீவன்
சிந்தும் உள்ளத்தின் ரத்தம்
உன் உலகு புரந்த தெப்பம் பவனிவர
ஊற்றுவரும் ஊர்க்கோடி தெப்பமாய் ஆகட்டும்;
காற்றாகி நின்றவளே!
ககன இருள் கூற்றாகி
என் குலை நடுங்கும் ஜீவனைக்
கொல்லாமல் வாட்டும்
குமிண்சிரிப்பாய் ஆனவளே!
ஆற்றுப் படித்துறையில்
அள்ளி எறிந்திட்ட மீனாய் ஆவி துடிக்குதடி!
எள்ளி நகையாடும்
ஏற்றப் பார்வை பயில
என்னுயிரோ உன்னரங்கம் ஆனதுவும்?
முன்னைப் பழமைக்கும் பழமையாய்
மூவா முதல்வி நீ!
பின்னைப் புதுமைக்கும் புதுமையாய்
என் உயிரின் கிழத்தி நீ!
வாலைக் குமரியாய்
வாழ்வு நதி செலுத்தும் நாவாய் வண்ணமயில்.
தீவாய் என் உயிர் உண்ணத்
திறல் பாய்ந்த கொங்கைப்
பூ வாய்ந்த மேனி பொற்பதத்துக்
கொவ்வைச் செவ்வாயில்
குதப்பும் தம்பலமாய்
எனை உமிழ்ந்துவிட்டுப் போ!
உனையன்றி நினையாத உள்ளத்தின்
புனைவுகளில் புதைத்து என் பொல்லாங்கின்
வினைவடித்த வேதனைகள் வாட்டுவதில்
அன்னை என்று உன்பேரை மட்டும் சொல்ல
அருள் செய்துவிட்டுப் போவாயேல் 
அனுதினமும் அன்பின்
கருமைக்குப் பெயர் காளியென்பேன்;
உரிமைக்கு வழக்காடும் உயிர் நானன்று. 

***

No comments:

Post a Comment