Friday, February 26, 2016

எம்மா கால்வே

(எம்மா கால்வே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ஆம் நூற்.இன்
தொடக்கத்திலும் யீரோப்பில் கொடிகட்டிப் பறந்த பாடகி. 

Sweetness and strength, high tragedy and mirth,
And but one Calve on the singing earth 

என்று Richard Watson Gilder கூறிய வார்த்தை கால்வேயின் புகழைச் சொல்லும்.
இந்த எம்மா கால்வே வாழ்வின் ஒரு கட்டத்தில் பல புயல், இடி, மழை என்று வாழ்வு பெரும் சிக்கலாக ஆக அமைதி தேடித் திரிந்த நிலையில்
சுவாமி விவேகாநந்தர் வந்திருக்கிறார் எனக் கேள்விப்பட்டு இங்கிலாந்தில், அவரைச் சென்று பார்க்கிறாள். தான் சொல்லும் முன்னரே தன் வாழ்வின் சகல பிரச்சனைகளையும் சொல்லி, அதன் கொடிய வலியிலிருந்து தன் மனத்தை இதமாகக் காத்துவிட்ட கருணையைக் கண்டு வியந்தாள்.)

காற்றினிலே வரும் கீதமாய்ப் பாடியவள்
கண்டம் தாண்டிப் பிறந்தாள்.
கானல்வரி பாடிய மாதவி கடவுளைக் காதலித்தாள்.
பாட்டின் இழை நாதத்துடன் ஒன்றிப்
பரவெளியில் ஏறும் லாகவம் கற்றாள்
ஏட்டில் எழுதா இலக்கியமாய்
இயன்ற வாழ்க்கை ஏந்திழையின்
துயின்ற போதையும் துயராக்கியது
பகைச் சுரங்களைப் பொருந்த விட்ட குரலில்
பல குறளிகள் உட்புகுந்து உள்ளத்தில் அலறின
நகைமுரணாய் வாழ்க்கை
நைல் நதியின் ஏற்றம் இறக்கம் ஆகியது.
தகைத்திடத் துடித்த மனத் திட்பம்
புகை உயிர்க்கும் நெஞ்சாய்ப் பொருமியது.
போந்தவிடமெங்கும் போழ்ந்த வெறுமை
தாழ்ந்த கணம் தேடி உள்ளே மண்டிய
பாழாய்க் குமிழ்த்துச் சிரித்தது.
வருத்தும் புற அழகு.
வானையும் வெறுக்கும் அகத்தின் குழகு.
ஏனைய பலரையும் போல் ஏதிலியாய் ஆனாலும்
எவரும் தன்னைப் போல் புகழின்
தனிமைக்குள் பேதையாய் ஆனதில்லை. 

சாந்தத்தைத் தேடிச் சலித்தாள்
சன்னிதானமெங்கும் காலியாக்கிச்
சென்றன தெய்வங்கள்.
தீர்க்கவியலாத் தீங்கின்
திறமூற்றி நெய்த திரையில்
நிழல் நாட்டியம் ஆடுவது
தெய்வமா தீமையா
என்று புரியாமல் சலித்த மனம்
கன்றிப்போய் நின்ற கணங்கள் நீண்டன;
காலுக்கும் உள்ளமுண்டு என்று நடை சலித்தது.
காலத்திற்கோ உள்ளமில்லை என்று விதி சிரித்தது;
ஏலத்தில் விட்ட சரக்காய்
எப்படியோ போகும் வாழ்வு
எடுத்தவர் யார் விட்டவர் யார்
என்றறியாப் போக்கில் இயன்ற திசையெல்லாம்; 
எங்கிருந்தோ வந்த குரல்
இங்கிதத்தின் இழை விளரி தாரமாய்க் கோத்தது;
சங்கத்தில் சயனமான புத்தன்
புலரியெழப் போந்த புது விடிவாய்ப்
பொன்னார் மேனியன்
புலித்தோலை அரைக்கசையப்
போதந்தான் என்ற போதப்பண் பாடியது;
புவிமாது புல்லரிக்கப்
புவிமீது வலம்வந்த
விக்கிரமத்தின் சாலோக்கியம்
வியப்பின் புல்லிதழாய்
விரியிமைகள் ஆக்கியது;
யாரந்த இந்து யதேச்சையான கேள்வி
வேர்விட்டுப் பிளந்த பாறைக்குள்
ஊழிப்பேரருவி ஊட்டும் என்ற உட்செய்தி
உள்ளம் கவர் கள்வத்தில்
உவக்கத் தலைக் கூடியது.
சென்றந்தச் சான்றோனின் சந்நிதியில்
ஸ்தம்பித்த சஞ்சலமாய் நிற்குங்கால்
எதிரில் அமர்ந்திருந்த மனிதன் எங்கே?
புதிராய்த் தான் கேள்வியுற்ற இந்து எங்கே?
யதியாய் வந்தவனும் எங்குற்றான்? ஈதென்ன?
வதியா விண்ணுலகம் வனைந்துற்று ஓருருவில்
விரியும் முக்கால வியன்கவாட மாயிற்றோ?
என்வாழ்வை யான் எடுத்து இயம்புமுன்னே
தன்நாவால் என் சரிதை தந்ததுவும் யாங்ஙனமோ?
மன்னவனோ? மனித உருவேற்று
வந்தமர்ந்த வானகமோ?
வானத்தின் ரேழி வழியாக நமைச் செலுத்தி
வாழ்வின் ஆழிக்கரையேறக்
கலம் செலுத்தித் தானேவந்த
கடவுள் எனும் மாலுமியோ?
காணாதவற்றின் கழிபேருவகை பூத்த குமிணகையோ?
கோணாமல் நெஞ்சவன்பால்
சென்றுமருவும் சத்தியமும் ஈதென்ன?
முனிபுங்கவமோ?
மும்மைசால் உலகுக்கெல்லாம்
மூலத்தின் சந்நிதியோ?
ஓலமிடும் உலகின் ஒரு கோடி துயரங்கள்
சென்றடங்கும் புல்லின் குழல்
கன்றடங்கக் கனிவாய் பரந்த தீஞ்சுவையோ?
என்றடங்கி உள்ளம் இயன்றாள் எம்மா கால்வே
நின்றவண்ணம் நோக்கி நேராக்கினான் நிலையை
அன்றறிந்தார் யாவர்?
அறிந்தாரில் புகன்றாரும் பலரில்லையால். 

***

No comments:

Post a Comment