Friday, February 26, 2016

நிலைக்கண்ணாடி

நான் போய்நின்றால்
எதிர்வீட்டில் யாராவது
வந்து நிற்பது வழக்கம்.
பல்லாண்டுகளுக்கு முன்
ஒரு சிறுபையன்
பிறந்த மேனிக்கு வந்து நிற்பான்;
என்னைப் பார்ப்பான்;
சிரிப்பான்;
சீண்டுவான், அழகு காட்டுவான்;
என்ன ஆயிற்று அந்தப் பிள்ளை?
பாலன், இளைஞன்
மனிதன் என்று
காலை பகல் இரவு
என்னாமல் எதிர்வீட்டில்
எனக்கு எதிர்வந்து
நின்ற அந்த நபர்கள்
என்ன ஆனார்கள்?
இப்பொழுதும் ஒருவர்
வந்து நிற்கிறார்.
யாரிவர்?
ஒரு நாள்
போய் நின்றால்
எவரும் வந்து நிற்கவில்லை
என்றால்
நான் நிற்பது நிஜமா?
அன்றேல்
எதிரில் வீடிருப்பது நிஜமா? 

***

No comments:

Post a Comment