கடல் கடந்து வருகுது
கீர்வாண ஞானமெல்லாம்
அலையெறிந்து பொங்குது
போர்வான நாடுகளில்
பக்திப் புயல் அடிக்குது
சோர்வான உள்ளமெல்லாம்
ஸோஹம் என்று பாடுது
சொந்த நாட்டுச் சோதரரின்
சோகம் உள்ளே வாட்டுது
எந்தக் காட்டுள் போனாலும்
சிந்தாகுலம் ஆகுது
பந்தம் அறுத்துப் பற்றறுத்துப்
பார்சுற்றியாய் ஆனாலும்
பாரதத்தின் சொந்தம் மட்டும்
பாரமாகக் கனக்குது
கிழக்கின் கடலொன்று
கடல் கடந்து வருகுது
கீர்வாண ஞானமெல்லாம்
அலையெறிந்து பொங்குது
காளி கோவில் பூசாரி
கர்ப்பம் தரித்த கனவிது
காலமெல்லாம் தொட்டில் கட்டித்
தாலாட்டும் விதியிது
ஞாலமெங்கும் ஞானமாகிக்
கோலம் கொண்ட கொள்கையில்
சீலம் மிக்க தெய்வம் வந்து
சீர்படுத்தும் சதுரிது
மேலை நாட்டு மோகமும்
தெரிந்ததுபோல் மத வேகமும்
கூலமாகிப் பிரிவினையில்
மாச்சரியப் புன்யூகமும்
புலனுகர்வில் காமமும்
பொறாமையால் பெருங் கோபமும்
அன்றாடம் ஓடும் வாழ்வில்
அமைந்துவிட்ட லோபமும்
பொன்ற எழும் புலரியெனப்
புறப்பட்டு வரு தீரமும்
மன்பதைக்கு மனம் உருக
மடை திறந்த ஈரமும்
மனிதர் எல்லாம் நடைபயின்ற
கடவுள் என்ற தேற்றமும்
புனிதமாக்கப் பாமரத்தை
நட்ட வித்தின் விளைச்சலாய்க்
கனிந்த காலக் கடைக்கண் ஓடிக்
குவிந்த காதின் குழையொலி
சினுசினுங்க சீவனோங்கச்
சுருதியின் கீதம் பாடியே
கிழக்கின் கடலொன்று
கடல் கடந்து வருகுது
கீர்வாண ஞானமெல்லாம்
அலையெறிந்து பொங்குது
***
No comments:
Post a Comment